Home Blog Page 6126

பேஸ்புக் பயன்படுத்துபவரா? அவசியம் இதைப் படிங்க!

facebook-siva பேஸ்புக்கில் இருக்கிறீர்களா? காதல், பணத் தேவை என வருபவர்களை தவிருங்கள்! இளைஞர் அட்வைஸ்! ==================================================== விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அருண் பாலாஜி. இவர் பேஸ்புக்கில் தனக்கு நண்பர்களாக இருப்பவர்களிடம், தனது உறவினர் இறந்துவிட்டதாகவும், அவரது இறுதி சடங்குக்கு பணம் தேவைப்படுவதாகவும், விரைவில் அந்தப் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சென்னையைச் சேர்ந்த சிவா என்பவர், தன்னிடம் பணம் இல்லை என்று அருண் பாலாஜியை சந்தித்து, தனது திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை கொடுத்துள்ளார். பின்னர் ஒரு சில மணி நேரங்களில் அருண் பாலாஜியின் செல்போன் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஒரு வாரம் கழித்து அருண் பாலாஜியை தொடர்புகொண்ட சிவா, செல்போன் சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது பற்றியும், உறவினர் இறுதி சடங்கு பிரச்சனையில்லாமல் நடந்ததா என்றும் விசாரித்துள்ளார். மேலும், தனக்கு அந்த மோதிரத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு அவர், மோதிரத்தை அடகு கடையில் இருந்து மீட்க ரூபாய் 3 ஆயிரம் குறைவதாகவும், அதனை தந்தால் மோதிரத்தை மீட்டு விடலாம் என்றும் கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த சிவா, அவரை நேரில் சந்தித்து பணம் கொடுப்பதாக கூறி வரசொல்லியுள்ளார். நேரில் சந்தித்ததும், அருண் பாலாஜி மீது சந்தேகம் அடைந்த சிவா, தனது நண்பரிடம் பணம் வாங்கித் தருவதாக கூறி, கொரட்டூர் காவல்நிலையம் அருகே அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே அருண் பாலாஜி செயல்கள் குறித்து சந்தேகம் அடைவதாக போலீசாரிடம் செல்போனில் ஆலோசனை செய்தார் சிவா. இதனால் கொரட்டூர் காவல்நிலையம் அருகே தயாராக இருந்த போலீசார் அருண் பாலாஜியை மடக்கி பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தியதில், இதேபோன்று பலரிடம் பணம் வசூல் செய்திருப்பதாகவும், பேஸ்புக்கில் நண்பராக வந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி, அப்பெண்ணிடம் பணம் பெற்றுக்கொண்டு பின்னர் அப்பெண்ணின் பேஸ்புக் அக்கவுண்டை பிளாக் செய்துவிட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் மூன்று விதமான அடையாள அட்டைகள் வெவ்வேறு பெயரில் இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிவா கூறுகையில், பேஸ்புக் நண்பர்கள் என கூறிக்கொண்டு காதலிப்பதாக வருபவர்கள், பணத் தேவை என்று வருபவர்களை நம்ப வேண்டாம். கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்கிறார். ஒரு சிலர் செய்யும் தவறுகளால் உண்மையிலேயே பணத் தேவை உள்ளவர்களை நாம் எப்படி அடையாளம் காண்பது என்றும் வேதனை அடைந்தார். ==================================================== #Rajacse நன்றி : ஊழலுக்கெதிரான ஒன்றுபட்ட இந்தியா

புலி ஏன் வெளியே வருகிறது? ஹைதராபாத்துக்கு வரும் உத்தவ் குறித்து ஓவைஸி கேலிப் பேச்சு

ஹைதராபாத்: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஹைதராபாத் வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அக்பரூத்தீன் ஓவைஸி, நீங்கள் ஒரு புலி என்றால், ஏன் புலி வெளியே வருகிறது. நீங்கள் எந்த விதமான புலி, என்றால் மும்பையில் மட்டுமே உறுமும் புலி.. என்று கூறியுள்ளார். பந்த்ரா கிழக்கு தொகுதியில் ஏப்,11 அன்று நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேச வந்திருந்தார் ஓவைசி.

