கடலூர்: நெய்வேலியில் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 300 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆந்திராவில் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத் தொழிலாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்து முழக்கமிட்டனர். அடுத்து, திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தை முற்றுகையிட்டனர். இதனால், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 300 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கரூர், தருமபுரியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூரில் ஆந்திரப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தப் பட்டது.
உத்தம வில்லனுக்கு தடை கோரி வி.எச்.பி., மனு
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவுள்ள ‘உத்தம வில்லன்’ திரைப்படத்துக்கு விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பு தடை கோரி போலீஸில் மனு அளித்துள்ளனர். இந்து மத உணர்வுகளை ‘உத்தம வில்லன்’ திரைப்படம் புண்படுத்துவதாக அந்த அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். வி.எச்.பி அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஒருங்கிணைப்பாளர் கே.எல்.சத்யமூர்த்தி தலைமையில், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், திங்கள்கிழமை புகார் பதிவு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.எச்.பி அமைப்பினர், ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரணியன் நாடகம் பாடலின் வரிகள் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும், இதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் படத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தப் போவதாகவும் எச்சரித்தனர். லிங்குசாமியுடன் கமல் ஹாசன் தயாரித்து, திரைக்கதை எழுதியுள்ள இந்த ‘உத்தமவில்லன்’ படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். படம் ஏப்ரல் மாத கடைசியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆந்திர துப்பாக்கிச் சூடு: கருணாநிதி கண்டனம்
சென்னை: ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியிலே, செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திரப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட இருபது பேர் பலியாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் பெரிதும் வருத்தத்திற்குரியது. கடந்த பல மாதங்களாக இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும் அது பற்றி இரண்டு மாநில அரசுகளும் கலந்து பேசி அதற்கோர் முடிவு காணாத காரணத்தால் இன்றைக்கு இருபது பேர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இனியாவது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரண்டு மாநில அரசுகளும் முயற்சி எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மறைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு என் ஆறுதலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு மாநில அரசுகளின் சார்பில் உடனடியாக உதவித் தொகை வழங்கிடவும் ஆவன செய்ய வேண்டு மென்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை மீறல் இல்லை என்கிறார் ஆந்திர அமைச்சர்
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள சீநிவாசமங்காபுரத்தில் இன்று காலை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திரா அமைச்சர் சின்னராஜப்பா, இச்சம்பவத்தில் மனித உரிமை மீறல் எதுவும் இல்லை. செம்மரக் கடத்தல்காரர்களும் தொழிலாளர்களும் மரங்களை வெட்டி கடத்த முயன்றபோது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஏப்.15 முதல் உரிமையியல் நீதிபதி காலிப்பணியிட நேர்காணல் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பில்… 2013-2014 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் அடங்கிய 162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 26.08.2014 ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. மேற்காணும் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 01.11.2014, மற்றும் 02.11.2014 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது. மேற்படி பதவிக்கான விண்ணப்பதாரர்களின் இணையதள வழியிலான விண்ணப்பங்களில் தெரிவிக்கபட்டுள்ள விவரங்களை சரிபார்க்கும் பொருட்டும், அவ்விவரங்களின் உண்மைத் தன்மையினை அறியும் பொருட்டும் 04.03.2015 முதல் 11.03.2015 வரை 590 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேர்காணல் தேர்வுக்கு 314 விண்ணப்பத்தார்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேற்படி நேர்காணல் தேர்வு எதிர்வரும் 15.04.2015 முதல் 21.04.2015 வரை சென்னை பிரேஸர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்ககளுக்கான அழைப்பாணை (Notice of Interview) 314 விண்ணப்பத்தார்களுக்கும் விரைவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. தவிர மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தார்கள், மேற்படி அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாளில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் நேர்காணலுக்கு கலந்து கொள்ள தவறும் விண்ணப்பதார்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது. நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட முழுத் தகுதி பெற உறுதி அளிக்கப்பட்டதாக கருத இயலாது. – என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Tamil Nadu Public Service Commission The Tamil Nadu Public Service Commission in its notification dated 26.08.2014 had invited applications from eligible candidates for selection against 162 vacancies for appointment by direct recruitment to the post of Civil Judge in the Tamil Nadu State Judicial Service,2013-2014. The written examination for the said post was held on 01.11.2014 and 02.11.2014. 590 candidates were called for Certificate Verification held during 04.03.2015 to 11.03.2015, to verify the claims made by them in their on-line applications. After verification of certificates, 314 candidates are shortlisted and summoned for the Oral Test scheduled to be held from 15.04.2015 to 21.04.2015 at the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-3. The Notice of Interview has already been sent to all the 314 candidates through Speed Post. They have also been intimated by SMS and E-Mail. The candidates may also download the Notice of Interview from the Commission’s website (i.e. www. tnpsc.gov. in). If the candidates fails to appear for the Oral Test on the designated date and time, they will not be given any further chance to appear for the Oral Test. Summoning for Oral Test should not be construed as a assurance for further process of selection.
