சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில், 12 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதில், ஆந்திர காவல்துறை மீது நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 20 பேரை ஆந்திர மாநிலக் காவல்துறையின் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மனித நேயமின்றி, கொலைவெறியுடன் ஆந்திரக் காவல்துறை நடத்திய இந்தத் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.இக் கொடியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் நீண்டநாட்களாக நடப்பதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. செம்மரங்களை வெட்டிக் கடத்துபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சட்டத்தின்படி தண்டனை பெற்றுத் தருவது தான் காவல்துறையின் பணி ஆகும். அதை விடுத்து, அப்பாவி தொழிலாளர்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத கொலைக் குற்றமாகும். சுட்டுக் கொல்லப்பட்ட 12 தமிழர்களும் ஆந்திராவில் கல் உடைக்கும் பணி மற்றும் மரம் வெட்டும் பணிக்காக ஆள் தேவை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஆவர். தினமும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ஊதியம் கிடைக்கும் என்று ஆசை காட்டி அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவிகளை விசாரணை கூட நடத்தாமல் காவல்துறை சுட்டுக் கொன்றிருப்பதும், தற்காப்புக்காகத் தான் அவர்களைச் சுட்டுக்கொன்றதாக பொய்க் காரணம் கூறுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. செம்மரக் கடத்தலைக் காரணம் காட்டி தமிழகத்தைச் சேர்ந்த 3,000&க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேரூந்து ஒன்றும் மரம் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் செயல்படாத அரசு ஆந்திர அரசைக் கண்டிக்காதது தான் தமிழர்களை சுட்டுக்கொல்லும் அளவுக்கு துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இக்கொலைகளுக்கு தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும். 12 தமிழர்கள் உட்பட 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறையின் துணைத் தலைவர் காந்தா ராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தாக்குதல் குறித்து பணியிலுள்ள உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துவதுடன், கொல்லப்பட்ட 20 தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் ஆந்திர அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மரத்தில் பஸ் மோதி 25 பேர் காயம்: சிறப்புத் தேர்வெழுதிய மாணவர்கள்
வேலூர்: மரத்தில் பஸ் மோதி 25 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் மாணவர்கள் 10 பேர் சிறப்பு நேரத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, ஜவ்வாது மலை காவனூரில், எஸ்.எஸ்.எல்.ஸி.,க்கு தேர்வு எழுதச் சென்ற 20 மாணவ, மாணவியர் உட்பட 50 பயணிகளுடன் அரசு டவுன் பஸ் ஒன்று வாணியம்பாடி சென்றது. நேற்று காலை 7 மணிக்கு புறப்பட்டுச் சென்ற அந்த பஸ்சை ஆலங்காயத்தைச் சேர்ந்த மனோகரன் ஓட்டிச் சென்றார். ஜவ்வாது மலைப் பாதையில், ஆர்.எம்.எஸ். புதூர் வளைவில் காலை 8 மணிக்கு அந்த பஸ் வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மலையில் இருந்து பள்ளத்தில் கவிழ இருந்தது. இதனால் சுதாரித்த ஓட்டுநர் மனோகரன் பஸ்ஸை மலைப்பாதை வளைவில் இருந்த மாமரத்தில் மோதி நிறுத்தினர். இதில், பஸ்சின் முன் பக்கம் கடுமையாக சேதமடைந்தது. விபத்தில் பஸ் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி மாணவியர் உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆலங்காயம் போலீஸார் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் படுகாயமடைந்த, எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவியர் 10 பேருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு அறைக்குச் சென்றனர். அங்கு சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு வாய் மொழியாக அறிவியல் தேர்வில் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்கள் தேர்வு எழுதினர்.
பிளஸ் 2 தேர்வு வேதியியல் வினாத்தாளில் பிழையான 2 கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க முடிவு
சென்னை: பிளஸ் 2 வேதியியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா பகுதியில் 2 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டதால் மாணவ – மாணவிகள் ஒரு மதிப்பெண் பகுதியில் 30 மார்க் முழுதாக எடுக்க முடியாமல் போய் விட்டதாகக் கூறினர். வினா எண் 10, 22 ஆகிய இரண்டிலும் பிழைகள் இருந்ததால் மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் அந்த வினாக்களுக்கு சரியான விடை எது என்பதைத் தேர்வு செய்வதில் குழப்பம் அடைந்தனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் அந்த இரண்டு கேள்விகளுக்கான விடைகளை எழுதத் தெரியாமல் திணறினர். சிலர் முயற்சி செய்தனர். பலர் அதற்கு கொடுக்கப்பட்ட 4 விடைகளில் ஏதாவது ஒன்றை எழுதி வைத்து வந்தனர். இதனால் வேதியியல் தேர்வில் 2 மதிப்பெண் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மாணவர்கள் கூறினர். இது குறித்து துறை அதிகாரிகள் மற்றும் வினாத்தாள் தயாரித்த மூத்த ஆசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில், தவறாக மற்றும் பிழையாகக் கேட்கப்பட்ட இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தவறாகக் கேட்கப்பட்ட 10, 22 ஆகிய ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு எந்த விடை எழுதி இருந்தாலும் மதிப்பெண் கொடுக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கட்சித் தகராறு: தி.மு.க. பிரமுகருக்கு கத்திக் குத்து
சென்னை: கட்சித் தகராறில் தி.மு.க. பிரமுகருக்கு கத்திக் குத்து விழுந்தது. இதில், தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரை போலீசார் தேடிவருகிறார்கள். சென்னை பாடிகுப்பம் சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் டேவிட் (40). தி.மு.க. பிரமுகரான இவர் அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் முரளிக்கும் இவருக்கும் கட்சியில் யார் பெரியவர்கள் என்பது தொடர்பாக மோதல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஞாயிறு அன்று இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் முரளியை டேவிட் அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முரளி, நேற்று தெருவில் நடந்து சென்ற டேவிட்டை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் டேவிட்டின் முதுகு, கை ஆகிய இடங்களில் கத்திக்குத்துக் காயம் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த டேவிட்டை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியைத் தேடி வருகின்றனர்.