ஏமனில் உள்ள தங்கள் நாட்டு மக்களையும் மீட்க இந்தியாவிடம் கோரிக்கை

தில்லி: ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்தியா எடுத்த வெற்றிகரமான நடவடிக்கையைப் பார்த்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 26 நாடுகள் பாராட்டு தெரிவித்ததுடன், தங்களுக்க்கும் இந்தியா உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் பணிக்கு ஆபரேஷன் ரஹத் என்று பெயரிடப்பட்டது. ஏமனின் அண்டை நாடான சவுதி அரேபியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு இருப்பதால் இந்தியர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்படவில்லை. எல்லாம் சரியாகவே நடந்தது. மீட்புப் பணிகளை பிரதமர் அலுவலகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் கண்காணித்து வருவதால் மீட்புப் பணிகள் தொய்வின்றி நடந்தன. இதுவரை ஏமனிலிருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படை, கப்பற்படை, ராணுவம் என அனைத்துத் தரப்பு ஒத்துழைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் இப்போது இது சாத்தியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் தீப்பெட்டியுடன் தான் செல்வேன்; யாரும் தடுத்ததில்லை: அசோக் கஜபதி ராஜு

ashok தான் விமானத்தில் செல்லும்போது தீப்பெட்டியுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், தன்னை யாரும் தடுத்ததில்லை என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் விமான பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியதுடன், பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பினர். அப்போது விமானத்தினுள் தீப்பெட்டி போன்ற பொருட்களை எடுத்து வர அனுமதிக்கலாமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அந்தத் துறையின் அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, “எனக்கு புகைப்பழக்கம் உள்ளதால் நான் எங்கே சென்றாலும் தீப்பெட்டி அல்லது லைட்டருடன்தான் செல்வேன். ஆனால் விமானத்தில் ஏறும்போது, அவற்றை பறிமுதல் செய்துவிடுவார்கள். கடந்த ஆண்டு அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என்னை அதிகாரிகள் லைட்டர் அல்லது தீப்பெட்டியுடன் சென்றாலும் அனுமதிக்கின்றனர். இப்போது கூட எனது பையில் லைட்டர் இருக்கிறது. இங்கிருக்கும் செய்தியாளர்கள் எனது பேச்சை இப்போது பிரச்னையாக்க நினைப்பார்கள். ஆனால் நான் கூற வருவது என்னவென்றால், பாதுகாப்பு அம்சங்கள் அர்த்தமற்றதாக இருக்கக் கூடாது. உலகளவில் எங்கும் தீப்பெட்டியை உபயோகித்ததால் விபத்தும் ஏற்பட்டதாக தெரியவில்லை” என்றார். விமான பயணத்தில் தீயை உருவாக்கும் எந்தப் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்த கருத்து அங்கிருந்தவரை அதிர்ச்சி அடைய வைத்தது.

தோனி பிச்சை எடுப்பார் என்ற தந்தையின் சாபத்தில் உடன்பாடில்லை: யுவராஜ்

தோனி குறித்து தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறிய கருத்துகளுக்கு, பதிலளித்துள்ள யுவராஜ் சிங், தனது தந்தையின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார். தோனி குறித்து மோசமாக கருத்து தெரிவித்து பேட்டியளித்திருந்தார் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ்சிங். தோனி ராவணனைப் போன்ற ஆணவக்காரர், அவர் ஒருநாள் பிச்சைதான் எடுப்பார், என்பது போன்ற கருத்துகளை கூறியிருந்தார். இதுகுறித்து டிவிட்டரில் பதிலளித்துள்ள யுவராஜ் சிங், ஊடகங்களில் வெளியான செய்திக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் தோனி தலைமையில் விளையாட விருப்பம் உள்ளது என்று ஏற்கெனவே கூறிவிட்டேன். தோனியை சந்தித்து அவர் தந்தையானதற்கு வாழ்த்துகளை தெரிவிக்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார். ஏற்கெனவே ஒருமுறை யோக்ராஜ் இவ்வாறு தோனி மீது குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தபோதும், யுவராஜ் சிங் அந்த விவகாரத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறியிருந்தார்.

