பாலகிருஷ்ணா, த்ரிஷா, ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். பாடல் சி.டி.யை சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து த்ரிஷா பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் த்ரிஷா கலந்து கொண்டதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– 20 தமிழர்களை ஆந்திர போலீசார் குரூரமாக கொன்று குவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு நிலவுகிறது. ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை கண்டித்து போராட்டங்கள் நடக்கின்றன. மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொலையுண்ட தமிழர்களின் ரத்த கறை காயும் முன்பே சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பட விழாவில் த்ரிஷா கலந்து கொண்டு அவருடன் சிரித்து பேசியது தமிழர்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது. த்ரிஷா இந்த விழாவை புறக்கணித்து இருக்க வேண்டும். குறிப்பாக தமிழர்கள் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை நடிகைகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நடிகைகள் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாய் காரில் அடிபட்டு காயம்பட்டு கிடந்ததற்கே கவலைப்பட்டு துடித்து போன த்ரிஷா 20 தமிழர்களை கொன்றவர்களுடன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
த்ரிஷா இனி தமிழ் படங்களில் நடிக்க கூடாது: இந்து மக்கள் கட்சி கண்டனம்
ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரிச்சி பெனட் காலமானார்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிறந்த லெக் ஸ்பின்னரும் பெயர்பெற்ற வர்ணனையாளருமான ரிச்சி பெனட், சிட்னியில் காலமானார். அவருக்கு வயது 84. சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெனட், 2013-ம் ஆண்டு கார் விபத்தில் பாதிக்கப்பட்டார். இதனால் அவருடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சிறந்த லெக் ஸ்பின்னரும் அதிரடி பேட்ஸ்மேனுமான பெனட், 248 டெஸ்ட் விக்கெட்டு சாய்த்தவர். அவர் கேப்டனாக இருந்தபோது ஆஸி. அணி ஒரு டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை. மொத்தம் 63 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1964-ல் ஓய்வு பெற்றார். கிரிக்கெட் விளையாடி வந்த காலத்திலேயே பெனட் பிபிசிக்கு வர்ணனையாளராகவும் இருந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின் முழுநேர வர்ணனையாளர் ஆனார். சேனல் 9 கிரிக்கெட் ஒளிபரப்பை பலரும் விரும்ப பெனடின் வர்ணனையும் ஒரு காரணம்.
ரஞ்சியில் கூட ஸ்பாட் பிக்ஸிங்?: ராஜஸ்தான் வீரர் அதிர்ச்சி தகவல்
புது தில்லி: கடந்த மாதம் நடைபெற்ற ரஞ்சி போட்டியின் போது தன்னை ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுமாறு ஒருவர் தெரிவித்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஒருவர் தகவல் வெளியிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலை உறுதிப்படுத்திய பிசிசிஐ செயலர் அனுராக் தாகூர், தனது டிவிட்டர் பதிவில், ஸ்பாட் பிக்ஸ்சிங் தொடர்பாக வீரரிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர் பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவில் இது குறித்து தகவல் அளித்துவிட்டார். பிசிசிஐயின் கொள்கைகள் சாதகமான விளைவுகளைக் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்தத் தகவலைத் தெரிவித்த மும்பையைச் சேர்ந்த அந்த வீரரின் பெயரை தாகூர் வெளியிடவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பையைச் சேர்ந்த அஜிங்யா ரஹானே, பிரவீண் தாம்பே, தினேஷ் சாலுங்கே, தவால் குல்கர்னி , அபிஷேக் நாயர் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர்.
இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு
இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் வகையில் மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு மற்றும் உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில், அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான இலவச பயண அட்டைகள் வழங்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. வரும் ஆண்டில் பள்ளி தொடங்கிய உடன் இலவச பயண அட்டை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகளின் விவரம் அனைத்தும் கணிப்பொறியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.கடந்தாண்டு வரையில் மாணவ, மாணவிகள் இலவச பயண அட்டைகள் பெற அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை கிளை அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து புகைப்படங்களை ஒட்டி தலைமையாசிரியர்களிடம் அளித்தும் வந்தனர். அதையடுத்து, நேரடியாக போக்குவரத்து அலுவலகத்தில் அளித்து இலவச பயண அட்டை பெறப்பட்டு வழங்கி வந்தனர். இதுபோன்ற காரணங்களால் மாணவ, மாணவிகள் பயண அட்டை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தடுக்க பள்ளி தொடங்கியவுடன் விரைவாக அளிக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் பெயர், முகவரி உள்ளிட்ட முழு விவரங்களுடன் இடைப்பட்ட தூரமும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட இருக்கிறது. மேலும், கணிப்பொறி ஆசிரியர் பதிவு செய்வதை உடனே தலைமை ஆசிரியர் சரிபார்த்து பள்ளி மேலாண்மை தகவல் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு அனைத்து விவரங்களையும் தொகுத்து அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனை அலுவலகங்களுக்கு அனுப்பி இலவச பயண அட்டைகள் பெற பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயகாந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
புது தில்லி: ஞானபீட விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஜெயகாந்தனின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரது மறைவால் தமிழ் இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பு நல்கிய ஒரு படைப்புலக மேதையை நாம் இழந்து விட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி வழக்கு: நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
