கொல்கத்தா: ஐ.பி.எல். சீஸன் 8 போட்டித் தொடர் புதன்கிழமை நாளை தொடங்குகிறது. மே மாதம் 24 ஆம் தேதி வரை 47 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் ஆட்டங்கள், சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்பட 12 மைதானங்களில் நடக்கிறது. இதில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் தொடக்க ஆட்டமே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழா பிரமிப்பூட்டும் வகையில் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி நடிகையும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதலியுமான அனுஷ்கா சர்மா, இந்திப்பட நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், சாகித் கபூர், பர்ஹான் அக்தர் ஆகியோரின் நடனத்துடன் இசை அமைப்பாளர் பிரீத்தமும் இந்த நிகழ்ச்சியில் கலக்கக் காத்திருக்கிறார். நடிகர் சயீப் அலி கான் தொடக்க விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், தொடக்க விழாவுக்காக இன்று கொல்கத்தா டம்டம் விமான நிலையத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் ஜோடியாக வந்திறங்கினர்.
ஐ.பி.எல் தொடக்க விழா: கோலி – அனுஷ்கா ஜோடி ரெடி !
ஐ.பி.எல். சீஸன் 8 புதன்கிழமை நாளை தொடங்குகிறது
கொல்கத்தா: ஐ.பி.எல். சீஸன் 8 போட்டித் தொடர் புதன்கிழமை நாளை தொடங்குகிறது. மே மாதம் 24 ஆம் தேதி வரை 47 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் ஆட்டங்கள், சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்பட 12 மைதானங்களில் நடக்கிறது. இதில் 2 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2012, 2014) ஒரு முறை சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), மும்பை இந்தியன்ஸ் (2013) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் 14 ’லீக்’ ஆட்டங்களில் மோதும். உள்ளூர், வெளியூர் மைதானங்கள் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் விளையாடும் ’லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ’பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். மே 17-ந் தேதி வரை ’லீக்’ சுற்று ஆட்டங்கள் நடைபெறும். பிளேஆப் சுற்று மே 19-ந் தேதி தொடங்குகிறது. மே 24-ந் தேதி கொல்கத்தாவில் இறுதிப் போட்டி நடக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டம் சோனிமேக்ஸ், சோனா சிக்ஸ் சேனல்களில் ஒளிபரப்பாகும்.
நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் இமாலய ஊழல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் இமாலய ஊழல் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்த அதேநேரத்தில் நூலகத் துறையிலும் அத்தகைய பெருமையை பெற்றிருந்தது. தமிழகத்தின் நூலகத் துறை இந்தியாவிற்கே முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் இருந்தது. அத்தகைய நூலகத் துறை கடந்த சில ஆண்டுகளாக சீரழிந்து வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது. பணம் கொடுத்து நூல்களை வாங்கிப் படிக்கும் வசதியில்லாத கிராமப்புற ஏழை மக்கள், புதிய நூல்களை வாசிக்கச் செல்லும் ஒரே இடம், உள்ளூர் கிளை நூலகங்கள்தான். தமிழ்நாட்டில் சுமார் 4,000 கிளை நூலகங்கள் பொது நூலகத் துறையின் கீழ் பெயரளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடிப்படை வசதிகள் இல்லாமல், நூலகர்கள் இல்லாமல், புதிய நூல்கள் வாங்காமல், அமர்ந்து படிக்க இருக்கை வசதிகளும், போதிய இடமும் இல்லாமல் சீர்கெட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரூபாய் 60 லட்சத்திற்குமேல் செலவு செய்து புதுப்பிக்கப்பட்ட ‘தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்” இப்போது எந்த நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி தராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பொது நூலகத் துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி முடிய ‘தேசிய நூலக வார விழா” கொண்டாடுவது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்கள் நடத்தும் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் நூலகவியலில் பட்டங்களைப் பெற்றுக் கொண்டு வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொது நூலகத் துறையில் ஆயிரக்கணக்கான நூலகர் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் உள்ள சுமார் 150 கிளை நூலகங்களில், 60 க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் நூலகர்கள் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றை நிர்வகிப்பது தினக்கூலிகள்தான். அதிலும் கிராமப்புற பகுதி நேர நூலகங்களை நிர்வகிப்பவர்களுக்கு தினக்கூலி ரூ.20 மட்டும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கூலி கொடுக்க தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.