Home Blog Page 6107

மனைவி மருந்து வாங்க 2 மாதக் குழந்தையை விற்ற தந்தை

மல்காங்கிரி ஒடிஸா மாநிலம், மல்காங்கிரி மாவட்டத்தில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவிக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால், 2 மாத ஆண் குழந்தையை தந்தை விற்றுள்ளார். இதனை குழந்தைகள் நலக் குழு சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்தக் குழுவின் மாவட்டத் தலைவர் சஞ்சுக்தா பிரதான் தெரிவித்தபோது, ஒடிஸா மாநிலம், சிட்டப்பள்ளியைச் சேர்ந்த சுக்ரா முதுலியின் மனைவி துமுசி முதுலி. சுக்ரா தன் 2 மாத ஆண் குழந்தையை சமூக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஊழியர் ஒருவரிடம் கடந்த பிப்ரவரி மாதம் விற்றதாக தகவல் கிடைத்ததையடுத்து இந்த விவகாரத்தில் குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் குமார் ரெட்டி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவர்களிட விசாரணை மேற்கொண்டபோது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் திட்டம் அல்லது இந்திரா அவாஸ் யோஜனா திட்டம் (வீடு வழங்கும் திட்டம்) உள்ளிட்ட அரசின் எந்தச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் மனைவிக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால், சமூக சுகாதார அமைப்பிடம் குழந்தையை விற்றதாக சுக்ரா முதலி கூறினார். இதற்காக இவருக்கு, அந்த ஊழியர் ரூ.700 பணமும், 50 கிலோ அரிசியும் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதுவரை அந்தக் குழந்தை, சமூக சுகாதார அமைப்பிடமே இருக்கும் என்றார் பிரதான்.

தங்கம் பவுனுக்கு ரூ.104 உயர்வு

gold சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயர்ந்து, சனிக்கிழமை ரூ.20,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் 2015 பிப்ரவரி 7-ஆம் தேதி வரை தங்கம் பவுன் ஒன்றுக்கு ரூ.21 ஆயிரம் என்ற அளவிலேயே விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்து, ரூ.20 ஆயிரத்துக்கும் கீழ் சரிவைக் கண்டது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றத்தால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கம், வெள்ளி விலையில் நிலையற்ற தன்மையே நீடிக்கிறது. இந்த மாற்றம், அட்சய திருதியை நெருங்கும் வரை தொடரும். அன்று கிராம் ஒன்றுக்கு ரூ.2,600 முதல் ரூ.2,700 வரை விலை உயரும் வாய்ப்புள்ளது என நகை வணிகர்கள் தெரிவித்தனர். சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கம் பவுனுக்கு ரூ.104-ம், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.35 உயர்ந்து காணப்பட்டது. சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்) ஒரு கிராம் தங்கம் 2,530 ஒரு பவுன் தங்கம் 20,240 ஒரு கிராம் வெள்ளி 39.70 ஒரு கிலோ வெள்ளி 37,085 வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்) ஒரு கிராம் தங்கம் 2,517 ஒரு பவுன் தங்கம் 20,136 ஒரு கிராம் வெள்ளி 39.60 ஒரு கிலோ வெள்ளி 37,050

நெல்லை மாவட்டத்தின் சில இடங்களில் மழை

சென்னை: நெல்லை மாவட்டத்தின் சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை மாலை மழைபெய்தது. மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்: சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 70 மி.மீ, கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 30 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடி, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 20 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்களைப் பொருத்தமட்டில் வறண்ட வானிலையே காணப்பட்டது. அடுத்த வரும் 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருச்சி, மதுரை, வேலூரில் 102 டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை, வேலூரில் அதிகபட்சமாக 102 டிகிரி ஃபாரன் ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. ஐந்து நகரங்களில் அதிகபட்சமாக சனிக்கிழமை நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது… தமிழகத்தில் அதிகபட்சமாக சனிக்கிழமையன்று 5 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. இவற்றில் திருச்சி, மதுரை, வேலூரில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயிலின் தாக்கம் காணப்பட்டது. அதற்கு அடுத்தப்படியாக, திருப்பத்தூர், கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. மற்ற மாவட்டங்களைப் பொருத்தமட்டில் பெரும்பாலும் 88 முதல் 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் நிலவியது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே 81, 93 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை பதிவான வெயில் அளவு (ஃபாரன்ஹீட்டில்) வேலூர் 102 மதுரை 102 திருச்சி 102 திருப்பத்தூர் 101 கரூர் பரமத்தி 101 சேலம் 99 தர்மபுரி 99 பாளையங்கோட்டை 99 கோவை 97 சென்னை 95

வேலூர் சிறையில் கைதி தற்கொலை: அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம்

