Home Blog Page 6113

நெல்லை மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 12ல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 12-ம்தேதி வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விபரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் – 2015 தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் 12.04.2015 அன்று சிறப்பு முகாம் அந்தந்த  பகுதிகளின் பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட படிவம் 6யையும்,  வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7ஐயும; தவறாக உள்ள விபரங்களை திருத்திட படிவம் 8ஐயும் மற்றும் முகவரி  மாற்றத்திற்கு படிவம் 8ஐயும் சமர்ப்பித்து பொதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆதார் அட்டை எண் சமர்ப்பிக்காத வாக்காளர்கள் அன்றைய தினம் மேற்படி முகாம் அலுவலரிடம் ஆதார் அட்டை எண் மற்றும் தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை எண்  ஆகியவற்றை கொடுக்கலாம்.

நெல்லை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு அலுவலர் அபுபக்கர்சித்திக் வெளியிட்டுள்ள செய்தி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர் உள்பட அனைத்து இன பதிவுதாரர்களும் விண்ணப்பிக்கலாம். 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதும் பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. தகுதி உடைய மனுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து உதவித்தொகைக்கான விண்ணப்பத்தைப் பெற்று மே 31ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோர், தொடர்ந்து அதனைப் பெற சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நீக்கப்பட்டதால் வருவாய்த் துறை சான்று தேவையில்லை. ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கிக் கணக்குப் புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த்துறை சான்று ஆகியவற்றுடன் மே 31ம்தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்கலாம். உதவித்தொகை பெறுவதன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு எண் எந்த விதத்திலும் பாதிக்காது. ரத்து செய்யப்பட மாட்டாது. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க அவசியமில்லை.

ஐ.டி.நிறுவன பஸ் மோதி 3 வயது சிறுவன் பலி

சென்னை: சென்னை மடிப்பாக்கம் அருகேயுள்ள கைவேலி பகுதியில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேருந்து ஒன்று மோதியதில் 3 வயது பள்ளிச் சிறுவன் உயிரிழந்தான். இந்த விபத்துக்குக் காரணமான பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முசிறி அருகே விபத்து: 3 பேர் பலி

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனத்தில் மோடி விபத்து ஏற்பட்டதில், 3 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் தேசியமங்கலம் அருகேயுள்ள வில்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 3 பேர், முசிறியில் கூலி வேலை செய்து விட்டு, இன்று அதிகாலை ஒரே இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பினர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை நடைபெற்ற இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த முசிறி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கரூர் அருகே சுங்கச்சாவடி முற்றுகை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 100பேர் கைது

தமிழகத்தில் ஏழை எளிய மக்களிடம் வழிப்பறி கொள்ளையடிக்கும் சுங்க சாவடிகளை கண்டித்து தமிழகத்தில் உள்ள 41 சுங்க சாவடிகள் முன்பு முற்றுகைப் போராட்டம்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று நடைபெறும் என  தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்திருந்தார். அதன் படி, தமிழகத்தில் மொத்தம் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும் 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன. முற்றுகை போராட்டத்தில் வாகன ஓட்டுனர்கள் , பொது மக்கள், வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், மணவாசி டேல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட சென்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலா சிறப்புரையாற்றினார். மேலும் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களை கொள்ளையடிக்கும் பொருட்டு சுங்கச் சாவடிகள் நடந்து கொண்டு வருகின்றன. ஆனால் அடிப்படை வசதிகள் ஆனால் சுங்கச்சாவடிகளில் ஏதும் இல்லை. ஆதலால் மத்திய அரசின் இந்த சட்ட விரோத கொள்கையை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். மேலும் ஆந்திர அரசு காட்டுமிராண்டித்தனமாக தமிழர்கள் 20 பேரை சுட்டுக் கொண்டதற்கு வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் உயிரிழந்த தமிழர்களுக்கு ஆந்திர அரசு தக்க நிவாரணம் வழாங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என மாநில மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலா தெரிவித்துக் கொண்டார்.10-04-15 Karur T.V.K Arpaattam News photo 01

ஒரே நாளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் 10 ஆயிரம் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்

