சென்னை: எதிர்காலத்தில் ஸ்டாலின் தான் திமுக தலைவர் ஆவார் என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியபோது, தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார் என்ற பேச்சே இப்போது எழவில்லை. எதிர்காலத்தில் ஸ்டாலின்தான் தி.மு.க. தலைவர் என கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர் மிகுந்த தகுதியும், திறமையும் வாய்ந்தவர். கட்சியை திறம்பட முன்னணியில் வழிநடத்தி செல்கிறார். கட்சியில் எந்த குறிப்பிட்ட கோரிக்கையையும் அவர் வலியுறுத்தவில்லை. தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கட்சிப் பணி ஆற்றி வருகிறார். எனவே உரிய நேரத்தில் அவர் தலைமைப் பொறுப்பு ஏற்பதற்கான அறிவிப்பு வெளியாகும். அதில் எந்தவித பிரச்னையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அரசியல் மட்டும்தான் எதிர்காலம் என்று நான் நினைக்கவில்லை. எனது கட்சிக்கு சிறந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என் மீதான வழக்கைப் பொறுத்தவரை கலைஞர் டி.வி.யில் நான் ஒரு இயக்குனராக இல்லை. அந்த டி.வி. தொடர்பான எந்தவித ஆலோசனைகளிலும் முடிவுகளிலும் நான் ஈடுபடவில்லை. என்று கூறியுள்ளார் கனிமொழி.
தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் சார்பில் ஆந்திர காவல் துறையை கண்டித்து ஆர்பாட்டம்
20 அப்பாவி ஏழை கூலித் தொழிலாளர்களை முன்கூட்டியே கைதுசெய்து கட்டிபோட்டு சுட்டுப்படுகொலை செய்த ஆந்திர காவல்துறையை கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வலியுறுத்தியும், படுகொலையானவர்களின் குடும்பத்தார்களுக்கு மத்திய மாநில அரசுகள் அதிகபட்ச உதவித்தொகைகள் வழங்கிடவும், உயிரிழந்த குடும்பத்தார்க்கு அரசு வேலை வழங்கிட வலியுறுத்தியும், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் சார்பில் காலை 11மணியளவில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மாநிலத்தலைவர் பூமொழி தலைமையில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைப்பொதுச்செயலாளர் ராஜி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் விஜயகுமார், சேலம் மாவட்டத்தலைவர் மணி, சேலம் மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ், சேலம் மாநகரத்தலைவர் ராமு, மாநகர பொருளாளர் ஆட்டோ பிரகாஷ், மாநகர துணைத்தலைவர்கள் குமரேசன்,லட்சுமணன்,லெனின், மாநகர துணைச்செயலாளர் மெய்யனூர் பிரகாஷ், ரவி, மாநகர நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், முரளி, திருவெற்றி (எ) திருமுருகன், செந்தில் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்று ஆந்திர அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கும் எதிராகவும் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கடுமையான கண்டன முழக்கங்கள் எழுப்ப பட்டன..
தர்மபுரி அருகே கோயில் விழாவையொட்டி களைகட்டிய மாட்டுச்சந்தை
தர்மபுரி : தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற அதியமான்கோட்டையில், காளியம்மன் கோயில் விழா துவங்கியதையொட்டி, நேற்று மாட்டு சந்தை கூடியது. வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் மாடுகள் விற்பனைக்கு குவிந்ததால் சந்தை களைக்கட்டியது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் பழமையான காளியம்மன் கோயிலில், நேற்று முன்தினம் திருவிழா துவங்கியது. காளியம்மனுக்கு வரும் 30ம் தேதி வரை சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடக்கிறது. நேற்று கோயில் தேர் இழுக்கப்பட்டு, ஊரின் அருகே நிலை நிறுத்தப்பட்டது. 3வது நாளாக இன்றும் தேர் இழுக்கப்படுகிறது. விழாவையொட்டி அதியமான்கோட்டையில், 15 நாட்களுக்கு நடக்கும் மாட்டு சந்தை, நேற்று முன்தினம் கூடியது. 2வது நாளாக நேற்று ஆயிரக்கணக்கில் மாடுகள் விற்பனைக்காக குவிந்தன. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. கி5 ஆயிரம் முதல் கி1 லட்சம் வரை பல்வேறு ரகத்தை சேர்ந்த மாடுகள் வந்தன. இதனால் மாட்டுச்சந்தை களைகட்டியது.
