சென்னை: பாரம்பரிய கட்டட ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு பாரம்பரிய கட்டட ஆணையச் சட்டம் 2012 கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்துவதற்கான புதிய விதிகள், ஆணையம் ஆகியவற்றை இதுவரை அமைக்கவில்லை. மேலும், மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய பகுதி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்த செய்தி, ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காகப் பதிவு செய்தது. அந்த மனுவில், 17 உறுப்பினர்கள் அடங்கிய பாரம்பரிய கட்டடங்களுக்கான ஆணையத்தை அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாமல்லபுரத்தின் தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு உலக பாரம்பரிய பகுதி மேலாண்மை ஆணையம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாரம்பரிய பாதுகாப்பு சமூகத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்… தமிழகத்தில் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த, தொன்மைச் சிறப்புகள் கொண்ட கோயில்கள் 400-க்கும் மேல் உள்ளன. இந்த தொல்லியல் உலகத்தில் இந்தச் சிறப்பு தமிழகத்துக்கு மட்டும்தான் உள்ளது. ஆனால், இந்தக் கோயில்களை சீரமைக்கின்றோம் என்ற பெயரில் அதிகாரிகளும், கோயில் நிர்வாகிகளும் சீரழிவைச் செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா, அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்… எந்த ஒரு புராதானக் கட்டடங்களைச் சீரமைத்தாலும், அதற்கான நிபுணர்களின் கருத்தை தமிழக அரசு கோருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குக்கு உதவுவதற்காக மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமனை நீதிபதிகள் நியமித்தனர். மேலும், இந்து சமய அறநிலையத் துறையை எதிர் மனுதாரராகச் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை ஜூன் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் பணி நீக்கம்
திருநெல்வேலி: களக்காடு அருகே 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா ரவிபுதூரைச் சேர்ந்த சுப்பிரமணியன்(54) களக்காடு அருகே உள்ள சூரங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த செப்டம்பரில் தன் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். மாணவி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் மீது புகார் கூறினர். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சுப்பிரமணியனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க களக்காடு சரக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் நெல்லை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு பரிந்துரைத்தனர். அதன் பேரில்,நெல்லை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மோகனசுந்தரம் தொடக்கக் கல்வித்துறை இயக்குனருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை பணி நீக்கம் செய்ய இயக்குனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது. இது குறித்து மேல்முறையீடு செய்ய சுப்பிரமணியனுக்கு 2 மாத அவகாசம் அளிக்கப்பட்டது.
ஏப்.17 ல் வெளியாகிறது ஓ காதல் கண்மணி
ஏப்.17 அன்று மணிரத்னம் இயக்கியுள்ள படம் ஓ காதல் கண்மணி வெளியாகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏ.மணிரத்னம் இயக்கி பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் வெளியாகும் படம் ஓ காதல் கண்மணி. இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்.17 அன்று இது வெளியாகிறது.
20 தமிழர்கள் சுட்டுகொலை: புலி படக்குழு அதிர்ச்சி!
விஜய்யின் புலி படம் தற்போது தலைக்கோணத்தில் நடைபெற்று வருகிறது. பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தின் படம் ஆரம்பத்தில் சென்னையில் நடைபெற்றது.
தொடர்ந்து கேரளா, திருப்பதி என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சிம்பு தேவன். இந்நிலையில் விஜய், ஸ்ருதி ஹாசன் பங்குபெறும் காட்சிகள் கடந்த செவ்வாய் கிழமை திருப்ப சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெற்றது.
அதே நாளில்தான் அந்த இடத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் 20 தமிழர்கள் என்கவுன்ட்டர் நடந்தது என்று கூறப்படுகிறது. இதையறிந்த படக்குழு கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாம்.
