சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் அறிவித்துள்ளார். சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் இந்த வாரம் துவங்குகிறது. கடந்த வாரம் மலேசிய ஓபன் போட்டி அரையிறுதியில் சீன வீராங்கனை லீ ஸியூரியிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் தான் தர வரிசையில் பெற்ற முதலிடத்தை இழந்தார் சாய்னா. இருப்பினும் இந்த வாரம் தொடங்கும் சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டியில் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்ற வாய்ப்பு சாய்னாவுக்கு இருந்தது. ஆனால் இதில் இருந்து விலகுவதாக சாய்னா அறிவித்துள்ளதன் மூலம் அவர் மீண்டும் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. இருப்பினும், சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தை இழந்ததால் வருத்தமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஆந்திராவில் 20 பேர் சுட்டுக்கொலை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு
சென்னை: திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரம் பகுதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆந்திர தொழிலதிபர்கள் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மாவட்ட எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்களை செம்மரக்கடத்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். இன்றைய சம்பவத்துக்குப் பின்னர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர். இந்த 5 மாவட்டங்களில் இருந்து ஆந்திர வனப் பகுதிக்குள் செல்லும் தமிழக தொழிலாளர்கள் யார்? அவர்கள் எதற்காக காட்டுக்கு செல்கிறார்கள் என்பது பற்றிய தகவலை வனத்துறையிடம் போலீசார் சேகரிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் 5 மாவட்ட போலீசாரும் தங்கள் எல்லையோரங்களில் குறிப்பாக வனப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பாகிஸ்தான் – இலங்கை இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள்
இஸ்லாமாபாத்: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசியபோது, பேரிடர் மேலாண்மை, விளையாட்டு, கப்பல் போக்குவரத்து, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதன் பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, இலங்கை, பாகிஸ்தான் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவை மேம்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று சிறீசேன கூறினார்.
பலரை ஒன்றிணைத்த ஃபேஸ்புக் விவாகரத்துக்கும் உதவி செய்தது!
விருப்பப் படாத ஒரு திருமண பந்தத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது? அதுவும் குறிப்பாக உங்கள் விவாகரத்து கோப்புகளைப் பெறாமல் அடுத்தவர் தவிர்த்து வந்தால்..? இதற்கும் வழிகாட்டியது ஃபேஸ்புக்! அமெரிக்காவின் மன்ஹட்டன் உச்ச நீதிமன்ற நீதிபதி மனது வைத்தது போல், உங்களுக்கும் யாராவது மனது வைத்தால்..! அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் சேனா பிளட் சராகு. இவரது மனைவி லெனோரா பைடூ (26). இந்த தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மன்ஹாட்டன் உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு அளித்திருந்தனர். மேலும், விக்டர் சேனா தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார். தன் கணவர் எங்கே வேலை செய்கிறார் என்று தெரியாத சூழலில், அவரது ‘பேஸ்புக்’ கணக்கு மூலம் சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றத்தில் மனைவி பைடூ மனு அளித்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி மேத்திவ் கூப்பர் ஏற்றுக் கொண்டார். அதை அடுத்து, பேஸ்புக்கில் நோட்டிபிகேஷனாக விக்டருக்கு நோட்டீச் அனுப்பப் பட்டது. ஒருவாரம் அதைத் தவிர்த்தார் விக்டர், ஆனால், மூன்றாவது வாரம் மூன்றாவது முறையாக வந்த நோட்டீஸை திறந்து பார்த்தார். அதன் மூலம் தன் விவாகரத்து தகவல்களை பரிமாறிக் கொள்ள வழி செய்யப்பட்டது. பின்னர் அந்தத் தம்பதிகளுக்கு உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. தன் கணவர் அல்லது துணை எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில், அவரது விலாசம் அறியாத பட்சத்தில், அவர் நிரந்தர முகவரியில் இல்லாமலோ அல்லது வேலையில் இல்லாமலோ இருக்கும் பட்சத்தில், பேஸ்புக் கணக்கின் மூலம் அவரைத் தொடர்பு கொண்டு, சட்டப்படி, இவ்வாறு விவாகரத்து வழங்கி, நீதிபதி ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளார். [Image credit: Alamy] SOURCE: New York Daily News
திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப….