வேலூர்: வேலூர் சிறையில், கைதி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அஜாக்கிரதையாக இருந்ததாக நான்கு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) கடந்த 2012ம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். நேற்று முன்தினம் சிறைக்குள் இருந்த மணிகண்டன் திடீரென காணாமல் போகவே, அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறை வளாகத்தில் இருந்த கிணற்றில் மணிகண்டனின் உடல் மிதப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அஜாக்கிரதையாக பணியாற்றியதாக துணை ஜெயிலர் காளிதாஸ், உதவி ஜெயிலர் சர்தார்பாஷா, முதன்மை தலைமை வார்டன் நீலகண்டன், தலைமை வார்டன் தங்கமுத்து ஆகிய 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று காலை மாஜிஸ்திரேட் வேலூர் மத்தியச் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மணிகண்டனின் உடல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சடலத்தை பெற்றுக் கொள்ள உறவினர்கள் யாரும் முன்வராததால் வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

பதவி உயர்வுக்கு லஞ்சம்: ரூ. 20 ஆயிரம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது

bribery-arrestசென்னை: சென்னையில் பதவி உயர்வுக்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். விருதுநகரைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் நெப்போலியன் (54). இவருக்கு பணி மூப்பு அடிப்படையில் வனவர் பதவிக்கு பதவி உயர்வு அளிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் பதவி உயர்வு அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், நெப்போலியன், சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் உள்ள தலைமை வனத்துறை அலுவலர் அலுவலத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார் அங்கு பதவி உயர்வு தொடர்பாக சட்டத்துறை அலுவலர் மருதப்பனை (57) சந்தித்துள்ளார். அப்போது மருதப்பன், பதவி உயர்வு அளிக்க ரூ. 1.25 லட்சம் லஞ்சம் தரும்படி நெப்போலியனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நெப்போலியன், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், நெப்போலியனிடம் வேதிப் பொருள் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தைக் கொடுத்து, அதை முன்பணமாக வழங்கும்படி கூறியுள்ளனர்.. இதையடுத்து நெப்போலியன், வெள்ளிக்கிழமை இரவு மருதப்பனிடம் அவரது அலுவலகத்தில் வைத்து ரூ. 20 ஆயிரத்தைக் கொடுக்க, அதை மருதப்பன் பெற்றபோது, போலீஸார் அவரைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் மருதப்பன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை தனியார் எண்ணெய் கிடங்கில் தீ

சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள தனியார் எண்ணெய் கிடங்கில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்து விரைந்து சென்று 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். கிடங்கின் அருகே இருந்த குடியிருப்புப் பகுதியில் இருந்து ஒரு குழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

“சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா?

“சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா? ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?..” சொன்னவர்-D.ஜானகிராமையா. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் நான் கோவில் பொறுப்பு ஏற்றபோது, (காமாக்ஷி கோவில் ஸ்ரீகார்யம்) வருமானமே இல்லை.உண்டியல் வைத்தால், ஸ்தானீகர்களுக்குப் பாதித் தொகை போயிடும்.அதனாலே,நித்யபூஜா தர்ம உண்டியல்-என்று வைத்தோம். வருஷத்துக்கு ஒரு தடவை உண்டியலைத் திறப்போம்.முப்பதாயிரம்,நாப்பதாயிரம் தான் இருக்கும். மளிகைக்கடை,பூக்கடைக்கு அப்போ தான் பாக்கிப் பணம் பட்டுவாடா செய்வோம். அதுவரை அவர்களும் பொறுமையா இருப்பா. ஒரு சமயம் பெரியவாகிட்ட, “கோவில் செலவுக்குப் பணம் போறல்லையே? நுழைவுக் கட்டணம் வைக்கட்டுமா?”ன்னு கேட்டேன். பெரியவாளுக்குக் கோபமான கோபம்! காசு தொடாத சந்யாஸி,அம்பாள் தரிசனத்துக்கு வந்தா,பணத்துக்கு எங்கே போவார்? “சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா? ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?.. நியாயமேயில்லை. ‘என்ட்ரன்ஸ் கட்டணம் வாங்கக் கூடாது’ என்று கண்டிப்பா சொல்லிட்டா. காமாக்ஷிக்கு லலிதா ஸஹஸ்ரநாம தங்கக் காசுமாலை இருக்கு. பெரியவா பண்ணிப் போட்டா. எப்படிப் பண்ணினா, தெரியுமோ? ஒரு விளம்பரம் கிடையாது. வாய் வார்த்தையா ஒவ்வொருத்தரா கேட்டுக் கேட்டே, பண்ணினா! “ஜானகிராமா, காசுமாலை ரொம்பக் கனமா இருக்குமே? காமாக்ஷிக்குத் தோளில் போட்டா, வலிக்கும் இல்லையா? அதனாலே, திருவாசியில் கொக்கிபோட்டு மாட்டும்படி ஏற்பாடு செய்..” சிலா மூர்த்தமாக இருந்து அருள்பாலிக்கும் காமாக்ஷிக்குக் கனக்கும்-என்று, பெரியவாளின் மிருதுவான உள்ளம் கவலைப்பட்டது. சாட்சாத் அம்பாளாகவே,மூர்த்தத்தைத் தரிசித்தவர் தானே,ஸ்ரீசரணர்கள். இதைக் கேளுங்கோ.இதே மாதிரி இன்னொரு சம்பவம்.11062732_966708246695949_3966038563901324568_n சின்னக் காஞ்சிபுரம் ஆனைக்கட்டித் தெரு மடத்தில் இருந்தபோது, பெரியவாளுக்குக் கனகாபிஷேகம் நடந்தது. அந்தத் தங்கத்தைக் கொண்டு, காமாக்ஷியின் தாமரைத் திருவடிகளுக்கு ஸ்வர்ண கவசம், மற்றும் ஆதிசங்கரர் மூர்த்தத்துக்குக் கவசம் செய்ய உத்திரவாயிற்று. பொதுவாக, தங்கக் கவசம் என்றால், செம்பினால் கவசம் அளவாகச் செய்து, அதன்மேல் தங்கரேக்குப் பதிப்பார்கள்- பக்தர்கள் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக. ஆனால்,மகா ஸ்வாமிகள் என்ன செய்தார்? “ஜானகிராமா,ஆசார்யாள் மேனியிலே ஸ்வர்ணம் படணும். அதனால் செப்புக் கவசத்துக்கு உட்புறத்திலேயும் தங்கரேக்கு பதிக்கச் சொல்லு. “ஆம் அத்தனை குருபக்தி! காமாக்ஷி கோவில் ஆதிசங்கரர் சிலாமூர்த்த ஸ்வர்ண கவசம்,பெரியவா உத்திரவுப்படியே தான் செய்யப்பட்டது.உள்ளும் புறமும் ஸ்வர்ணம்