இந்திய அளவில் பெருமை பெற்ற சென்னை, கன்னிமரா பொது நூலகத்தில் 150 பணியாளர்களும், நூலகர்களும் பணியாற்ற வேண்டிய இடத்தில், தற்போது வெறும் 22 பேர்தான் பணியாற்றுகிறார்கள். அந்த நூலகத்தில் நூலகப் பணிகள் எப்படிச் செம்மையாக நடைபெறும்? நூலகர்களை கேவலப்படுத்துவது, தமிழ்நாட்டு வாசகர்களைக் கேவலப்படுத்துவதற்கு சமமாகும். எதிர்கால தலைமுறையை செதுக்கி, செம்மைப்படுத்துகிற நூலகத்துறையை லஞ்ச வேட்டைக்கு உட்படுத்துவதை விட கொடுமையானது வேறு எதுவும் இருக்க முடியாது. நூலகங்களுக்கு வாங்குகிற நூல்களில் நடைபெறுகிற இமாலய ஊழலை கண்டு வெட்கி தலைகுனிவதை தவிர வேறு வழியில்லை. இதற்கெல்லாம் இறுதி முடிவுகட்டுகிற பொறுப்பு தமிழக மக்களிடம் இருக்கிறது. என்று கூறியுள்ளார்.
‘காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் தலைமை செயலக முற்றுகை: பி.எட்.,வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம்
திண்டுக்கல்: இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் பேசியபோது, 2011ல் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் புத்தகம் 6 முதல் 10ம் வரையுள்ள வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது. அந்தப் புத்தகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மீண்டும் புத்தகங்களை புழக்கத்தில் விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வேலையின்றி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட்., கணினி அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமர்த்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் 10க்கும் மேற்பட்ட பணிகள் கணினியைச் சார்ந்தே உள்ளன. கணினி அறிவியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்., அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார வள மையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் போது கணினி அறிவியல் பாடத் திட்டத்துக்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் வரும் மே மாதம் 20 ஆயிரம் பேருடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.
குரூப் 1, குரூப் 2 தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும்
சென்னை: 1,000 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் 60 குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். தட்டச்சர் பணி, தோட்டக்கலை அலுவலர் பணி மற்றும் குரூப் – 2 பணிகள் ஆகியவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது. டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுப் பணிகள் முன்பை விட விரைவுபடுத்தப்பட்டு, மிகவும் வெளிப்படையான முறையில் நடக்கிறது; தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு நடந்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், இவ்வார இறுதியிலும், குரூப் – 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியிலும் வெளியிடப்படும். ஏற்கேனவே தகுதித் தேர்வு நடத்தப்பட்ட, குரூப் – 1 பதவிகளுக்கு மே 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு அரசுத் துறைகளில், 50 ஆயிரம் காலியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது. புதிய பணி நியமனத்துக்கான பட்டியல், அலுவலர் தேர்வுக் குழு பட்டியலின்படி நடக்கும். குரூப் – 2 பதவிகளுக்கு, 1,000 இடங்கள் காலியாக உள்ளன. சப் – கலெக்டர், போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரி அதிகாரி போன்ற, குரூப் – 1 பதவிகளுக்கு 60 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான தேர்வு தேதி, இம்மாத இறுதிக்குள் வெளியிட வாய்ப்புள்ளது என்று பால சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
பங்கு வர்த்தகம் உயர்வுடன் துவக்கம்
மும்பை : வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இன்றும் பங்கு வர்த்தகத்தில் உயர்வு காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105.71 புள்ளிகள் அதிகரித்து 28,610.17 என்ற அளவில் இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.50 புள்ளிகள் உயர்ந்து 8,682.40 என்ற அளவில் இருந்தது. ஆசிய பங்குச் சந்தைகள் ஓரளவு உயர்வுடன் துவங்கின. ஜப்பான் பங்குச் சந்தை 1.15 சதவீதம் ஏற்றத்துடன் துவக்கியது. ஹாங்காங் பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை.