கொம்பன் படத்தில் விருப்பமில்லாமல் நடித்தேன்: லட்சுமி மேனன்

komban success meetகொம்பன் படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் நாயகன் கார்த்தி, நாயகி லட்சுமி மேனன் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இதில் லட்சுமி மேனன் பேசியதாவது, ‘‘முதலில் என்னோட தனிப்பட்ட ஒரு விஷயத்தை விளக்கி விடுகிறேன். எல்லோரும் கேட்டுக் கொண்டே இருந்தீர்கள், எப்போது தான் நீங்கள் படித்து முடிக்கப் போகிறீர்கள் என்று! இப்போது உங்களுக்கெல்லாம் சொல்லி கொள்கிறேன், என்னுடைய படிப்பு, பரீட்சை எல்லாம் முடிந்து விட்டது. ‘கொம்பன்’ பட ஷூட்டிங் நடக்கும்போது என்னோட ஒவ்வொரு காட்சியை எடுக்கும்போதும் இயக்குனர் முத்தையா அவ்வளவு கஷ்டப்பட்டு, விரிவாக சொல்லிகிட்டே இருப்பார். நான் தான் நடிக்கிறேனே, எதற்கு இவர் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சொல்லி தருகிறார் என்று அப்போதெல்லாம் நினைப்பேன். அவர் அப்படி சொல்லி தரும்போது விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன். ஆனால் அதன் பலன் இப்போதுதான் தெரிகிறது. இதுவரை நான் நடித்த படங்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு வரவேற்பு கொம்பன் படத்திற்கு கிடைத்துள்ளது. ஆனால் நான் இதுவரைக்கும் ‘கொம்பன்’ படத்தை பார்க்கவில்லை. இதுவரை பரீட்சை நடந்து வந்தது அதனால்தான். சீக்கிரமா பார்த்து விடுவேன் என்றார்.

உத்தம வில்லன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: மறுபடியும் ரிலீஸ் தேதி மாறுமா?

Uthama Villain poster5கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்துள்ள படம் உத்தமவில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். உத்தம வில்லன் படம் இம்மாதம் 2ம் தேதி வெளிவரவிருந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால், படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச தொழிலாளர் தினமான மே 1 ம் தேதி, படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் மாஸ் படம், விஜய் சேதுபதி, ஆர்யா நடிக்கும் புறம்போக்கு படம் மே 1ம் தேதி ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. உத்தமவில்லன் படத்திற்கு தடை கோரி, இந்து அமைப்பு சார்பில், முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ரிலீஸ் தேதி மாறாமல் இருந்த சரிதான்…

காமெடி ட்ராக்கிற்கு மாறும் ரஜினி

rajini35லிங்கா பிரச்சனையில் சிக்கி கொண்ட ரஜினி அந்த பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்குள் படாதபாடு பட்டார்.

லிங்கா பிரச்சனை சுமூகமாக முடிந்து விட்டதால் அடுத்த படத்தின் இயக்குனர் யார்? ஹீரோயின் யார் என்ற கேள்வி பரரபரப்பாகி விட்டது. இந்நிலையில் ரஜினி அதிசய பிறவி, தில்லு முல்லு போன்ற முழு நீள காமெடி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதோடு பிரபல இயக்குனர்கள் இல்லாமல் புதுமுக இயக்குனர்களுக்கு கால்ஷீட் தர தயாராகி வருகிறார்.

இதுவரை 20 கதைகள் கேட்டுள்ளாராம். ஆனால் எந்த கதையை தேர்ந்தெடுப்பது என்பது குறித்த ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். எனவே, ரஜினியின் அடுத்த பட  அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பலாம்.