கேரளா செல்லும் சரக்குவாகனங்கள் புளியரை சோதனைசாவடியில் நிறுத்தம்
கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை பி.ஆர்.பி. நிறுவனம் மீது மேலும் 6 வழக்கு பதிவு: சகாயம் அதிரடி
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பல்வேறு கட்ட விசாரணை நடத்தி வருகிறார். குவாரிகளுக்கு அவர் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட போது குவாரி அதிபர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரிடம் புகார் மனுக்களை அளித்தனர். அதன்படி மதுரை கிழக்கு தாலுகா, ஜாங்கிட்நகர், திருமோகூர், ராஜாக்கூர் ஆகிய பகுதி மக்கள் அளித்த கிரானைட் புகார் மனு குறித்து விசாரிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரிடம் ஐஏஎஸ்அதிகாரி சகாயம்தெரிவித்தார். அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஒத்தக்கடை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாள் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் கிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி. நிறுவனம் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பி.ஆர்.பி. நிறுவனம் மீது ஒத்தக்கடை போலீசார் மேலும் 6 வழக்குகளை இன்று பதிவு செய்துள்ளனர். கிரானைட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே பி.ஆர்.பி .நிறுவனம் மீது 100–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நம்பர் ப்ளேட் இல்லாமல் பைக் ஓட்டிய தோனிக்கு ரூ.500 அபராதம்
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, இரு தினங்களுக்கு முன்னர் ராஞ்சி தெருக்களில் தனது பைக்கை ஓட்டி மகிழ்ந்தார். ஆனால், அவர் போக்குவரத்து விதிகளை மீறி நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டினார் என்று ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். தனது சொந்த ஊரான ராஞ்சியில் தோனி திங்கட்கிழமை அன்று பாதுகாவலர்கள் இன்றி தான் மிகவும் விரும்பும் புல்லட் பைக்கில், தனியாக சுமார் 3 மணி நேரம் சுற்றி வந்தார். இந்நிலையில் அவரது வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததைப் பார்த்த போக்குவரத்து போலீசார் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து, அதற்குரிய சலானை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இரு சக்கர வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். ஆனால் தோனியின் பைக்கில் முன்புறத்தில் ஓர் ஓரமாக பதிவு எண் எழுதப்பட்டிருந்தது. பதிவு செய்யப்படாத நம்பர்கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் செல்வோரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, தோனியும் மாட்டியுள்ளார். இது குறித்து போக்குவரத்து போலீஸார் கூறுகையில், நாங்கள் தோனியின் வீட்டுக்கு அபராத சலான் அனுப்பி வைத்தோம். அவரது குடும்பத்தார் அபராதத் தொகையை செலுத்திவிட்டனர். அவர் தெரியாமல் விதிகளை மீறிவிட்டார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் என்றனர்.
கேஜ்ரிவாலுக்கு கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பிக் கேட்கும் தொண்டர்
புதுதில்லி: தான் கேஜ்ரிவாலுக்கு முன்னர் கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பக் கேட்கிறார் அக்கட்சி நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர். ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான தில்லியைச் சேர்ந்த குந்தன் ஷர்மா என்பவர் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு பைக்கும், நீல நிற வேகன் ஆர் கார் ஒன்றும் பரிசளித்திருந்தார். அந்தக் காரைத்தான் அரவிந்த் கேஜ்ரிவால் தினமும் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்குள் அண்மைக் காலமாக நடந்து வரும் உள்கட்சி குழப்பங்களில் அதிருப்தி அடைந்த குந்தன் ஷர்மாவுக்கு, கட்சியின் அரசியல் விவகாரக் குழுவிலிருந்து யோகேந்திர யாதவையும் பிரஷாந்த் பூஷணையும் நீக்கியது மிகவும் வேதனையைக் கொடுத்துள்ளது. இதனால் தான் கொடுத்த பைக், கார், நன்கொடை நிதி அனைத்தையும் திரும்ப ஒப்படைக்குமாறு குந்தன் ஷர்மா, கேஜ்ரிவாலை தனது டிவிட்டர் பக்கம் மூலம் கேட்டுக் கொண்டார். “கட்சியின் லோக்பால் படி விசாரணை நடத்தாமல் யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷணை வெளியேற்றியது ஏன்?. தில்லியில் ஆட்சியை அமைப்பதற்காக நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை, தில்லியில் ஆட்சி அமைப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள்,” என்று குந்தன் ஷர்மா தெரிவித்துள்ளார். நான் பரிசாக அளித்தவற்றை திரும்பக் கேட்கும் அளவுக்கு தரம் தாழ்ந்த நபரில்லை. ஆனாலும், கேஜ்ரிவாலின் கவனத்தை அடையவே இதனை நான் தெரிவித்துள்ளேன்.. என்று குந்தன் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், குந்தன் ஷர்மா, ஆம் ஆத்மி கட்சிக்கு தான் வழங்கிய நன்கொடை குறித்த தகவலை தெரிவிக்கவில்லை.
ஐபிஎல் சீஸன் 8 இன்று துவங்குகிறது
கோல்கத்தா : ஐ.பி.எல். சீசன் 8 கிரிக்கெட் போட்டி கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மாவும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு காம்பிரும் தலைமை தாங்குகின்றனர். நேற்று பலத்த மழை பெய்ததால் இன்றைய தொடக்க ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமா? என்ற அச்சம் உள்ளது. இந்த ஆட்டம் சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் ஆகிய டிவிக்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
மாநிலங்களவை கூட்டத் தொடரை ஏப்.23ஆம் தேதி கூட்ட முடிவு
புது தில்லி: மாநிலங்களவை கூட்டத் தொடரை வரும் 23ஆம் தேதி கூட்டுவது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு முடிவு செய்தது. தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சி.சி.பி.ஏ.) கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கௌடா, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் அனந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பான அலுவல்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாநிலங்களவையை வரும் 23ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடத்துவதற்கு பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பட்ஜெட் கூட்டத் தொடரில், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும், தனது 2ஆவது அமர்வில் 13 நாள்கள் அலுவல்கள் கொண்டதாக இருக்கும். மே மாதம் 1ஆம் தேதி மே தினமும், மே மாதம் 4ஆம் தேதி புத்த பூர்ணிமாவும் வருவதால், அந்த இரு நாள்களும், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளுக்கும் விடுமுறை தினங்களாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நெல்லை – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள்
கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 06002: ஏப்ரல் 9, மே 7 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ரயில் எண் 06003: ஏப்ரல் 10, மே 8 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, விருதாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை தொடங்குகிறது.