உங்கள் மனக்குறைகளை தீர்ப்பேன்: முஸ்லிம் பிரமுகர்களிடம் மோடி உறுதி
புது தில்லி: முஸ்லிம்களின் மனக்குறைகளை தீர்க்க தனது முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதிலும் இருந்து வந்த முஸ்லிம் மதத் தலைவர்களும், மதகுருக்களும் நேற்று சந்தித்துப் பேசினர். இந்தப் பிரதிநிதிகள் குழுவில், சென்னை தாஜ்புரா ஷரீப்பைச் சேர்ந்த சையது அலி அக்பரும் இடம்பெற்றிருந்தார். அந்தக் குழுவினர், முஸ்லிம்களின் பல்வேறு பிரச்னைகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தனர். முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள், மசூதிகள், மதரசாக்கள் ஆகியவற்றின் சொத்துகள் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், முஸ்லிம் இளைஞர்களுக்கு கல்வித் துறையில் நல்ல வசதிகளை உருவாக்கித் தருமாறு வலியுறுத்தினர். தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவது பற்றி கவலை தெரிவித்த அவர்கள், ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இந்த சவாலை சமாளிக்க கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினர். அவர்கள் கூறியதைக் கேட்ட மோடி முஸ்லிம் மதத்தின் பல்வேறு பிரிவினரின் மனக் குறைகளைக் களைய தனது முழு ஆதரவை அளிப்பதாக உறுதி அளித்தார். மேலும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களின் சொத்துப் பிரச்னைகளை கவனிப்பதாக உறுதி அளித்ததுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு தேச கட்டுமானத்தில் முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்பு அளிப்பதையும், முஸ்லிம்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்வதையும் தமது கடமையாகக் கொள்வதாகவும் கூறினார். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த முஸ்லிம் மத தலைவர்கள் விரைவான பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், அமைதி, தேச பாதுகாப்பு ஆகிய பிரதமர் மோடியின் நோக்கங்கள் நிறைவேற அவருக்கு முழு ஆதரவை அளிப்பதாக உறுதி அளித்தனர்.
Had a good meeting with leaders of the Muslim community. https://t.co/ehf7oAL36F pic.twitter.com/z8e8vqGMTJ — Narendra Modi (@narendramodi) April 6, 2015
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாளை இயற்கை உழவர் தினமாக அறிவிக்கக் கோரிக்கை
கரூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பிறந்த நாளான ஏப்ரல் 6 ஆம் நாளை ”இயற்கை உழவர் தினமாக”அறிவித்து விவசாயத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவையில் இருந்து நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பேரணி நடத்தவுள்ளதாக, உழவர் உழைப்பாளர் சங்க கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உழவர் உழைப்பாளர் சங்கத்தின் மாநில -மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் உள்ள கட்டிடப் பொருட்கள் சங்க வளாகத்தில் நிறுவனத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.மாநிலப் பொருளாளர் ஜி.சோமசுந்தரம்,மாநிலச் செய்தித் தொடர்பாளர் மு.செந்தில்குமார்.மாநில தலைமை நிலையச் செயலாளர் வி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் வகித்தார்கள். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் ப.பாலசுந்தரம்(சேலம்),சிவாநஞ்சன்(கோவை),விஜயமார்த்தாண்டன்(சிவகங்கை),என்.அருண் (மதுரை), எம்.ஜெயவேல்(வாழப்பாடி), என்.சி.