பாஸிடிவ்வோ, நெகட்டிவ்வோ… எஃபக்டிவ்வா நடிக்கணும்: ‘மணல்நகரம்’ பட வில்லன் விகே
அண்மையில் வெளியான ‘மணல் நகரம்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விகே. படத்தின் ஒரு நாயகியான தன்ஷிகா மீது மோகம் கோண்டு அவரைப் பின்தொடரும் ஸ்டார் ஓட்டல் முதலாளி மோகன்ராஜாக நடித்திருப்பவர்தான் இந்த விகே..இவரது முழுப்பெயர் வினோத் குமார்.இவர் துபாயில் வசிக்கிறார். இனி அவருடன் பேசலாமே…. உங்கள் அறிமுகம் பற்றி? நான் பிறந்தது வளர்ந்தது கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் ஒரு கிராமம். பெற்றோருக்கு இரும்பு உருக்காலையில் வேலை.எனவே குடும்பம் ஜார்கண்ட் மாநிலம் இடம் பெயர்ந்தது. படிப்பு அங்கு தொடர்ந்து எம் பிஏ முடித்து குடும்பத்து விருப்பத்துக்காக வேலைக்குப் போனேன். அப்படி வேலைக்குப் போன நாடுதான் துபாய். அங்கு ‘காக்ஸ்’ என்கிற பயண நிறுவனத்தில் வேலை. பழம்பெரும் நிறுவனம் அது .எனக்கு அங்கே நல்ல வேலை ‘கிங்ஸ்’ நிறுவனத்திலும் உயர் பொறுப்பை வகிக்கிறேன். படிப்பு வேலை என்றிருந்த நீங்கள் சினிமாவில் எப்படி நுழைந்தீர்கள்? எனக்கு சிறுவயது முதல் கலை, கிரிக்கெட்என்கிற இரண்டிலும் ஆர்வம். ஆடல், பாடல், இசை, கதை, கவிதை, நாடகம் என எல்லாமும் பிடிக்கும். பள்ளி நாட்களில் சிறிதும் கூச்சப் படாமல் மேடையேறி நடித்ததுண்டு. பிறகு நாடகக் குழுக்களில் பங்குபெற்று நவீனநாடகங்களில், வீதி நாடகங்களில் எல்லாம் நடித்திருக்கிறேன். நாடகத்தை இயக்கியும் கூட இருக்கிறேன்.. தபலா, டிரம்ஸ் வாசிப்பேன். இசைக்குழுவில் வாசித்ததுண்டு.டில்லியில்இருந்த போது சில மாடலிங்கும் செய்திருக்கிறேன். இப்படிப்பட்ட நான் எல்லா ஆர்வத்தையும் மனதிற்குள் புதைத்துக் கொண்டு துபாயில் வேலை பார்த்தேன். அங்கு ‘மணல்நகரம்’ படக்குழுவினர் வந்தனர். நடிகர்- இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் வசந்த் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இயக்குநர்அங்குள்ள நடிகர்களை தேர்வு செய்த போது என்னைப் பிடித்துப் போய் இந்த பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். ‘மணல் நகரம்’ படத்தில் நடித்த அனுபவம் எப்படி? அது புதுமையான அனுபவம்தான்.இயக்குநர், தயாரிப்பாளர் எல்லாரும் நண்பர்களாகி விட்டனர் எனவே இலகுவாக இருந்தது. நான் கேமரா முன்பு நடித்தது போக மீதி நேரத்தில் எல்லாவற்றையும் உற்றுப் பார்ப்பேன் ;கவனிப்பேன். அப்போது நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் சொல்கிற பிற வேலைகளையும் செய்து அதன் மூலமும் கற்றுக் கொண்டேன். படம் வெளியான பிறகு எப்படி இருந்த்து ..? படம் பார்த்த பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. ஏதாவது ஒரு படத்திலாவது ஏதாவது ஒருகாட்சியிலாவது நடிக்க மாட்டோமா என்று கனவு கண்டதுண்டு. முழுநீள பாத்திரம் கிடைத்தது மகிழ்ச்சிதான். பத்திரிகை, ஊடகங்களில் என் நடிப்பைப் பாராட்டியுள்ளதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். படம் பார்த்து பலரும் பாராட்டினர். குறிப்பாக என் பெற்றோர், மனைவி பாராட்டிய போது பெருமையாக இருந்தது. அடுத்து உங்கள் திட்டம்? நான் துபாயிலிருந்தாலும் அவ்வப் போது சென்னை வருகிறேன். விடுமுறைகளை அனுசரித்து படங்களில் நடிக்க ஆசை. தமிழில் 2 இந்தியில் 1 எனப் பட வாய்ப்புகள் வந்துள்ளன. பாசிடிவா நெகடிவா எதுவாக இருந்தாலும் எபெக்டிவா நடிக்கவேண்டும் இதுவே என் ஆசை..
கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்கு ஏப்.15 வரை தடை: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று இரு தரப்பு வழக்குரைஞர்களின் வாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வழங்கக் கூடாது என்று இடைக்காலத் தடை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு
புது தில்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான இறுதிகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில், வாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், எதிர்த் தரப்பினரின் வாதம் முடிவடைந்த நிலையில், அரசுத் தரப்பு வாதத்தை வழக்குரைஞர் பவானி சிங் வெள்ளிக்கிழமை தொடர்ந்தார். இந்த நிலையில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் பவானி சிங், எதிர்த் தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், அவரை அரசுத் தரப்பு வழக்குரைஞர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அன்பழகன் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. சுமார் 2.30 மணி நேரம் இந்த வழக்கு விசாரணையின் வாதம் நீடித்தது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான் பாலிநாரிமன் பல நிலைகளில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுள்ளது, இந்த வழக்கின் முழு விவரமும் தெரிந்தவர் பவானி சிங். எனவே, அவர் வழக்கின் விசாரணையில் ஆஜராவதில் தவறில்லை என்று கூறினார். இருப்பினும், மேல்முறையீட்டுக்கு செல்ல வழிமுறைகள் இல்லை, மத்திய அரசின் அனுமதி தேவை என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதத்தை முன்வைத்தார். கர்நாடக அரசுத் தரப்பில் எம்.என்.ராவ், இந்த வழக்கில் கர்நாடக அரசு பவானி சிங்கை நியமிக்கவில்லை, கர்நாடக அரசே இதை எதிர்க்கிறது என்று கூறினார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழகின் தீர்ப்பினை வைத்தே, அரசுத் தரப்பு வழக்கில் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர் குறிப்பிட்ட நீதிமன்றத்தில் மட்டுமே ஆஜராக முடியுமா அல்லது, அது தொடர்பான அனைத்து நீதிமன்றங்களிலும் ஆஜராக முடியுமா என்ற நுட்பமான விவரம் தெரியவரும். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு சட்ட வல்லுநர்கள் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பை தொடர்ந்தே, கர்நாடக உயர் நீதிமன்றமும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதியை அறிவிக்கும்.
தமிழக தொழிலாளர்கள் படுகொலை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை
சென்னை: ஸ்ரீவாரு மெட்டு ஷேசாலம் வனப் பகுதியில் 12 தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், டி.ஜி.பி. அசோக்குமார், உள்துறைச் செயலர் அபூர்வா வர்மா, அரசு ஆலோசகர்கள் ராமானுஜம், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன்
சென்னை: திமுக பொதுச் செயலர் க. அன்பழகனுகு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, திமுக தலைவர் மு.கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