செம்மரம் : குருதியில் கரைந்த பேராசை

semmaramஇன்று காலை, ஆந்திரக் காடுகளில் ‘கடும் தடையை’ மீறி செம்மரம் வெட்டச் சென்ற பலர் வனத்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தமிழர். அதிலும் குறிப்பாக, பலர் எனது பகுதியைச் சேர்ந்தவர்கள். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்தவன் என்ற முறையில், இந்த செம்மரங்கள் வெட்டப்படுவதைக் குறித்து, நான் அறிந்த சில விவரங்களை தர விழைகிறேன். செம்மரங்களின் மதிப்பும், காடுகளில் அதன் இருப்பின் அவசியம் குறித்தும் இப்போதெல்லாம் நீங்கள் அறிவீர்கள் என்பதால் நேரடியாக விஷயத்துக்குள் செல்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னர், நான் பள்ளி மாணவனாக இருந்த போதும், இதே போன்றதொரு சூழல்! செம்மரத்துக்குப் பதிலாக சந்தன மரங்கள். எங்கள் ஜவ்வாது மலைத் தொடர் முழுக்க நிறைந்து கிடந்த சந்த்ன மரங்களை இப்படித்தான் வெட்டிக் கடத்தினார்கள். இப்படி மரங்களை வெட்டி, மலையில் இருந்து வெளியே கொண்டு வந்து தர, வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வருவதில்லை. அதே மலைக்கிராம மக்களுக்கு ஆசைகளைத் தூண்டி இதை செய்ய வைப்பார்கள். வனத்துக்குப் பாதுகாவலனாக இருக்க வேண்டிய வனவாசிகளே, பெரும்பணத்துக்காகவும், மது புட்டிகளுக்காக அதைச் செய்தனர் இப்போது, அடையாளம் காட்டக்கூட ஒரு சந்தன மரம் இல்லாமல், ஜவ்வாது மலைத்தொடரே மொட்டையடிக்கப் பட்டு விட்டப் பின்னர், வியாபாரிகளின் கவனம், அடுத்ததாக செம்மரத்தின் மீது திரும்பியுள்ளது. செம்மரம், தற்போது ஆந்திரக் காடுகளில் மட்டுமே வெட்டக்கூடிய அளவில் பெரிதாகவும், மறைவாகவும் இருக்கிறது. சரி! அந்த மரங்களை வெட்ட ஆட்கள் தேவையாச்சே?! ஏற்கனவே பல ஆண்டுகள் வெற்றிகரமாக மரம் வெட்டிய அனுபவம் கொண்ட ஜவ்வாது இமலைவாசிகளைப் பிடித்தனர். சந்தன மரங்களை வெட்டிப் பெரும் பணம் ஈட்டி, அதை செலவு செய்து விட்டு மீண்டும் பழைய ஏழ்மை நிலைக்கு வந்து நிற்கும் அந்தத் தலைமுறை ஆட்களுக்கு இது பெரிய வாய்ப்பாகப் பட்டது. பெரும் குழுவினராகப் புறப்பட்டனர். ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 6000 ரூபாய் கூலி. தொடர்ந்து பத்து நாட்கள் வேலை. இரவில் சராயம், ஆடு மற்றும் இன்னும் பல சப்ளைகள். முன்பு வெறும் கோடலி, கை ரம்பம் வைத்து மரம் வெட்டியவர்கள் கைகளில் ஹிட்டாச்சி, யமஹா கம்பனிகளின் மின் அறுப்பான் தரப்பட்டது. ஜவ்வாது மலைகளை அடுத்து, ஆந்திர சமவெளிக்காடுகள் கற்பழிக்கப் பட்டது. முப்பது வருடத்துக்கு முன்னர் போலில்லாமல், வனம், மரங்கள் குறித்த விழிப்புணர்வு பெரிதாக வந்திருக்கும் காலக்கட்டமாச்சே இது. ஆந்திர மற்றும் மத்திய வனத்துறையினர் இந்த செம்மரக் கடத்தலை தடை செய்து, கடுமையான காவலும் இட்டனர். சென்ற வருடத்தில், முன்னூறுக்கும் மேலான கூலித் தொழிலாளர்கள் அடர்ந்த காட்டுக்குள் மரங்களை வெட்டிக் கொண்டிருக்கும் போது, அங்கே ஒரு ஜீப்பில் தனியாக மாவட்ட வன அதிகாரி சென்று மாட்டிக் கொள்ள, அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்தேக் கொன்றனர், நாம் அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் எனக் குறிப்பிடும் இந்த வனவாசிகள். அதில் தமிழர்களே எண்ணிக்கையில் அதிகம். அந்தச் சம்பவம், மரக் கடத்தலின் மொத்த தட்ப வெப்ப நிலையையும் மாற்றி விட்டது. ஆந்திர அரசு, செம்மரக் கடத்தலுக்கு எதிராக அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றது. அதன்படி, காடுகளுக்குள் மனிதர்கள் நடமாட்டமே மொத்தமாகத் தடைச் செய்யப் பாட்டது. மீறினால், அவர்களை சுட்டுக் கொல்வதற்கு