நாளை பெட்ரோலிய விற்பனையாளர்கள் கொள்முதல் நிறுத்தப் போராட்டம்
சென்னை: நாடு முழுவதும் ஏப்.11 சனிக்கிழமை நாளை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தை பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலர் எம்.ஹைதர் அலி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…. நாடு முழுவதும் 53,000 பெட்ரோலிய விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த சில்லறை விற்பனையாளர்களுக்கு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2-ம், டீசலுக்கு ரூ.1.22-ம் கொள்முதல் விலையை விட அதிகம் வைத்து விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலையை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி நியாயமான”டீலர் மார்ஜின்’ வழங்க வேண்டும். நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கழிப்பறை பராமரிப்பு குறைபாட்டுக்காக அபராதம் விதிக்கப்படுவதில்லை. ஆனால், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அபராதம் விதிப்பது நியாயமானதல்ல. எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனையாளர்கள் அளித்துள்ள குத்தகை நிலத்தை திரும்பப் பெறுவதற்கான கொள்கை வரைவினை எளிதாக்க வேண்டும். மேலும், விற்பனை நிலையங்களில் எண்ணெய் நிறுவன லாரிகளிலிருந்து பெட்ரோல், டீசல் பெறும்போது, அதன் அளவை கண்காணிக்க ரசீதுடன் கூடிய அளவீட்டுக் கருவியை எண்ணெய் நிறுவனங்கள் நிறுவ வேண்டும்… இவை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஏப்.11 அன்று கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
சென்னையில் ஆந்திரத்தைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் சூறை
சென்னை: ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கட்டை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று நேற்று சூறையாடப்பட்டது. திடீரென அதில் நுழைந்த 2 பேர் பல்பொருள் அங்காடியில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி அங்காடிக்குள் சென்று உள்ளே இருந்த கம்யூட்டரை உடைத்தனர். அங்கிருந்த பொருட் களையும் சூறையாடி, கல் வீசி கண்ணாடிகளை நொறுக்கினர். இதையடுத்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீஸார் கடையை சூறையாடிய தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த இருவரையும் கைது செய்தனர். பின்னர், இருவரும் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
‘அம்மா’ மீண்டும் முதல்வராக தயாராகுது ‘செங்கோட்டை’?
செங்கோட்டை டூ தில்லி செங்கோட்டை!: ‘அம்மா’வுக்காகத் தயாராகுது? திருநெல்வேலி மாவட்டத்தின் கடையநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது செங்கோட்டை தாலுகா. இங்கே அதிமுக சார்பில் நின்று போட்டியிட்டு வென்று அமைச்சர் ஆனவர் செந்தூர்பாண்டி. உடல் நலக் குறைவால் சிகிச்சையில் உள்ள செந்தூர்பாண்டியன் இப்போது இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார். இதனால், இவர் தன் கட்சித் தலைவி அம்மாவுக்காக பதவி விலகி, தன் தொகுதியில் ‘அம்மா’ போட்டியிட்டு வெற்றி பெற வழிவிடுவார் என்று இந்தத் தொகுதியில் பலரும் பரவலாகப் பேசுவதைக் கேட்க முடிகிறது. அறநிலையத் துறையைத் தாங்கி துவக்கத்தில் ‘அம்மா’வுக்காக கோயில்களில் தடபுடலாக அபிசேக அர்ச்சனை பூஜைகள் நடக்க வழி செய்தவர் ஆயிற்றே! விரைவில் அதிமுக பொதுச் செயலாளார் ஜெயலலிதா தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்றும், உடனே அவர் மீண்டும் போட்டியிட்டு முதல்வர் ஆகிவிடுவார் என்றும் இங்குள்ள அதிமுகவினர் மட்ட்டுமல்லாமல், பொதுமக்களில் பலரும் எண்ணுகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறிக் கடைக்காரர்கள், வணிகர்களில் சிலர் என்று பரவலாக இந்தக் கருத்தைக் கொண்டிருக்கின்றனர். யாரைச் சந்தித்தாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, ‘அம்மா’ கேஸ் என்னாகும்? வெளில வந்துடுவாங்களா? அவங்க இங்க நின்னு ஜெயிச்சு முதலமைச்சர் ஆயிடுவாங்களாமே! எல்லாரும் சொல்லுறாங்க…. இப்படியாக ஸ்ரீரங்கம் கைவிட்டாலும், செங்கோட்டை கைவிடாது; அம்மா இங்கயிருந்து அடுத்து நேரா தில்லி செங்கோட்டைதான் போவாங்க! வேணும்னா பாருங்களேன்… என்று அதிமுகவினர் சிலர் உற்சாகமாகப் பேசிக் கொள்வதை கேட்க முடிகிறது. நிலம் கையகப் படுத்தல் மசோதா விவகாரத்தில் அதிமுக எடுத்த நிலைப்பாடு, தம்பித்துரைக்கு பாஜக கொடுத்த கௌரவம்… எல்லாம் மத்திய அரசோடு, குறிப்பாக மோடியுடன் ஜெயலலிதா ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார் என்றே பலரும் நம்புகிறார்கள். இதற்கு எதிர்க்கட்சிகளின் இத்தகைய கருத்துப் பிரசாரம் காரணாமாகியுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. மக்கள்மன்றங்களின் தீர்மானம் ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்றங்களின் தீர்மானம் அல்லவா நடக்கப் போவதைத் தீர்மானிக்கப் போகின்றன?
சிவசேனாவின் கருத்து தாக்குதலில் பெண் எழுத்தாளர் ஷோபா டே!