சமூக வலைத்தள நிபுணர்களின் தொடர் கண்காணிப்பினாலும், டிவிட்டரில் அதிக பயன்பாடு இருந்த கணக்குகளைக் கண்காணித்ததிலும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் தொடர்புடைய 10 ஆயிரம் டிவிட்டர் சமூகக் கணக்குகள் ஒரே நாளில் முடக்கப்பட்டதாக டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், தங்கள் கணக்குகள் முடக்கப்பட்ட விவரத்தை அதன் பயனாளிகள் அடிக்கடி பரிமாறிக் கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் வெளியிட்ட ட்விட்டர் நிறுவன தொடர்பாளர் ஒருவர், கடந்த ஏப்.2ம் தேதி பயங்கரவாத அச்சுறுத்தல் செய்திகளைப் பகிர்ந்து கொண்ட கணக்குகள் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும் இன்னும் 90 ஆயிரம் கணக்குகள் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் தொடர்பில் உள்ளவர்களின் பெயர்களில் இயங்குகின்றனவாம்…

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுகொலை: வேலூரில் பேரணி சென்ற வைகோ உள்ளிட்ட 1000 பேர் கைது

ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசை கண்டித்து வேலூரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக ம.தி.மு.க., பொதுசெயலாளர் வைகோ அறிவித்திருந்தார். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய வைகோ ஆந்திரா அரசுக்கு எதிராக கொந்தளித்தார். இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் நடக்காத கொடூரமாக 20 அப்பாவி கூலித் தொழிலாளர்களான தமிழர்கள், ஆந்திர மாநிலக் காவல்துறையால் ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான கோரக் கொலைகள் ஆகும். அரை நிர்வாணமாக உடல்கள் கிடக்கின்ற இடத்தில், செம்மரக் காடுகளே இல்லை. வெட்டவெளியாக இருக்கின்றது. ஆனால், உடல்களுக்கு அருகில் நன்கு செதுக்கப்பட்ட பழைய செம்மரக் கட்டைகளைப் போட்டு வைத்து உள்ளனர். அவர்களை அடைத்து வைத்து இருந்த இடத்திலேயே சுட்டுக்கொன்று விட்டு, இந்தக் கோர நாடகத்தை நடத்தி உள்ளனர். இறந்தவர்களின் உடல்களில் தலை, நெற்றி, மார்பில்தான் குண்டுகள் பாய்ந்து உள்ளன. மிக அருகாமையில் இருந்துதான் சுட்டு இருக்கின்றார்கள். கூலி வேலைக்குச் சென்று கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் தங்கள் குடும்பங்களை வாழ வைக்கும் இந்த ஏழைத் தமிழர்களைப் படுகொலை செய்த, காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பணி இடை நீக்கம் செய்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது, ஆந்திர அரசாங்கத்தின் தலையாய கடமை ஆகும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல்துறை நடத்திய படுகொலையை ஆந்திர அரசு நியாயப்படுத்த முனைவது மனித உரிமைகளை நசுக்குகின்ற அக்கிரமம் ஆகும். எனவே, ஆந்திர மாநில அரசைக் கண்டித்தும், இப்படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கக் கோரியும், நீதியை நிலைநாட்டுவதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நேரடி நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து அவர் தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக கூறிய வைகோவை, வேலூர் காந்திசிலை அருகே போலீசார் கைது செய்தனர். அவருடன் ஆயிரக்கணக்கான மதிமுகவினரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே வைகோவிற்கு திடீர் சோர்வு ஏற்பட்டது. இதனையடுத்து மதிமுக மருத்துவர் மாசிலாமணி வைகோவை பரிசோதனை செய்தார். வெயில் காரணமாக வைகோவின் உடல்நிலையில் சிறிது சோர்வு ஏற்பட்டதாக வைகோ தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் வேனில் ஏற்றி அழைத்துச்செல்லப்பட்டனர். 10-04-15 Vai.Ko photo 04 10-04-15 Vai.Ko photo 03 10-04-15 Vai.Ko photo 02 10-04-15 Vai.Ko photo 01

காதலன் கொலை; கள்ளக்காதலில் அக்கா கணவருடன் கைகோத்த கல்லூரி மாணவி கைது!