கிரானைட் முறைகேடு விடியோ எடுத்த பார்த்தசாரதி மர்ம மரணத்தில் விசாரணை தேவை: மு.க.ஸ்டாலின்

சென்னை: கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையில் விடியோ படம் எடுத்த சகாயம் குழுவைச் சேர்ந்த பார்த்தசாரதி சாலைவிபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார், அது குறித்து உரிய விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் செய்தியைப் பகிருந்துள்ளார். அவரது முகநூல் அறிக்கையில், கிரானைட் முறைகேடு பற்றி விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான கமிட்டிக்கு “சட்டவிரோத கிரானைட் குவாரிகளை” வீடியோ படமெடுத்த பார்த்தசாரதி மர்மமான முறையில் கார் விபத்தில் இறந்திருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் கமிட்டி தன்னுடைய விசாரணையை துவங்கிய நாளில் இருந்தே பல்வேறு மிரட்டல்களை, அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. முதலில் சகாயம் அவர்களின் அலுவலகம் வேவு பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பிறகு, விசாரணையை தொடர்ந்து நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கே கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அடுத்து, சகாயம் விசாரணை செய்து கொண்டிருந்த பகுதியில் பயங்கர ஆயுதத்துடன் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னொரு முறை, சகாயம் கமிட்டிக்கு துணை புரிந்த தாசில்தார் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இப்போது விடியோ கிராப் செய்த பார்த்தசாரதி கார் விபத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்திருக்கிறார். சகாயம் கமிட்டியினருக்கு நடக்கும் ஆபத்தான செயல்களையும், அவர்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல்களையும் தடுக்காமலும், அவற்றை அடக்க நடவடிக்கை எடுக்காமலும் பினாமி முதலமைச்சர் தலைமையில் உள்ள இந்த அ.தி.மு.க. அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இந்த விசாரணையில் அக்கறை காட்டாத அ.தி.மு.க. அரசு, 16000 கோடி ரூபாய் கிரானைட் முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை காப்பாற்றவே முயற்சி செய்து கொண்டிருக்கிறது. கிரானைட் முறைகேடு பற்றி எவ்வித அச்சமின்றியும், யாருடைய அச்சுறுத்தலுக்கும் உட்படாத வகையிலும் உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சகாயம் தலைமையிலான குழு தன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அதற்கு சகாயம் மற்றும் அவரது குழுவினருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதே வேளை, பார்த்தசாரதியின் மரணம் குறித்து பாரபட்சமற்ற முறையில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். – என்று மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச சிறை வார்டன்களுக்கு தடை!

திருநெல்வேலி: நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச சிறை வார்டன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறையில் உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வார்டன்கள் பேச சிறை நிர்வாகம் திடீர் தடை விதித்து உள்ளது. அதன்படி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் நெருங்கி பேச வேண்டாம் என்று வார்டன்களுக்கு ரகசிய உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தேவையில்லாமல் ரோந்து சென்று அவரை கண்காணிக்க வேண்டாம் எனவும், அவருக்கு பொருட்கள் எதுவும் வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.