திருச்சி: திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறுகிறது. புகழ்பெற்ற சக்தி திருத் தலமாக விளங்கும் உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் சித்திரைப் பெருந்திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா ஏப். 5-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6-ம் தேதி காப்புக் கட்டுதலும், இரவு அம்மன் கேடயத்தில் திருவீதியுலாவும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு பூத வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து கயிலாய, காமதேனு, சிம்மம், யானை, அன்னம் குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் வெக்காளியம்மன் வீதியுலா வருதல் நடைபெறுகிறது: சித்திரைப் பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 14-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடும் நடைபெற உள்ளது. 10-ம் திருநாளான ஏப்ரல் 15-ம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலா வருதலும், 11-ம் திருநாளான ஏப்ரல் 16-ம் தேதி அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.
சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு
சென்னை: சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் மறுமதிப்பீடு முடிவுகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முன்னர் முட்டாள்; இப்போது ஹிட்லர்: கேஜ்ரிவாலை சித்திரித்து சுவரொட்டிகள்!
புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஹிட்லராக சித்திரித்து மத்திய தில்லியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஏப்.1 ஆம் நாள் அன்று, முட்டாள் தினத்தை கேஜ்ரிவால் தினம் என்று சித்திரித்து சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. முன்னர் ஒட்டப் பட்டதைப் போலவே ப்தற்போது ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை “பகத் சிங் கிராந்தி சேனா’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளதாக சுவரொட்டியில் அச்சிடப்பட்டுள்ளது. தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவற்றில் “அரவிந்த் கேஜ்ரிவாலுடன் நெருக்கமாக இருந்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டு யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், லோக்பால் குழுவில் இருந்து நீக்கப்பட்ட ராம்தாஸ், அஜித் ஜா, ராகேஷ் சின்ஹா, பேராசிரியர் ஆனந்த் குமார் வரையில் இன்னும் பலர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது தில்லியில் பிரசாரத்தில் கடந்த ஆண்டு அரவிந்த் கேஜரிவால் ஈடுபட்ட போது அவர் மீது காலணி எறியவும், மை வீசவும் “பகத்சிங் கிராந்தி சேனா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் முயன்றனர்.
ஆட்டோ சங்கர் கூட்டாளியான ஆயுள் கைதிக்கு மதுரையில் இன்று திருமணம்
சென்னை: ஆட்டோ சங்கர் கூட்டாளியும், ஆயுள் தண்டனைக் கைதியுமான ஆட்டோ செல்வராஜுக்கு புதன்கிழமை இன்று மதுரையில் திருமணம் நடைபெறுகிறது. இதனால், அவருக்கு 35 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கும்படி பாளையங்கோட்டை மத்தியச் சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்டோ சங்கர் தூக்குக்குப் பின்னர் ஆட்டோ செல்வராஜ், மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஆயுள் தண்டனைக் கைதி ஆட்டோ செல்வராஜை திருமணம் செய்ய உள்ளதாகவும், எனவே, அவருக்கு 2 மாதம் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் கலாராணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், நான் மதுரையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் நர்சாக பணி செய்கிறேன். என் தாயாரின் தம்பியும், என்னுடைய தாய்மாமாவுமான செல்வா என்ற செல்வராஜ் ஆயுள் தண்டனைக் கைதியாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார். இவருக்கும், எனக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி மதுரை, ஸ்ரீநிதி ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த திருமணத்துக்காக செல்வராஜூக்கு 2 மாதம் விடுப்பு வழங்க வேண்டும் என்று அவரது மைத்துனர் சிறைத்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார். அந்த மனு பரிசீலனையில் உள்ளது. எனவே, எங்களது திருமணத்துக்காக, மணமகனான என் மாமாவுக்கு 2 மாதம் விடுப்பு வழங்க சிறைத்துறை கூஅம்டுதல் டி.ஜி.பி., பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் – என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், மனுதாரருக்கும், ஆயுள் கைதி செல்வராஜுக்கும் மதுரையில் உள்ள ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளது என்பதை மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி செய்துள்ளார். இதனடிப்படையில் இந்த மனுவை ஏற்றுக்கொள்கிறேன். பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர், கைதி செல்வராஜுக்கு ஏப்ரல் 6 தேதி முதல் மே 10ஆம் தேதி வரை சாதாரண விடுப்பு வழங்க வேண்டும். செல்வராஜ், மே 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் சிறைக்கு சென்றுவிட வேண்டும். அதே நேரம், கைதிகளுக்கு இதுபோன்ற விடுப்பு வழங்கும்போது, மேற்கொள்ளப்படும் சட்டப்படியான நடவடிக்கையை சிறை நிர்வாகம் மேற்கொள்ளலாம் என்றார்.
வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து மூதாட்டி கொலை: நகை கொள்ளை
சென்னை: சென்னை, அம்பத்தூரில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து, மூதாட்டியைக் கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் பிரகாஷ் நகர் பாண்டியன் தெருவைச் சேர்ந்த குருநாதன் மனைவி நிர்மலா(65). இவர்களது வீட்டின் மாடியில் வீடு காலியாக இருந்தது. இந்த நிலையில் தம்பதியிடம் செவ்வாய்க்கிழமை மதியம், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், காலியாக உள்ள வீட்டைப் பார்க்க வந்ததாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய குருநாதன், மாடியிலுள்ள வீட்டைத் திறந்து காட்டும்படி நிர்மலாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து முதல் மாடிக்கு நிர்மலா அழைத்துச் சென்றார். பின்னர் திரும்பவில்லை. இதனிடையே வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிர்மலாவின் மகன் அவரைத் தேடி மாடிக்குச் சென்றார். அப்போது, நிர்மலா இறந்து கிடந்தது தெரியவந்தது. வீட்டைப் பார்ப்பது போல் உள்ளே சென்ற மர்ம நபர், நிர்மலாவின் கழுத்தை நெரித்துக் கொன்று, அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையை கொள்ளை அடித்து தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.
ஆந்திர பஸ்கள் மீது தாக்குதல்; கல் வீச்சு; கொளுத்த முயற்சி
சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரக் கட்டைகளை வெட்டியவர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் ஆந்திர மாநிலத்துக்கு எதிரான போராட்டம் வெடித்தது. அதன் ஒரு பகுதியாக, ஆந்திர மாநில பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. பல இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன், தீயிட்டுக் கொளுத்தவும் முயற்சி நடந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆத்மகுரு என்ற இடத்தில் இருந்து சென்னையை நோக்கி வந்த ஆந்திர மாநில பஸ்சை ராமு (55) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் பயணிகள் 40 பேர் இருந்தனர். அந்த பஸ் தமிழக எல்லையான தடாவை அடுத்த பூடி கிராமம் அருகே நேற்று மாலை 6 மணி அளவில் வந்த போது 3 மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியபடி உருட்டுக்கட்டைகளுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஆந்திர மாநில அரசு பஸ்சை வழிமறித்து பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். திடீரென பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டை பஸ் மீது வீசி தீ வைக்க முயற்சித்தனர். பொதுமக்கள் வேகமாக செயல்பட்டு தீ பிடிக்காமல் தடுத்தனர். மேலும், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அசோக்குமார் தெரிவித்தார். சென்னையிலும் போலீசாரை உஷார் படுத்தி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் தொடர்புள்ள நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா அலுவலகம் போன்றவற்றில் போலீசார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் உருட்டுக்கட்டையுடன் நுழைந்த சிலர், திருப்பதி, சித்தூர், நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஐதராபாத் போன்ற ஊர்களுக்குச் செல்லும் ஆந்திர மாநில பஸ்களை குறிவைத்து தாக்கினர். 8 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பஸ்களை உடைத்ததாக, தமிழக முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பாலன், அதியமான் என இருவர் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து சென்னையில் இருந்து ஆந்திராவுக்குச் செல்ல வேண்டிய அனைத்து பஸ்களும் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டன. ஆந்திராவில் இருந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரவேண்டிய ஆந்திர மாநில பஸ்களும் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டன.
மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிப்பாதைக்கு ஒப்புதல்
புது தில்லி: மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிப் பாதைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசி முதல் சுல்தான்பூர் இடையிலான 200 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 56-ஐ ரூ.4,400 கோடியில் நான்கு வழி நெடுஞ்சாலையாக மாற்றவும், மதுரை-ராமநாதபுரம் இடையிலான 115 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 49-ஐ ரூ.1,400 கோடியில் நான்கு வழிப்பாதையாக மாற்றவும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் தென் பகுதிகளை மதுரையுடன் இணைக்கும் இந்த நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு
புது தில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 107 சதவீத அகவிலைப்படியை 113 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஆறாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசில் பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது.