ஒரு பெண்ணை அடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நின்றவனிடம் நீதிபதி கேட்டார், “பஸ்ஸில் டிக்கெட் வாங்கப் போன இந்தப் பெண்ணை ஏன் அடித்தாய்?” அதற்கு அவன் சொன்னான், “பஸ்ஸில் நிறையக் கூட்டமாக இருந்தது. இந்தப் பெண்ணிடம் கண்டக்டர் டிக்கெட் கொடுக்கப் பணம் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸைப் பெரிய பையில் வைத்துவிட்டாள்.”” “அதற்குப் பின் என்ன நடந்தது?” கேட்டார் நீதிபதி.” “திரும்ப வந்து கண்டக்டர் டிக்கெட் கேட்டார். இந்தப் பெண் தன்னுடைய பெரிய பையைத் திறந்தாள். அதில் இருக்கும் குட்டிப் பர்ஸைத் திறந்தாள். பர்ஸின் உள்ளே இருந்த கர்ச்சீப்பை எடுத்துப் பிரித்து அதில் வைத்திருந்த காசை எடுத்தாள். அதுவும் நிறம் மாறிப் போன செல்லாத காசுகள். இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாத கண்டக்டர் அடுத்த பயணிக்கு டிக்கெட் கொடுக்கப் போய்விட்டார். உடனே அவள் கர்ச்சீப்பில் காசை வைத்து அதைக் குட்டிப் பர்ஸில் வைத்து, பர்ஸை பெரிய பையில் வைத்துவிட்டாள்” நீதிபதி எரிச்சலுடன் கேட்டார், “அதைத்தான் முன்பே சொல்லி விட்டாயே. திரும்பத் திரும்ப அதையே ஏன் சொல்கிறாய்?” குற்றம் சாட்டப்பட்டவன் புன்முறுவலோடு சொன்னான், “நான் சொல்வதைக் கேட்பதற்கே உங்களுக்கு இவ்வளவு எரிச்சல் வருகிறதே, இதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்? அதுதான் அடித்தேன்
மலேசியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தில் 17 பேர் கைது
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டார்கள் எனும் சந்தேகத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார். கோலாலம்பூரில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த இவர்களில் இருவர் அண்மையில்தான் சிரியாவில் மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து திரும்பியிருந்தனர் என தேசிய காவல் துறைத் தலைவர் காலித் அபு பக்கர் தெரிவித்துள்ளார். காவல் நிலையங்கள், ராணுவப் பாசறைகள் ஆகியவை அவர்களது திட்டமிட்ட இலக்குகளாக இருந்தன என்று மலேசிய உள்துறை அமைச்சர் அஹ்மத் ஜாகித் ஹமீது தெரிவித்துள்ளார். மலேசியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்ட வழிமுறைகள் குறித்த தீர்மானங்களை மலேசிய அரசு கடந்த வாரம் முன்வைத்தது. அதன் அடிப்படையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப் படுபவகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் காலவரம்பற்ற காவலில் வைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானம், அடக்குமுறை உள்நோக்கம் கொண்டது என்று மனித உரிமை அமைப்புகளும், எதிர்கட்சிகளுக்கும் குறை கூறியுள்ளன.
குறுகிய கால வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரகுராம் ராஜன்
மும்பை: குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மீதான மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பண வீக்க நிலவரம், அன்னியச் செலாவணிக் கையிருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், 2015-16ம் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7.8% எட்டும்; இந்தியாவின் வடக்கு, மேற்குப் பக்கங்களில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக உணவுப் பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ளன. எனினும் ரெப்கோ விகிதத்தில் மாற்றம் இருக்காது. அதுபோல், குறுகிய கால வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவே இருக்கும் ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை. அது 4 சதவீதமாகவே இருக்கும் என்றார்.
பசு எருதை மட்டும் கொல்ல தடை விதித்தது ஏன்?: மகாராஷ்டிர அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
மும்பை: பசுக்களையும் எருதுகளையும் மட்டும் கொல்வதற்கு தடை விதித்தது ஏன்? என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் பசுவதைக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை மீறி யாராவது மாட்டு இறைச்சியை விற்பனை செய்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை அல்லது 10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படலாம். இந்நிலையில் இந்தத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்கள் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் வி.எம்.கானடே, ஏ.ஆர்.ஜோஷி தலைமையிலான அமர்வு, “மகாராஷ்டிராவில் பசுக்கள் மற்றும் எருதுகள் மட்டும் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஏன்? ஆடுகள் உட்பட மற்ற விலங்குகள் கொல்லப்படுவதில் ஆட்சேபணை ஏதும் இல்லையா?” என மாநில அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்குரைஞர் சுனில் மனோகர் “அரசின் இந்த நடவடிக்கை ஒரு தொடக்கம்தான். பசு, எருது ஆகியவற்றைப் போல் மற்ற விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கும். தற்போது பசு, எருதுகள் பாதுகாக்கப்படுவது அவசியமானது என அரசு கருதுகிறது” என்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் அஸ்பி சினாய் “அரசின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது. மேலும், குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. குறிப்பாக, வெளிமாநிலங்களிலிருந்து மாட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த மனுக்கள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வெளிமாநிலங்களிலிருந்து மாட்டிறைச்சி கொண்டு வருவதை உரிமங்கள் வழங்குவதன் மூலம் அனுமதிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் ஏப். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாயமான மலேசிய விமானம் தாழ்வாகப் பறந்ததைப் பார்த்த தீவு வாசிகள்!
மலேசிய விமானம் எம்எச் 370 மாயமாகி ஓர் ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மிகவும் குட்டித் தீவான குடா ஹுவதூ தீவுவாசிகள், அன்றைய தினம் மிகவும் தாழ்வாகப் பறந்த மிகப் பெரிய விமானம் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி காணாமல் போன மலேசிய விமானம் எம்.எச்.370 குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் தீவான குடா ஹுவதூ தீவுவாசிகள், அன்றைய தினம், மிகவும் தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்ததாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் கூறியுள்ளனர். இந்தத் தீவு மிகச் சிறிய தீவு. அந்த விமானத்தைப் பார்த்தது பற்றி அன்றைய தினம் தீவுவாசிகள் பேசிக் கொண்டனர். ஆனால், விமானம் மாயமான தகவல்கள் எதுவும் அவர்களுகு அப்போது தெரியவில்லை. பிறகுதான் விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததாம். அங்குள்ள உள்ளூர் இணைய்தளமான ஹவீருவுக்கு ஒருவர் அளித்த தகவலில், தாங்கள் கடல் விமானங்களைப் பார்த்திருப்பதாகவும், ஆனால், அவ்வளவு பெரிய விமானத்தை அதுவரை பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அந்த விமானத்தின் கதவுகளைக் கூட துல்லியமாகத் தாங்கள் பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர். ஒரு வேளை தாங்கள் பார்த்த அந்த விமானம்தான் மாயமான மலேசிய விமானமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். விமானம் பறந்து சென்ற சில நிமிடங்களில் பலத்த சத்தம் கேட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், அந்தத் தீவுக்கு செய்தித் தாள் ஊடகம் ஒன்று தங்கள் செய்தியாளர்களை அனுப்பி விரிவான தகவல்களைச் சேகரிக்கச் சொல்லியுள்ளதாம்.