ஆக்ரா: தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறைச் செயலர், தொல்பொருள் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை தேஜோ மகாலயா என்ற சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி ஹரிசங்கர் ஜெயின் என்பவர் தலைமையில் 6 வழக்குரைஞர்கள் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில்… 1212-ம் ஆண்டு ராஜா பரமர்தி தேவ் என்பவர்தான் தேஜோ மஹாலயாவைக் கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான் சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப் பின் அதை ராஜா ஜெய் சிங் நிர்வகித்தார். 1632-ம் ஆண்டு ஷாஜகான் இதைக் கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவுச் சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டடங்களில் மாற்றம் செய்யப்பட்டது. எனவே இதனை தேஜோ மஹாலயா என்று அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, இது குறித்து வரும் மே 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறைச் செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையில் தண்ணீர் லாரி மோதி குடும்பமே பலி
சென்னை: தண்ணீர் லாரி மோதி குடும்பத்துடன் ஒரே பைக்கில் சென்ற 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே லாரி சாலையில் நின்றுகொண்டிருந்த வாலிபர் மீது மோதியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீஸார் கூறியதாவது… பொழிச்சலூர் சம்பந்தனார் நகரைச் சேர்ந்தவர் மகேஷ் (29). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், தனது மனைவி பிரீத்தி (24) , 2 வயது குழந்தை ரியா, தாய் சரோஜா (65) ஆகியோருடன் பல்லாவரம் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் பின்னால் வந்த தண்ணீர் லாரி மகேஷ் பைக் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதை கவனித்த பிரீத்தி தனது குழந்தையை சற்று தள்ளி தூக்கி வீசியுள்ளார். அதே நேரம் அந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பிரீத்தி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான பிரீத்தியின் உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மகேஷ், அவரது தாய் சரோஜா, குழந்தை ரியா ஆகியோரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் மகேஷ் உயிரிழந்தார். பாட்டியும் பேரனும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் இந்த லாரி மோதி இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார். ஒரு குடும்பம் உள்பட 5 பேர் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதவு செய்து லாரி டிரைவர் சுரேஷை (32) கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்லாவரம் சந்தையில் பகுதியில் நின்று கொண்டு இருந்த இளைஞர் மீது மோதிவிட்டு நிற்காமல் வந்ததும், அந்த விபத்தில் அவர் பலியானதும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் வந்தபோது தான் மற்றொரு விபத்து ஏற்பட்டு கணவன் மனைவி பலியானதும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி பல்லாவரம் கண்டோன்மெண்டுக்கு சொந்தமானது என்றும் அந்த லாரியை தாற்காலிக டிரைவர் சுரேஷ் ஓட்டிவந்தார் என்பதும் தெரிய வந்தது. இன்று காலை நடந்த இந்த விபத்தால் பல்லாவரம் சந்தை பகுதியில் பெரும் சோகம் நிலவியது.
நெல்லை வேளாண் அதிகாரியை பெண்ணுடன் இருத்தி படம்பிடித்து மடக்க முயற்சி!
சென்னை: நெல்லை வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியை பெண் பிரச்னையில் சிக்கவைக்க முயற்சி நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. முத்துக்குமாரசாமியை அடித்துத் துன்புறுத்திய அதிமுக பிரமுகர்கள் சிலர், ஒரு பெண்ணுடன் அவரை சேர்த்து வைத்து மொபைல்போனில் படம் எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தக் காரணத்தினால் அவமானத்துக்கு பயந்து முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர்கள் நியமன விவகாரத்தில் முத்துக்குமாரசாமியை அமைச்சரின் உதவியாளரும், தலைமை பொறியாளரும் இன்னும் சில அதிமுக பிரமுகர்களும் அவரை மிரட்டியுள்ளனர். திருநெல்வேல்யில் உள்ள பாலபாக்யா நகரில் ஒரு வீடு மற்றும் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு வீடு என இரு இடங்களுக்கு முத்துக்குமார சாமியை அழைத்துச் சென்று மிரட்டினராம். பாலபாக்யா நகரில் உள்ள வீட்டில் வைத்து, முத்துக்குமார சாமியைத் தாக்கியதாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்த பிரச்னை தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நெல்லை வந்த சிறப்பு புலனாய்வு அதிகாரி சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், விசாரணையைத் தொடங்கியுள்ளார். அப்போது, முத்துக்குமாரசாமியை நெல்லையில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு பெண்ணை வைத்து நாடகமாடி தவறாக செல்போன் மூலம் படம் எடுத்து மிரட்டினராம். இந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பிரச்னையில் தன்னை அவமானப்படுத்தி விடுவார்களோ என்று முத்துக்குமாரசாமி மனவேதனை அடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதால் விரைவில் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்திச் செல்ல முயன்று கவிழ்ந்த பஸ் : மேற்கு வங்கத்தில் 13 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குத்குரி கிராம மக்கள் மூன்று பஸ்களில் நாடியா மாவட்டத்தில் உள்ள மாயாபூர் கிராமத்திற்குச் சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற பஸ்கள் ஒன்றை ஒன்று வேகமாக முந்திச் சென்றுள்ளது. அப்போது, பார்த்வான் – காத்வா சாலையில் தேவாந்திகி கிராமத்தின் அருகே வேகமாகச் சென்ற பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்த அப்பகுதி கிராம மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அங்கு வந்த போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த பஸ்சில் சுமார் 70 பேர் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
6 பேரின் உடல் மறு பிரேத பரிசோதனை: உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு
ஆந்திராவில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும்படி உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதி சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள் வரவில்லை என்பதால், உத்தரவு பிறப்பிக்க முடியாது என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆந்திர நீதிமன்றத்தை நாடவும் மனுதாரர்களை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட 6 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்கவும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணையும் வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