சட்டரீதியான ஒப்புதல் கிடைத்தது. வனக்காவலர்கள் கூடுதலாக நியமிக்கப் பட்டு, அவர்களுக்கு நாட்டு எல்லைப் பாதுகாவலர்களுக்கு வழங்குவதைப் போன்ற, முழு ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் வழங்கப் பட்டது. அது மட்டுமல்லாமல், பல்வேறு அரசு சாரா குழுக்களை அமைத்து, அவர்களை தமிழகத்தில் உள்ள ஜவ்வாவது மலைத் தொடர் கிராமங்களில் வந்து விழிப்புணர்வு முகாம்களை நடத்தினர். நாடகங்களை நடத்தினர். காசுக்கு ஆசைப்பட்டு, மரம் வெட்ட ஆந்திரா வந்தால் அவர்கள் வீட்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப் படுவார்கள் என்பதை மிகத் தெளிவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நாடங்கள் மூலம் விளக்கிச் சொன்னர். தமிழ்க அரசும் கூட இதில் கவனம் எடுத்து, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். உதாரணத்துக்கு, பெரும் குழுவாக பேருந்தில் சித்தூர்,திருப்பதி சென்றால் வனக் காவலர்கள் செய்தி அறிந்து, அங்கே சென்று அவர்களை மீண்டும் திருப்பி அனுப்பியதெல்லாம் உண்டு. இத்தனையையும் மீறி, இன்று ஆந்திரக் காட்டுக்குள் செம்மரம் வெட்டும் கும்பல் ஒன்று சுடப்பட்டு இருபது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இயற்கை நியதிப்படி, செத்தவர்களில் பெரும்பாலானோர் எங்கள் திருவண்ணாமலை மாவட்டக் கூலித் தொழிலாளர்கள்தாம். ஆனால், அவர்களை ‘அப்பாவித் தொழிலாளர்கள்’ என்று நான் சொல்ல விரும்ப வில்லை. செம்மரம் வெட்டச் சென்றவர்கள், அதில் இருந்த அபாயத்தை முழுதாக அறிந்திருந்தார்கள். அதற்கேற்றார் படி அவர்களுக்கு விலையும் மிக அதிகமாக நிர்ணயக்கப் பட்டிருந்துள்ளது. முழுக்க, முழுக்க தங்கள் பேராசையின் காரணமாகவே இந்த சட்டவிரோதமான காரியத்துக்கு அவர்கள் சென்றிப்பார்கள். இனி, இந்த மரணங்கள் அரசியலாக்கப்பட்டு விடும். ஆந்திர மிருகங்கள், அப்பாவித் தமிழர்களை வேட்டையாடிக் கொன்று விட்டது என (தற்போது வேலையில்லாமல்) இருக்கும் தமிழின போராளித் தலைவர்களும் ஆவேசமாக பேட்டியளிப்பர். போராடுவார்கள். எங்கோ சொகுசாக அமர்ந்தபடி, இவர்களை எய்த பெரும் பண முதலாளிகள் என்ற வில்லை விடுத்து, அப்பாவி அம்புகளுக்கா தண்டனை? என்ற பெரிய சோஷியலிஸ தர்க்கத்தை முன்வைத்து, பிரச்சனையை முடிவே இல்லாத வேறு தளத்துக்குத் தள்ளி விட பல துடிப்பான இளம் நெஞ்சங்கள் துடிக்கும். மனித உரிமைக் குழுக்கள் வேறு உள்ளனவே! பரிதாபமாக நிர்கதியற்று நிற்கும் காடுகளின் நியாயங்கள் புறக்கணிக்கப்படும். அதைப் பாதுகாக்க, பலமுறை தனது உயிரைத் தந்த வனப் பாதுகாவலர்களின் குடும்பங்கள் மறக்கப் படும். சட்டப்படியான தடையை மீறி, கடுமையான எச்சரிக்கையை மீறி, மாநிலம் விட்டு மாநிலத்துக்கு, மரம் வெட்டும் (சமயத்தில் மனிதனையும்) ஆயுதங்களை எடுத்துச் சென்றவர்கள் பக்கம் நின்று மனித உரிமைக்காகக் கதறும். திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளும் கூட உண்மையைப் பேச முடியாத ஒரு உணர்வுப்பூர்வமானச் சூழல் இங்கு உருவாக்கப்படும். இத்தகைய வீர,தீர செயல் புரிந்து நாட்டுக்காக தன்னுயிரை விட்ட, இந்தத் தமிழர்களுக்கு ஐந்து லட்சம், பத்து லட்சம் என நிவாரண உதவிகள் வழங்கப் படும். படுகொலைச் செய்யப்பட்ட இந்த மாவீரர்கள் அவரவர் கைகளில் கோடாரியைப் பிடித்தபடியான சிலைகளை, அவரவர் கிராமங்களின் நுழைவாயில்களில் நிறுவி, அதை அமைச்சர்களும், ஆட்சித் தலைவர்களும் திறந்து வைக்காதவரை, இந்த நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நியாயம் என்று ஒன்று ஒளிந்து கொண்டாவது இருக்கும். ஜெய்ஹிந்த். கட்டுரை: – எஸ்கேபி. கருணா facebook