தங்கவேல்(நாமக்கல்), காளிரத்தினம்(வேலூர்), விசாலாட்சி(கோவை), மகா மகா பெள்ளியப்பன்(ஊட்டி), செந்தில் குமார்(ஈரோடு), தமிழன் பிரகாஷ் (ஊத்துக்குளி) ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள் மேலும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மத்திய அரசின் நிலமோசடித் திட்டமான நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் விவசாயிகளிடையே எழுச்சியை உருவாக்க போராட்டங்களில் கலந்து கொள்ள செய்ய தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஏப்ரல் 28 முதல் ஈரோட்டில் இருந்து தொடக்கி 1000 வாகனங்களில் வாகனப் பேரணி நடத்துவது என்றும்,உழவர் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் தினமான ஜூன் 19 அன்று வாகனப் பேரணியை நிறைவு செய்வது என்றும், சமூக ஆர்வலர் திரு.அன்னா ஹசாரே தலைமையில் டெல்டா மாவட்டங்களில் மாபெரும் விவசாயிகள் மாநாட்டை அனைத்து விவசாய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விரைவில் நடத்தவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது. தீர்மானம்:-2 இந்தியா முழுவதும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காலாவதியான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை குடியரசுத் தலைவர் மூலம் மீண்டும் அவசரச் சட்டமாகக் கொண்டு வந்துநிறைவேற்றிடமத்திய அரசு முனைவதை இக்கூட்டம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது..மேலும் தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் செய்யும் வகையில் அதற்கு துணை போகும் அதிமுகவுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. தீர்மானம் :-3 இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பிறந்த நாளான ஏப்ரல் 6 ஆம் நாளை ”இயற்கை உழவர் தினமாக”அறிவித்து இயற்கை விவசாயத்தை அரசு முழு அளவில் ஊக்குவித்து நஞ்சில்லா உணவுக்கான உத்தரவாதத்தை அளிப்பதோடு நாடு முழுவதும் மருந்துகள் ரசாயன உரங்கள் மூலம் மலடாகிப் போன மண்ணைப் பாதுகாக்க ஓராண்டுக்கு இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான முழுச் செலவுகளையும் அரசு ஏற்க வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய -மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. தீர்மானம்:-4 தமிழ்நாட்டில் சமீப காலமாக விவசாய நிலங்களைக் கூறு போட்டு வீட்டு மனைகளாக மாற்றி வரும் நிலை தொடர்வதால் 13 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இது வரை அழிந்து விட்டதால் இன்னும் 20 ஆண்டுகளில் முற்றிலும் விவசாயம் அழிந்து விடக் கூடிய ஆபத்து இருப்பதால் விவசாயத்தைக் காப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம் :-5 இந்தியாவில் விவசாயிகள் விளைவித்து கட்டுபடியான விலையின்றிக் கடனாளியாகிக் கொண்டு வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் உணவுப் பொருட்கள் இறக்குமதிக்குத் தடை விதிப்பதோடு நுகர்வோரின் பயன்பாட்டுக்கு வரும் போது பல மடங்கு விலை உயர்வு ஏற்படும் உண்மைச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இடைத் தரகு மற்றும் பதுக்கலைத் தடை செய்து உற்பத்தியாளரான உழவர் மற்றும் நுகர்வோரான பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய -மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம் :-6 இந்திய அளவில் மஞ்சள் சாகுபடியில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகம் உற்பத்தி செய்யப் படுகிறது.எனவே மஞ்சளை ஒரே இடத்தில் விற்பனை செய்யவும், மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் மஞ்சளை மதிப்புக் கூட்டப் பட்ட பொருளாக மாற்றப்பட்டு உள்நாட்டிலும் உலக அளவிலும் சந்தைப்படுத்துவதற்கான தொழிற்சாலையையும் ,மஞ்சள் வணிக வளாகத்தையும் ஈரோட்டில் தொடங்கவும் ,10ஆண்டுகளுக்கு மேலாக இருப்பு வைத்து விற்க கூடிய ஒரே விவசாயப் பொருளான மஞ்சளை விலை வீழ்ச்சி அடையா வண்ணம் சாகுபடி செலவினங்களைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அரசே மஞ்சளைக் கொள்முதல் செய்து இருப்பு வைத்து காலப்போக்கில் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் போது அரசு விற்றுக் விவசாயிகளைக் காப்பாற்ற முன் வர வேண்டும் என்று இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது. தீர்மானம் :-7.