மதுரை: திண்டுக்கல்லில் ரூ.5 கோடி கேட்டு டாக்டரை கடத்திக் கொன்ற 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் பிரபல டாக்டர் பாஸ்கரன் (72) கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி அதிகாலை கிளப்புக்குச் சென்றபோது ஒரு கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, டாக்டர் பாஸ்கரன் மனைவி வனிதாவுக்கு ரூ.5 கோடி கேட்டு கடத்தல்காரர்கள் பலமுறை மிரட்டல் விடுத்தனர். கடத்தல்காரர்கள் கூறியபடி, ரூ.1 கோடி பணத்துடன் திண்டுக்கல் வாழைக்காய்பட்டி பிரிவு அருகே வனிதா சென்றார். பின்னர் அவர் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்து வைகை எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி சென்றார். ஆனால் போலீசார் பின்தொடர்ந்து வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் பணத்தை வாங்காமல் சென்றுவிட்டனர். பின்னர் மே 8-ஆம் தேதி பொள்ளாச்சியில் உள்ள ஆழியாற்றில் டாக்டர் பாஸ்கரன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர். திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையம் அருகே நின்றிருந்த ஒரு காருக்குள் செல்போனும், ஒரு அரசியல் கட்சித் தலைவரின் படமும் இருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரித்ததில் அது கடத்தப்பட்ட கார் என்பதும், செல்போனில் இருந்த சிம்கார்டு மணிகண்டராஜா என்பவரின் பெயரில் வாங்கப்பட்டிருந்ததும் தெரிந்தது. திருச்சி பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிந்த மணிகண்டராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருச்சி பட்டாலியன் அலுவலகத்தில் விண்ணப்பத்துடன், தனது அடையாள அட்டை நகலைச் சேர்த்துக் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பட்டாலியன் சப்-இன்ஸ்பெக்டர் பாலநாகஜோதியிடம் விசாரணை நடத்தி, அவரது வீட்டில் சோதனை செய்தபோது மணிகண்டராஜாவின் அடையாள அட்டை நகல் மட்டும் மாயமாகி இருந்தது. பாலநாகஜோதியின் வீட்டுக்கு வந்த, அவரது உறவினரான திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்பவர், அதைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. கார்த்திகேயனைத் தேடியபோது அவர் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில், கார்த்திகேயன் மற்றும் அவரது கூட்டாளிகள் டாக்டர் பாஸ்கரனை கடத்திக் கொலை செய்தது தெரிய வந்தது. அதன் பின்னர் சுமார் 4 மாதங்கள் கடந்த நிலையில், முன்னாள் ராணுவ வீரரான கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். கார்த்திகேயனுடன் பழனியை சேர்ந்த உமர் முக்தரும் போலீஸில் பிடிபட்டார். இருவரும் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய பழனியை சேர்ந்த சபீர்அகமது (22), முள்ளிப்பாடி சங்கர் (25), பழனி முகிலன் (20), கார்த்திகேயனின் காதலி பழனி கல்லூரி மாணவி மஞ்சுபார்கவி (20), உத்தமபாளையம் ராஜ்குமார் (24), திண்டுக்கல் துரைப்பாண்டி (20), தாராபுரம் விவேக் (23) ஆகிய 7 பேர் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின் இறுதிக் கட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை அடுத்து நீதிபதி அளித்த தீர்ப்பில்…. பாஸ்கரன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான கார்த்திகேயனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம்; சபீர்அகமது, உமர்முக்தர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 2 ஆண்டுகள் சிறை, 3 ஆயிரம் ரூபாய் அபராதம்; சங்கர், முகிலன், ராஜ்குமார், துரைப்பாண்டி, விவேக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மஞ்சு பார்கவிக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இவர்கள் சிறையில் இருந்த காலம்போக, அனைத்து தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மஞ்சு பார்கவி, ஏற்கெனவே ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவர் அபராதம் செலுத்தினால் போதுமானது என தீர்ப்பில் கூறப்பட்டது.
மகா பெரியவாளின்,விளையாட்டு, தமாஷ் மற்றும் அருள்.