பிளஸ் 2 பொருளாதாரத் தேர்வில் தவறாகக் கேட்கப் பட்ட 2 கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள்: நீதிமன்றம்

madurai-branch-high-court மதுரை: பிளஸ் டூ பொருளாதார்த் தேர்வுத் தாளில் ஒரு மதிப்பெண் வினாவில் தவறாகக் கேட்கப்பட்ட இரு வினாக்களுக்கு விடையளித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தலா 2 மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்ட தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.சந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் மார்ச் 27ல் பிளஸ் டூ பொருளாதாரத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் வினாத்தாள் முறைப்படி தயாரிக்கப்படவில்லை. மேலும், பொருளாதாரத் தேர்வின் மாதிரி வினாத்தாளுக்கு எதிராக அமைந்திருந்தது. வினாத்தாளில் பகுதி ஏ-யில் 50 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும், பகுதி பி-யில் 3 மதிப்பெண் கொண்ட 15 வினாக்களில் 10 வினாக்களுக்கும், பகுதி சி 10 மதிப்பெண் வினாக்களில் 6 வினாக்களுக்கும், பகுதி டி-யில் 20 மதிப்பெண் வினாக்களில் 6-ல் 3 வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும். புத்தகக் குழு தயாரித்த மாதிரி வினாத்தாளில் பகுதி சி-யில் கேட்கப்பட்டிருந்த 10 மதிப்பெண் வினா, தேர்வின்போது வழங்கப்பட்ட வினாத்தாளில் பகுதி டி-யில் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் புரியாமலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், பதிலளிக்க இயலாதவாறும் இருந்தன. தமிழ் வழி மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாளில் பகுதி ஏ-யில் கேட்கப்பட்டிருந்த 18, 20-வது வினாக்கள் தவறானவை. திறமையான மாணவர்கள்கூட இவ்விரு வினாக்களுக்கும் பதிலளிக்க முடியாது. 20 மதிப்பெண் வினாக்கள், 10 மதிப்பெண் வினாவாக இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க மாணவர்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால் மாணவர்கள் சரியாகத் தேர்வை எழுதவில்லை. ஏற்கெனவே, 2013-ம் ஆண்டிலும் பிளஸ் டூ தேர்வில் பல பாடங்களில் வினாத்தாள் குழப்பமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்து மாணவ, மாணவியர் சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே, பொருளாதார வினாத்தாள் முறையற்ற வகையில் தயாரிக்கப் பட்டிருப்பது குறித்து மூத்த பொருளாதார ஆசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்தவும், பொருளாதாரத் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இதில் முடிவெடுக்கும் வரை, பொருளாதாரத் தேர்வுத்தாளை மதிப்பீடு செய்யத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக் குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் திங்கள் அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். விசாரணைக்குப் பின், பிரிவு ஏ-யில் கேட்கப்பட்டிருந்த ஒரு மதிப்பெண் வினாவில் 18 மற்றும் 20-வது வினாக்களுக்கு தலா 1 மதிப்பெண் வீதம் விடையளித்த அனைத்து மாணவர்களுக்கும் தலா 2 மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவ்விரு வினாக்களுக்கு விடையளித்த அனைவருக்கும் தலா 2 மதிப்பெண் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.