இந்தியாவில் பன்னெடுங்காலமாக உழவுத் தொழில் செய்வோர் தொடர்ந்து கடனிலும் வறுமையிலும் அதனால் தற்கொலை செய்தும் வரும் நிலை மாற இலவசம்,மானியம்,தள்ளுபடி,சலுகை,கடன் எவையும் தேவையில்லாமல் தன்மானத்தோடும் மரியாதையோடும்,சுதந்திரத்தோடும் வாழ விவசாய விளை பொருட்கள் அனைத்துக்கும் உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு பட்டறிவு அடிப்படையிலான எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்று விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை தலை நிமிர்ந்து வாழச் செய்ய மத்திய -மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம்:-8.இந்திய அளவில் பல மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள லோக் ஆயுக்தா தமிழ்நாட்டிலும் உடனடியாக ஏற்படுத்தப்பட்டு .மற்ற சில மாநிலங்களைப் போன்று மாவட்ட வாரியாகவும் கொண்டு வந்து ஊழல் செய்வோர் கடும் தண்டனைக்கு ஆளாக்கப் படவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம் :-9 இயற்கை விவசாயத்தின் முக்கிய அங்கமான பஞ்ச காவியா தயாரிக்கவும் காங்கேயம்,புளிக்குளம் நாட்டு மாடுகள் அவசியமாவது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் அருமருந்தாக இருந்து வருகிறது.எனவே நாட்டு மாடுகள் அழிவதைத் தடுக்க இந்தியா முழுவதும் நாட்டு மாடுகளைப் பாதுகாக்க மத்திய -மாநில அரசுகள் உடனடி நட வடிக்கை எடுப்பதோடு தமிழ்நாட்டின் பாரம்பரியமானவீர விளையாட்டான ஜல்லிக் கட்டை நடத்தவும் . நாட்டு இனங்களைக் காக்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது. தீர்மானம்:-10.இந்தியா முழுவதும் மாவட்டங்கள் தோறும் நடைபெறும் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டங்களில் அரசின் கொள்கை முடிவுகள் குறித்து பேச முடிவதில்லை.எனவே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாநில முதல்வர்கள் தலைமையில் அந்தந்த மாநிலத் தலைநகரங்களிலும்,தேசிய அளவில் பிரதமர் தலைமையில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் நேரடியாக விவசாயிகள் குறை கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய -மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. தீர்மானம் :-11.இந்தியாவில் கிராமங்கள் தோறும் உள்ள இயற்கை வளங்களான நீர், நிலம், காடுகள், மலை, மண், மணல்,மரம் என்பது அந்தந்தக் கிராமங்களின் சொத்தாகும்.அக்கிராமத்து மக்களே அதற்கு உரிமையாளருமாவார்.எனவே கிராமத்தின் சொத்துக்களை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ அந்த கிராமத்திலிருந்து நீர், மண், மணல், மலை, காடு என்று எதை எடுப்பதாக இருந்தாலும் அந்த கிராம சபையின் அனுமதி பெற்றுத்தான் கையகப்படுத்த பட வேண்டும் என்ற வகையில் அவசரச் சட்டம் இயற்றி தேசத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம் :-12.இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களையும் நில அளவை செய்து கணக்கிட்டு . 