மேலும் 2 அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் வெளிப்படும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஈரோடு: மேலும் 2 அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். அதை நான் வெளிக்கொண்டு வருவேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இளங்கோவன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா செய்த ஊழல்களைப் பற்றி அனைத்துக் கட்சிகளும் பேசிக் கொண்டிருக்கின்றன. நாங்களும் அவற்றை உரிய ஆதாரங்களுடன் கூறி வருகிறோம். ஈரோடு மற்றும் சேலத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் செய்த ஊழல்களை விரைவில் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவேன். சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். அதற்கு முன், முதலில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்திவிட்டு பின்னர் கூட்டணி பற்றிப் பேசலாம் என்று கூறினார்.
முருங்கை கிலோ ரூ.10: காய்கறிகள் விலை சரிவு
சென்னை: கடந்த டிசம்பர் மாதம் கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது கிலோ ரூ.10க்கு விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு முருங்கைக்காயின் வரத்து அதிகரித்துள்ளதால், விலை பெருமளவு சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முருங்கைக்காயின் விளைச்சல் அதிகரித்திருப்பதாலும், தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பெருமளவு முருங்கைக்காய் வருவதாலும், விலை குறைந்துள்ளதாகக் கூறிய மொத்த வியாபாரிகள், தற்போது அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
திருச்சி மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: திருச்சியில் மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரத்தில், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி நேரு தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். நேர்மையான அதிகாரிகள் தொடர்ந்து தற்கொலை செய்வதும், தற்கொலைக்கு முயல்வதும் வருத்தம் அளிக்கிறது. மருத்துவ அதிகாரியான நேருவைப் பொருத்தவரை மிகவும் நேர்மையான அதிகாரி; கண்டிப்பானவர்; கடுமையான உழைப்பாளி என்று கூறப்படுகிறது. மிகவும் கண்டிப்பாக இருந்ததால் அதிருப்தி அடைந்த சில மருத்துவர்கள் ஒத்துழைப்பு அளிக்காததாலும், இடைவிடாமல் மருத்துவ முகாம் நடத்தும்படி திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் கட்டாயப்படுத்தியதாலும் அவர் கடுமையான மன உளைச்சல் அடைந்திருந்ததாக கூறப்படுகிறது. உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் அவருக்கு தேவையில்லாத தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை மருத்துவ முகாம் நடத்தி விட்டு நள்ளிரவில் இல்லம் திரும்பிய மருத்துவ அதிகாரி நேருவை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அழைத்து அடுத்த மருத்துவ முகாமுக்கு தயாராகும்படி கட்டாயப்படுத்தியதால் தான் மன உளைச்சலின் உச்சத்தில் உயிரையே மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவ அதிகாரி நேருவின் தற்கொலை முயற்சியையும், பணிச்சுமையாக அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும் ஏதோ தனித்த ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது. தமிழகத்திலுள்ள பெரும்பாலான நேர்மையான மருத்துவர்கள் பணிச்சுமையாலும், அதனால் ஏற்படும் மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மருத்துவப் பணியிடங்கள் கிட்டத்தட்ட முழுமையாக நிரப்பப் பட்டுள்ள போதிலும், மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரிக்க இவையும் முக்கியக் காரணங்கள் என்பதை மருத்துவ வல்லுனர்களே ஒப்புக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவமனைக்கான தேவைகளை தங்களின் உயரதிகாரிகளிடம் கேட்டுத் தான் பெற வேண்டியிருக்கிறது. மருத்துவர்களின் இந்த கோரிக்கைகளை பெரும்பாலான நேரங்களில் உயரதிகாரிகள் செவிமடுப்பதில்லை என்பதால் மருத்துவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தான் நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, மருத்துவமனைகளுக்கு தேவையான பொருட்களை அந்தந்த மருத்துவமனை நிர்வாகமே வாங்கிக் கொள்ள வசதியாக தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்க ஆணையிட்டேன். இப்போதும் அந்த முறை வழக்கத்தில் இருந்தாலும் அந்த தொகை முழுவதையும் மாவட்ட அளவிலான உயரதிகாரிகளே எடுத்துக்கொண்டு, தங்களது விருப்பத்திற்கேற்ப பொருட்களை வாங்கி அனுப்புகின்றனர். இதில் பெருமளவில் ஊழல் நடப்பது ஒரு புறமிருக்க, மருத்துவமனைகளுக்கு வாங்கி அனுப்பப்படும் பொருட்கள் பயன்படாதவையாக உள்ளன. இதனாலும் மருத்துவமனையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்போருக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. எனவே, மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மருத்துவமனைகளை நிர்வகிப்பதற்கு தேவையான அதிகாரங்களை அவற்றின் தலைமை மருத்துவர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் அரசு மருத்துவர்களின் பணிச்சுமையையும், மன உளைச்சலையும் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை; ஆந்திர காவல்துறையின் காட்டுமிராண்டித் தனம்: பண்ருட்டி வேல்முருகன்