மகா பெரியவாளின்,விளையாட்டு, தமாஷ் மற்றும் அருள். சொன்னவர்-ஸ்ரீ இ.எஸ்.வேதபுரி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (ஒரு சிறு பதிவு) மகா பெரியவா,ரொம்ப விளையாட்டுப் புருஷர். ராத்திரி நான் தூங்கிண்டிருக்கிறபோது,- ஒரு மணி,ரெண்டு மணிக்கு -என்னை எழுப்புவா. ‘எதுவோ? என்ன முக்கியமான வேலையோ?’ன்னு, பரபரப்போடு எழுந்திருப்பேன் “ராத்திரி என்ன சாப்பிட்டே? வயிறு நிறைய சாப்பிட்டியோ?”ன்னு கேட்டுட்டு “சரி போய் படுத்துக்கோ..”ன்னு சொல்லுவா! ஒரு சின்ன தமாஷ்! மகா பெரியவா, எப்போ உபந்யாஸம் பண்ணினாலும், ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்-ங்கிற சுலோகத்தைச் சொல்லிவிட்டுத் தான் பேச்சைத் தொடங்குவா. பிள்ளையார் கோவிலைக் கண்டால் போதும். மகாப் பெரியவாளுக்கு ரொம்ப குஷி வந்துடும்! எல்லாப் பிள்ளையார்க்கும் சிதர்க்காய் போடணும். ‘அப்போதாண்டா குழந்தைகளெல்லாம் வந்து தேங்காய்ச் சில்லு பொறுக்கிக் கொள்ளும்-னு காரணம் சொல்லுவா.மேனாவிலே எப்போதும் தேங்காய் இருக்கும்-சிதர்க்காய் போடறத்துக்காகவே! அதே மாதிரி ஸ்ரீமடத்திலேர்ந்து, காமாக்ஷி கோவிலுக்குப் போகிற போதெல்லாம், கங்கை கொன்டான் மண்டப ஆஞ்சநேயருக்கு ஒரு வாழைப்பழச் சீப்பு நைவேத்யத்துக்குக் கொடுக்கச் சொல்லுவா. ‘புத்திர் பலம்…’ சுலோகம் சொல்லி, ஆஞ்சநேயர் அனுக்ரஹம் வேணும் – என்பார். ஸ்ரீ மடத்திலே, எடுபிடி வேலை செய்கிற சிப்பந்திகளை கவனிக்கவருக்கு கார்வார்-னு பேரு. ஒரு தடவை,அவர் மேனா சுமக்கிற போகிகளுக்குப் படி போடலே. போகிகள் மகாப் பெரியவா கவனத்துக்குக் கொண்டு வரணும்கிறதுக்காக, மேனாவைச் சுமந்துண்டு போறப்போ இப்படிப் பாடினார்கள். ராமா ராமையா காஞ்சி காமாக்ஷி மதுரை மீனாக்ஷி காசி விசாலாக்ஷி இந்த வேளைக்கு இன்னிக்குப் படி போடலே ஐயா தான் கேக்கணும். பெரியவாளுக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. அப்புறம் கார்வார்கிட்ட பேசி,சமாதானப்படுத்தி போகிகளுக்குப் படி போடச் சொன்னார்.
பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அசத்தல்
புணே: ஐபிஎல் சீசன் 8 தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஜேம்ஸ் ஃபாக்னரின் அசத்தலான பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதில் 21 எக்ஸ்ட்ராஸ்களும் அடங்கும். பஞ்சாப் தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளும் ஜான்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அந்த அணியில் ஹூடாவும் (30 ரன்கள், 15 பந்து, 3 சிக்ஸர்), ஜேம்ஸ் ஃபாக்னரும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக அனுரீத் சிங் வீசிய 19-ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என ஃபாக்னர் வெளுத்து வாங்கியதால் அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் கிடைத்தது. ஆனால் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபாக்னர் கடைசி ஓவரில் மில்லரிடம் கேட்ச் கொடுத்தார். அவர் 46 ரன்கள் (33 பந்து, 2 பவுண்டரி 3 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழந்தார். 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் தனது பங்குக்கு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்கள் (32 பந்து) எடுத்த நிலையில் ரன் அவுட்டில் வெளியேறினார். இதுவே பஞ்சாப் அணி வீரர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன். தொடர்ந்து விக்கெட்கள் சரிந்ததால், 13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த ஓவரிலேயே மில்லர் (23 ரன்கள்) விளாசிய பந்தை ஃபாக்னர் கேட்ச் பிடித்தார். இதன் பின்னர் பஞ்சாப் அணி தடுமாறத் தொடங்கியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அசத்தலாக விளையாடிய ஃபாக்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முல்லைப் பெரியாறு: கேரள இடையூறைத் தடுக்குமாறு தமிழக அரசு முறையீடு
புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் செல்லும் தமிழக அதிகாரிகளைத் தடுத்து இடையூறு விளைவிக்காமல் உள்ளே அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப் பட்ட இடைக்கால மனுவில் … முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளச் செல்லும் தமிழக அதிகாரிகளை கேரள போலீஸார் தொடர்ந்து தடுத்து வருகின்றனர். வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, தமிழக அரசின் அதிகாரிகள், வாகனங்கள் அப்பகுதிக்குச் செல்ல எந்த விதத் தடையோ, இடையூறோ ஏற்படுத்தக் கூடாது என்று கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் வழியில் வனப் பகுதியில் உள்ள “முல்லைப் பெரியாறு அணை-வல்லக்கடவு’ சாலையை சீரமைக்குமாறு உச்ச நீதிமன்றம் 2012, ஜூலை 23-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இதுவரை கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உடனே அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் – என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தனது தீர்ப்பை உறுதிப் படுத்திய பின்னர், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு முன்னிலையில் தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் செயல்படுத்தச் சென்றனர். அப்போது கேரள அரசு அவர்களை அனுமதிக்கவில்லை. இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவுக்கு மத்திய அரசும், கேரள அரசும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி, தமிழ் நாளிதழ் ஒன்றில் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியானது. அது, தமிழக நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அந்தச் செய்தி வெளியிட்ட நாளிதழின் ஆசிரியர், பதிப்பாளர், அச்சிட்டாளர் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
லக்வி விடுதலை உலகத்துக்கு நல்லதல்ல: பிரான்ஸ் கருத்து
பாரீஸ்: மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வியை லாகூர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இது, உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், அங்கும் லக்வி விடுதலைக்கு அதிருப்தி கிளம்பியுள்ளது. இது தொடர்பாக பாரீஸ் நகரில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு எம்.பி., லக்வியின் விடுதலை துரதிர்ஷ்டவசமானது; இது இந்தியாவுக்கும் சரி, உலகத்துக்கும் சரி நல்லதல்ல என கருத்து கூறினார் என்று தெரிவித்தார். மேலும், இந்தப் பிரச்னையில் இந்தியாவுடன் பிரான்ஸும் இணைந்து நிற்பதாக தெரிவித்துள்ளது.