1, 2, 3, 4, 5, 6 என்று வகைப்படுத்தப்பட்டு 1,2,3,4 ஆகிய வகை நிலங்கள் விளைநிலங்கள் எனவும்,5,6 என்ற வகை நிலங்கள் இதரப் பயன்பாட்டுக்குரியவை என்றும் தரம் பிரித்து 1,2,3,4 ஆகிய வகைப் படுத்தப்பட்ட நிலங்கள் தொழில் பயன்பாட்டுக்கு அளிக்கப்படக் கூடாத வளமான நிலங்கள் என்பதைக் குறிப்பிட்டு மற்ற 5,6 இனங்களை மட்டும் அரசு கையப்படுத்தும் வகையில் அவசரச் சட்டம் இயற்றி நிலம் கையப்படுத்துதலில் அரசுக்கும் ,மக்களுக்குமான இடைவெளி நீக்கப்பட்டு மக்களின் அச்சத்தை நிரந்தரமாகப் போக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம்:-13. தேசிய அளவிலும் மாநில மாவட்ட அளவிலும் நதிகள்-ஆறுகள் இணைக்கப்பட்டுநதி நீர் மட்டுமின்றி மக்களின் மனங்களையும் இணைக்கும் வகையில் நாட்டில் சாதி,மதம்,இனம்,மொழி,நிறம்,அரசியல் என்ற வேறுபாடுகளைக் களைய மக்கள் விழிப்புணவு அடைய வேண்டும் என்றும் மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் வாழ்ந்து உலகம் அமைதி பெற அதற்குரிய உலக அளவில் இயற்கையின் சிறப்பை மனிதன் உணரும் வகையில் இயற்கை குறித்த அனைத்து ரகசியங்களும் எதிர்காலத் தலைமுறைக்கு பாடமாகவும்,பயிற்சியாகவும் கொண்ட வாழ்வியல் கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம் :-14. இந்திய நாடு வல்லரசுநாடாக பெட்ரோல் -டீசல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாக எத்தனாலைப் பயன்படுத்தவும்,நாட்டின் வளம் காக்க பனை உள்ளிட்ட மரங்களைக் காக்கவும்,தேசிய அவமானமான உணவு பொருள் இறக்குமதியை தடை செய்யவும்,பறிபோகும் விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் கிராமங்கள் தோறும் உரம் உற்பத்தி-எரிவாயு உற்பத்தி-கால்நடைத் தீவன உற்பத்தி-மின்சார உற்பத்தி போன்ற தேவைகளை அரசை நம்பியிராமல் விவசாயம் சார்ந்த வாழ்வியல் சுயசார்புக் கிராமங்களை உருவாக்கிட தொழில் துறையைப் போன்று இளைஞர்களுக்கு அரசே ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டன.
செம்மரம் வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 12 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொலை
திருப்பதி: செம்மரம் வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. தமிழக – ஆந்திர எல்லையில் செம்மரங்கள் வெட்டிக் கடத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், செம்மரக் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் எனக் கூறப்படுகிறது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக் கடத்தும் கும்பலுக்கும், ஆந்திர வனத்துறை, போலீசாருக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் ஏற்படுவதுண்டு. ஆனால், இந்த மோதல் இன்று உச்சக் கட்டத்துக்குச் சென்றுள்ளது. தமிழகத்தின் எல்லைப் பகுதியான ஈசகுண்டா, சீனிவாசமங்காபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டிக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஆந்திர போலீசாருக்குத் தகவல் கிடைத்ததது. இதை அடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கே கடத்தல் கும்பலை போலீசார் எச்சரித்துப் பிடிக்கச் சென்றபோது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலர் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு செயற்கைக்கோள் மைய இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்பு
பெங்களூரு: பெங்களூரு செயற்கைக்கோள் மைய இயக்குனராக தமிழகத்தின் மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டார். பெங்களூருவில் செயல்பட்டு வரும் இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானியாகவும், ஐ.ஆர்.எஸ். மற்றும் எஸ்.எஸ்.எஸ். செயற்கைக்கோள் திட்ட இயக்குனராகவும் இருப்பவர் கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. இவர் தற்போது, இஸ்ரோவில் உள்ள செயற்கைக்கோள் மைய (ஐசாக்) இயக்குனராக நியமிக்கப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டார்.