சென்னை: காதலனைக் கொலை செய்ய கள்ளக் காதலில் ஈடுபட்ட அக்காள் கணவருடன் கைகோத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன்(19) கடந்த 3 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து சோமங்கலம் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், கமலக்கண்ணன் கொலை செய்யப்படுவதற்கு முன் நண்பர்களுடன் பேசியுள்ளார். அப்போது, ‘காதலி ரேணுகா என்னை அழைத்துள்ளார், அவளைப் பார்க்கச் செல்கிறேன்’ என்று கூறி இருக்கிறார். போலீசார், கமலக் கண்ணன் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அடிக்கடி ரேணுகா தேவிக்கு பேசியது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் ரேணுகாதேவியைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரேணுகா தேவி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கொலைக்கான காரணத்தை தெரிவித்தார். அவர் அளித்த வாக்குமூலம்: ”நான் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2 ஆம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு தாய், தந்தை இல்லை. உறவினர் வீட்டிலேயே தங்கிப் படித்து வருகிறேன். நானும், கமலக்கண்ணனும் பள்ளிப் படிப்பை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அனாதை விடுதியில் தங்கி படித்தோம். அப்போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசி வந்தோம். இது விடுதியில் தெரிந்ததால், உடனே எங்களை விடுதியில் இருந்து நீக்கி விட்டனர். அதன்பின் சொந்த ஊருக்கு வந்தோம். இருவரும், அவரவர் உறவினர் வீட்டில் தங்கினோம். நேரில் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் கமலக்கண்ணனுடன் செல்போனில் பேசிவந்தோம். அப்போது திருமணமான எனது பெரியம்மா மகளின் கணவர் மணிகண்டனுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அதுவே எங்களுக்குள் காதலாக மாறியது. நாங்கள், குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்தோம். ஆனால், கமலக்கண்ணன் எனது செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினார். ஒரு கட்டத்தில் நேரில் பார்க்க வேண்டும் என்று என்னிடம் தொந்தரவு செய்தார். அதனால், எனக்கும் கமலக்கண்ணனுக்கும் இடையே இருந்த காதல் விவகாரத்தைக் கூறி, கலக்கண்ணன் என்னை தொந்தரவு செய்வதாக மணிகண்டனிடம் சொன்னேன். அதனால்அவர், நம் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கமலக்கண்ணனை தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று கூறினார். நானும் சரி என்றேன். எனவே கமலக்கண்ணனை செல்போனில் பேசி அமரம்பேடு ஏரிக்கரைக்கு வருமாறு கூறினேன். அவரும் வருவதாகச் சொன்னார். ஆனால் நான் ஏரிக்கரைக்குச் செல்லவில்லை. இதை, மணிகண்டனிடம் நான் கூறியதும் உடனே அவர் தனது கூட்டாளிகளுடன் அங்கே சென்று மறைவிடத்தில் காத்திருந்திருக்கிறார். அந்த நேரம், கமலக்கண்ணன் ஏரிக்கரைக்கு வந்து என்னைத் தேடி இருக்கிறார். அப்போது, அவரை மணிகண்டனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்திருக்கின்றனர். அவரை கொலை செய்த விவரத்தை மணிகண்டன் என்னிடம் கூறினார்.” என்று கூறியுள்ளார் இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சம்பளமா முக்கியம்? ஹன்சிகா அதிரடி!

hansika54கவர்ச்சியாக நடிப்பதற்கு எந்த தடையும் போடாததால் தற்போது கோலிவுட் அதிக படம் வைத்துள்ள நடிகைகளில் ஹன்சிகாவும் இடம் பிடித்துள்ளார்.

இவரின் சம்பளம் சுமார் ஒரு கோடி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பள விஷயத்தில் ஹன்சிகா தலையிடுவதே இல்லையாம். இதைப்பற்றி கேட்டால், எனக்கு பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமல்ல. பணத்தின் மீது நான் அதிகமாக ஆசைப்படுவதும் கிடையாது.

என்னுடைய சம்பளம் எவ்வளவு என்று கவலைப்பட்டதே கிடையாது. பணம் எனக்கு பெரிய விஷயமே கிடையாது. அதனால்தான் நான் மகிழ்ச்சியா இருக்கிறேன் என்றார்.

போலி என்கவுன்டர் என்றால் உரிய நடவடிக்கை: சந்திரபாபு நாயுடு பதில் கடிதம்

  ஹைதராபாத்: அது போலி என்கவுன்டர் என்று தெரியவந்தால், நடவடிக்கை நிச்சயம் என்று சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி வனப் பகுதியில் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதில் கடிதம் எழுதியுள்ளார். சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கால்துறையினர் நடத்தியது போலி என்கவுன்டர் என்பது இதில் தெரியவந்தால், அது குறித்து நீதி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.