மும்பை: சிவசேனாவின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார் ஷோபா டே. ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் ஷோபா டே, துவக்கத்தில் மாடல் அழகியாக இருந்தவர். 1970களில், பத்திரிகையாளர் ஆனவர். மகாராஷ்டிராவில் பிறந்த, மராட்டிய இனத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஷோபா டே, இப்போது, சிவசேனாவின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். மும்பை திரையரங்குகளில் பிரதான நேரமான 6 மணியில் இருந்து 9 மணி வரை மராத்தி திரைப்படத்தைதான் வெளியிட வேண்டும் என மகாராஷ்டிர மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்டித்து பத்திரிகையாளர் ஷோபா டே (67) தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவு செய்திருந்தார். அதில், மகாராஷ்டிர மாநில அரசின் இந்த உத்தரவு, ரவுடித்தனம் போல உள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஷோபா டேயின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ‘சாம்னா’ பத்திரிகை, மாவீரர் சிவாஜியும், பால் தாக்கரேயும், தாதாகிரி என நீங்கள் குறிப்பிடும் ரவுடித்தனத்தை பின்பற்றியிருக்காவிட்டால், ஷோபா டே, நீங்கள் பாகிஸ்தானில்தான் பிறந்திருப்பீர்கள். நள்ளிரவில் நடைபெறும், ‘பார்ட்டி’களில், பர்கா அணிந்தபடி தான் பங்கேற்றிருக்க வேண்டும். அந்தச் செய்திகள், பத்திரிகைகளின் மூன்றாம் பக்கத்தில் வந்திருக்கும் என்று கண்டித்திருந்தது. எழுத்தாளர் ஷோபா டேயின் மற்றொரு, ட்விட்டர் பதிவில், ‘தியேட்டர்களில் இனி ‘பாப்கார்ன்’ விற்பதற்கு பதிலாக, மராத்தியர்களின் பாரம்பரிய உணவுகளான, ‘வடாபாவ், தாஹிமிசால்’போன்றவைதான் விற்கப்படும் என, கேலியாகக் குறிப்பிட்டிருந்தார். இது மராட்டிய கலாசாரத்தை அவமானப்படுத்தும் செயல் எனக் கூறி சிவசேனா தொண்டர்கள், ‘வடாபாவ், தாஹி மிசால்’ ஆகியவற்றை தட்டுகளில் ஏந்தி, ஷோபா டேயின் மும்பை வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், ”இம்மாதிரியான அறிக்கைகளை எந்த மராத்தியனும் ஏற்க மாட்டான்,” என, எச்சரித்திருக்கிறார்.
அம்பேத்கர் பிறந்தநாளை கரூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப் பட வேண்டும் – கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கூட்டத்தில் முடிவு
கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் கே.சிவசாமி தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் சித்திரை முதல் நாளான 14 ம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் அம்பேத்கரின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து சிறப்பாக விழா கொண்டாடுவது எனவும் ,மேலும் ஏப்ரல் 16 ந் தேதி காலை தமிழ் வருட பிறப்பை மத்திய அமைச்சர் முன்னிலையில் மிக பிரமாண்டமாய் கொண்டாடுவது ,அன்று மாலையே அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை தாழ்த்த பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மத்திய அமைசர் முன்னிலையில் கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் ஏப்ரல் 23 ந் தேதி கரூர் மாவட்டத்திற்கு வரும் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை மிக பிரமாண்டமாய் வரவேற்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில செற்குழு உறுபினர் கிருஷ்ணகுமார், ஈஸ்வரி, மாவட்ட பொது செயலாளர்கள் கைலாசம், முருகனந்தம் ,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ,ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை கரூர் மாவட்டத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நீரூபிக்க அனைத்து பா.ஜ.க நிர்வாகிகளும் பாடு பட வேண்டும் என அனைத்து நிர்வாகிகளையும் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கே.சிவசாமி கேட்டுக் கொண்டார்.
20 தமிழர்கள் சுட்டுக் கொலை: பணியை ராஜினாமா செய்த கல்லூரி பேராசிரியர்
சென்னை: ஏப். 10- ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதி யில் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி 20 தமிழர்களை கடந்த 7 ம் தேதி அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன் றனர். கடத்தல் காரர்களை சுற்றி வளைத்தபோது, அவர்கள் தங்களை தாக்கியதாகவும் தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், இது போலி என்கவுன்ட்டர் என்றும் திட்டமிட்டே தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூறிவருகின்றன. என்கவுன்ட்டரில் இறந்தவர் களில் 8 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும் 8 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும் 4 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தை சேர்ந்த இஞ்சினியரிங் கல்லூரி பேராசிரியர் அருண்குமார் (27) தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். திருவண்ணாமலை போளூரை சேர்ந்த இவர் எம் இ படித்துள்ளார். ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஆந்திரா நிர்வாகத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகி சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். தமிழர்கள் திட்டமிட்டே கொல்லப்பட்டனர் என்று கூறி தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். தமிழ் உணர்வு, தமிழர் மீது அக்கறை கொண்ட இந்த பேராசிரியர் அருண்குமாருக்கு சல்யூட்.