குடும்பத் தகராறில் பேரனுடன் காருக்குள் தீவைத்து தற்கொலை செய்த தாத்தா
ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் மேற்கு ஜோகனஸ்பர்க் பகுதியில் உள்ள ஆஸாத்வில்லி நகர்ப்புறத்தில் இந்திய வம்சாவளியினர் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசித்துவரும் இந்திய வம்சாவளி நபரான ஜுகுத்லே பெர்சாத்(64) என்பவருக்கும் இவரது மகளின் கணவரான மருமகனுக்கும் நீண்ட காலமாக தகராறு. தனக்குச் சொந்தமான வீட்டை விட்டு வெளியே போகுமாறு ஜுகுத்லே பெர்சாத் விரட்ட, போக முடியாது என மருமகன் மிரட்ட, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமே என சிந்தித்த ஜுகுத்லே பெர்சாத் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார். நீங்கள் என் வீட்டை விட்டுப் போகவில்லை என்றால் உங்கள் மகனைக் கொன்று விடுவேன் என மகளையும், மருமகனையும் ஜுகுத்லே பெர்சாத் மிரட்டினாராம். ஆனால், அதற்கு அவர் உடன்படவில்லை. இந்நிலையில், நேற்று தனது 4 வயது பேரன் சிவன் மிக்கைல் மகராஜை காரில் ஏற்றி கடத்திச் சென்று, காருடன் தீ வைத்துக் கொளுத்தி விட்டு தானும் அதே காரில் தீக்குளிக்கப் போவதாக மகளுக்கு போன் செய்தார். அவர் குறிப்பிட்ட இடத்துக்கு சிவன் மிக்கைல் மகராஜின் பெற்றோர் வந்து சேருவதற்குள் முழுக்க கார் எரிந்து சாம்பலானது, அதனுள் ஜுகுத்லே பெர்சாத்தும் அவரது 4 வயது பேரனும் உடல் கருகி பலியாகிவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
3 ஸ்மார்ட் சிட்டிக்கு முதலீடு; 36 ரஃபேல் ஜெட்; நரேந்திர மோடி – ப்ரான்ஸ்வா ஹாலண்ட் கூட்டறிக்கை
பாரீஸ்: பிரான்ஸுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் பாரதப் பிரதமர் மோடி. அங்குள்ள எலிஸி அரண்மனையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் பிராஸ்வா ஹோலண்டும் கூட்டாக அறிக்கை அளித்தனர். அந்தக் கூட்டறிக்கையில், இந்தியாவில் 3 ஸ்மார்ட் நகரங்கள் வளர்ச்சிக்கு பிரான்ஸ் 2 பில்லியன் யூரோ முதலீடு செய்யும். ரஃபேல் குறித்து பேசினோம், அதைப் பற்றி பிரதமர் மோடி உங்களிடம் சொல்வார் என்று ஒதுங்கிக் கொண்டார் பிரான்ஸ்வா ஹோலண்ட். அதன் பின்னர் மோடி பேசியபோது, பறப்பதற்குத் தயாரான நிலையில் உள்ள 36 ரஃபேல் ஜெட்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் தேவைப்படுவதாகக் கூறியிருந்தேன். எனக்கு மிகச் சிறந்த வரவேற்பளித்த பிரான்ஸ் அரசுக்கும் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது பிரான்ஸில் இருப்பதற்கு மிக மகிழ்ச்சி கொள்கிறேன். ஐநா., பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி. அன்றாடத் தேவைக்கான அணுசக்தித் துறையில், ஜெய்தாபுர் அணு உலை தொடர்பில் இந்தியாவும் பிரான்ஸும் ஒப்பந்தம் செய்தன. இந்தியாவின் மிக முக்கிய மதிப்பு வாய்ந்த நட்பு நாடு பிரான்ஸ் என்றார் மோடி. நம் இரு நாடுகளும் ஒரேவித மதிப்புகள் கொள்கைகளைக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள் என்று கூறிய மோடி, உள்நாட்டிலேயே தயாரிப்போம் என்ற மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பிரான்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்ததாகக் கூறினார். அதிபர் பிரான்ஸ்வா ஹோலண்டும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பிரான்ஸும் இந்தியாவும் 17 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. முன்னதாக, 9 நாள் பயணமாக பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸ் நகரில் முதல் நிகழ்ச்சியாக யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர்… யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் உரை நிகழ்த்துவது எனக்குப் பெருமை அளிக்கிறது. இந்திய கலாசாரங்களைப் பாதுகாப்பதில் யுனெஸ்கோவின் பங்கு பாராட்டுக்குரியது. மக்களிடையே நம்பிக்கை விதைப்பதன் மூலமே நமது முன்னேற்றத்தை கணிக்க முடியும். ஒவ்வொரு குடிமகனின் சுதந்திரத்தையும் உரிமையையும் நாங்கள் பாதுகாப்போம். உலகில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் இறை நம்பிக்கை, கலாசாரம் போன்றவற்றுக்கு சமூகத்தில் சம உரிமை வழங்கப்பட வேண்டும். உலகின் பல இடங்களில் கலாசாரம் என்பதே பிரச்னைகளுக்கான காரணமாக உள்ளது. கலாசாரங்கள் பிரிவினைக்கு காரணமாகி விடக்கூடாது. மாறாக, மக்களுக்கிடையே உயரிய மரியாதையையும், புரிதலையும் உருவாக்குவதில் துணையிருக்க வேண்டும். பெருகி வரும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள நமது கலாசாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் மதங்கள் தொடர்பாக நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இன்றைய உலக முன்னேற்றத்திற்கு யுனெஸ்கோவின் பங்கு முக்கியமானதாகும். பருவகால மாற்றம் உலகின் பெரும் சவாலாக உள்ளது. இதனை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் இணைந்த கைகளின் அடிப்படையில்தான் ஒரு நாட்டின் பலம் தீர்மானிக்கப்படுகின்றது. நலிந்தவர்களுக்கு அதிகாரமளிப்பதில்தான் உண்மையான முன்னேற்றம் மதிப்பிடப்படுகின்றது. சுற்றுப்புறத் தூய்மை, நல்ல குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். புவிவெப்பமயமாதல் உலகளாவிய சவாலாகி வருகிறது. புவிவெப்பமயமாவதை தடுக்க ஒன்றிணைந்த செயல்திட்டம் தேவை. அடுத்த 7 ஆண்டுகளில் 175000 மெகாவாட் சுத்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நாம் எப்படி வாழ்கிறோம்? என்ற வாழ்க்கை முறைகளின் வெளிப்பாட்டின் மூலமாக மட்டுமே புவிவெப்பமயமாவதை குறைக்க வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பு நிறைவேற முடியும் என்றார். முன்னதாக யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் யோகாசனம் தொடர்பான இணையதளத்தை துவக்கி வைத்தார் மோடி. பிரான்ஸ். ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு பாரீஸ் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
10 டாக்டர்கள் படுகொலை: ஐ.எஸ்.ஐ.எஸ். வெறிச்செயல்
தங்களது இயக்கத்தைச் சேர்ந்த காயம் பட்ட சகாக்களுக்கு மருத்துவம் பார்க்க மறுத்தார்கள் என்ற காரணத்துக்காக, 10 டாக்டர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். வடக்கு ஈராக்கின் பாலைவனப் பகுதியில் மோசூல் நகரின் தெற்கே 15 மைல் தொலைவில் இந்தச் சம்பவம் நடந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது.
நான் எப்போது அதிரடி காட்டுவேன் என எனக்கே தெரியாது; அனுஷ்காவை விமர்சித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்: கோலி ஆவேசம்
நான் எப்போது அதிரடியாக ஆடுவேன் என எனக்கே தெரியாதபோது, ஊடகங்கள் அதை தீர்மானிப்பது தவறு; என் ஆட்டத்துக்காக அனுஷ்காவை விமர்சித்தவர்கள் வெட்கப் பட வேண்டும் என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார் விராட் கோலி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது. இப்போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெறுப்பேற்றினார். கோலியின் மோசமான ஆட்டத்துக்கு அவரது காதலி அனுஷ்காவைக் காரணம் காட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர். இதுபற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்த விராட் கோலி, இன்று மனம் திறந்து கருத்து தெரிவித்தார். ஐ.பி.எல்.லுக்காக இன்று தனது அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிகழ்ச்சியில் விராட் கோலி கலந்து கொண்டு பேசியபோது… அந்தத் தோல்விக்கு என் காதலி அனுஷ்கா காரணம் என்று விமர்சனம் செய்தது என்னை மிகவும் காயப்படுத்தியது. இவ்வாறு கூறுபவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் பல வெற்றிகளில் நான் துணை நின்றிருக்கிறேன். அணியில் மற்ற வீரர்களைவிட நான் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். என்னைவிட சிறப்பாக செயல்பட்டவர்கள் யாரும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரு போட்டியில் அடைந்த தோல்விக்காக தொடர்ந்து வரும் எதிர்ப்புகள் எனக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இது, மக்கள் மீதான என் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. ஒரு வகையில் இதுவும் நல்லதுதான். உங்களுடன் யார் இருக்கிறார், யார் இல்லை என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். என் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் விமர்சனங்கள் மிகவும் ஏமாற்றம் அடையச் செய்தது. என் அதிரடி எப்போது எனக்கு வரும் என்பது எனக்கே தெரியாதபோது ஊடகங்கள் அதை தீர்மானிப்பது வேடிக்கை. என் விவகாரத்தில் நான் இரண்டு போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை என்றால் அது என் ஃபார்மில் குறை. ஆனால், சில வீரர்களின் செயல்பாடு 10 போட்டிகளில் இரண்டில் சரியாக இருந்தால்கூட அவர்கள் ஃபார்முக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். அதனால், இந்த அளவுகோலில் நான் கவனம் செலுத்த மாட்டேன். குறிப்பிட்ட போட்டியில் எப்படி விளாசுகிறோம் என்பதைப் பொருத்துதான் அமையும் ..என்றார் அவர்.