சென்னை: செம்மரம் கடத்தியதாகக் கூறி, தமிழகத்தின் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திர மாநில போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது, ஆந்திர மாநில காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 தமிழர்களை அம்மாநில காவல்துறை இன்று சுட்டுப் படுகொலை செய்துள்ளது. ஆந்திரா காவல்துறையின் இந்த கோரத்தாண்டவத்தில் பலியானவர்கள் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவராயினும் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர காக்கை குருவிகளைப் போல சுட்டுப் படுகொலை செய்வது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் சுட்டுப் படுகொலைதான் தீர்வு என்றால் இந்தியாவில் நீதிமன்றங்களும் சிறைச்சாலைகளும் எதற்காக இருக்கிறது? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.. “கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்” என்ற காட்டுமிராண்டித்தனத்தை தமிழக மக்களும் தமிழக காவல்துறையும் கையில் எடுத்தால் ஆந்திரா மாநிலத்தவர் தமிழகத்தில் வாழ முடியுமா? என்பதையும் அம்மாநில அரசும் காவல்துறையும் சிந்திக்க தவறிவிட்டது. ஆந்திரா காவல்துறையினர் இந்த எதேச்சதிகாரப் போக்கு இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத பெருங்கொடுமையாக இருக்கிறது. இதனை இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் மிகவும் வன்மையாகக் கண்டித்து ஆந்திரா அரசு மீதும் அம்மாநில காவல்துறை மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஆந்திரா வனப்பகுதியில் செம்மரம் வெட்டினார்கள் என்று கூறி இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திரா வனத்துறை மற்றும் காவல்துறை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது- வெட்டிப் படுகொலை செய்திருக்கிறது; இந்த சம்பவங்கள் அனைத்தையுமேயே அம்மாநில அரசு ஒட்டுமொத்தமாக மூடி மறைத்துவிட்டது. தற்போது இந்த ஒரு சம்பவம் மட்டுமே வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது. ஆகையால் பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து ஆந்திரா வனத்துறை மற்றும் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட, சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி கூலித் தொழிலாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்துக்கும் உரிய நீதியும் நிவாரணமும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான போலி மோதல்களை ஆந்திரா வனத்துறை, காவல்துறை தொடர்ந்தால் ஆந்திரா- தமிழகம் மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய இனமோதலாக வெடிக்கவே செய்யும் எனவும் எச்சரிக்கிறேன்..
12 தமிழர்கள் படுகொலை: ஆந்திர காவல்துறைக்கு வைகோ கண்டனம்
சென்னை: 12 தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதற்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீவாரு மெட்டு சேசாலம் வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினரால் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. மரங்களை வெட்டிக் கடத்துகின்ற பெரும் திமிங்கலங்களும், பண முதலைகளும் எதிலும் சிக்காமல் தப்பித்துக்கொள்கின்றனர், அன்றாடம் உழைக்கின்ற அப்பாவி கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும். காடுகளில் உலவும் விலங்குகள், பறவைகளைக்கூட சுட்டுப் பொசுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், 12 தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினருக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டு பணி நீக்கம் செய்வதுடன், கைது செய்யப்பட வேண்டும். பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். – என்று கூறியுள்ளார்.
தமிழக தொழிலாளர்கள் படுகொலை: பாஜக., கண்டனம்
சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது மிகப் பெரிய தவறு. தவறு செய்திருந்தால் கைது செய்து விசாரணைதான் நடத்தியிருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே வனப்பகுதியில், செம்மரக் கட்டைகளை வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீஸார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர் பலியாயினர் இவர்களில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தவறு. அவர்கள் தவறு செய்திருந்தால், விசாரணைதான் செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