ஊடகங்களால் கடவுள் ஆன தோனியின் கர்வத்துக்கு ஒரு நாள் முடிவு வரும்: யுவராஜ் தந்தை
புது தில்லி: ஊடகங்களால் கடவுள் ஆனவர் தோனி. அவருக்கு ஒரு நாள் முடிவு வரும் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங். அண்மையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங்குக்கு இடம் கிடைக்காமல் போனது. இதற்கு கேப்டன் தோனியே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார் யோக்ராஜ் சிங். இந்நிலையில் அவர் ஹிந்தி டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் … தோனி ஒன்றுமில்லாதவர். ஊடகங்கள் தான் அவரை கிரிக்கெட்டின் கடவுள் போல் சித்திரித்து இருக்கிறார்கள். ஊடகங்கள்தான் அவரை மிகப்பெரிய வீரராக ஊதிப் பெரிதாக்கியுள்ளன. ஆனால் அத்தகைய பெருமைக்கு தோனி தகுதியானவர் இல்லை. அவர் ஒன்றுமே இல்லாதவராக இருந்த காலங்கள் இருந்தன. ஆனால் தற்போது அவர் தன்னை வளர்த்த ஊடகங்களையே கிண்டல் செய்கிறார். அவர் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஊடகங்களையும், அவர் எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் கைதட்டும் ரசிகர்களையும் கேலி செய்கிறார். உண்மையில் நான் நிருபராக இருந்திருந்தால் அந்த இடத்திலேயே தோனியை அடித்திருப்பேன். தோனி கர்வம் பிடித்தவர். ராவணனின் கர்வம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது போல் தோனிக்கும் ஒருநாள் வரும். ராவணனுக்கும் மேலாக தோனி தன்னை நினைத்துக் கொண்டுள்ளார். மற்ற கிரிக்கெட் வீரர்கள் தோனியைப் பற்றி என்னிடம் கூறும் போது அவமானமாக உள்ளது. தோனியைக் குறை சொல்பவர்கள் அவர் மீதான பொறாமை காரணமாக சொல்கிறார்களோ என்று முதலில் நினைத்தேன். ஆனால் அவர்கள் தோனி குறித்து கூறுவதைப் பார்த்தால் அவரைப் போன்ற மனிதரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் 4 ஆவது வீரராகக் களம் இறங்கத் தயாராக இருந்தார். ஆனால் தோனி அவரை நிறுத்திவிட்டு, தான் களம் கண்டு பெரிய ஹீரோவானார். அப்போது அவர் ஏன் முன்கூட்டியே களம் இறங்க வேண்டும்? தன்னை பெரிய வீரராகக் கருதும் தோனி இந்த உலகக் கோப்பை போட்டி அரை இறுதியில் 4 ஆவது வீரராகக் களம் இறங்காதது ஏன்? -என்று கேள்வி எழுப்பினார். ஆனால் தன் தந்தையின் கருத்துக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் யுவராஜ் சிங்.
“பெரியவாளின் கூட்டு ரெசிபி”
‘எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான் பேசமுடியும், உபநிஷத் பேசினா, எனக்கு என்ன புரியும்!..” “பெரியவாளின் கூட்டு ரெசிபி” சொன்னவர்-ஸ்ரீ இ.எஸ்.வேதபுரி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (ஒரு சிறு பதிவு) எனக்கு சமையல் சொல்லிக் கொடுத்திருக்கா பெரியவா! (என்ன,அப்படிக் கண்ணை முழிச்சுப் பார்க்கிறேள்? பெரியவா, எப்போ சமையல் கட்டுக்குப் போயிருக்கான்னு தானே? பொஸ்தகம் படிக்காமலே அவாளுக்கு எல்லாம் ஸ்புரிக்கும்.) “கூட்டு செய்யத் தெரியுமோ”ன்னு ஒரு நாள் கேட்டா. தெரியாதுன்னேன். “நான் சொல்றபடி செய்யி.கூட்டு மிச்சமே இருக்காது..” “ஜலம் வெச்சு பயத்தம் பருப்புப் போடு. ..கொஞ்சம் வெந்தவுடனே, காயைப் போடு, ..நன்னா வெந்தப்புறம் கடலைப் பருப்பு, கொத்தமல்லி விதை,தேங்கா அறைச்சு விடு, ..மொளகு சீரகம் போடு, ..இப்படிப் பண்ணினா, கூட்டு மிச்சமே இருக்காது..” பெரியவா சொன்னபடியே பண்ணுவேன். அப்போ கூட இருந்த யதிதிகளும் சாப்பிடுவா, கூட்டு முழுக்க ஆயிடும். ‘எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான் பேசமுடியும், உபநிஷத் பேசினா, எனக்கு என்ன புரியும்!..

