Home Blog Page 6123

தாய்லாந்து சுற்றுலா கப்பலில் தீ: 110 பேர் பத்திரமாக மீட்பு

பாங்காக்: அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய, தாய்லாந்தின் தென்மேற்கு கடற்பகுதியில் தாய்லாந்து சுற்றுலா கப்பல் ஒன்று புதன்கிழமை இன்று திடீரென தீப் பிடித்தது. ஆயினும் அதில் இருந்த 100க்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக அவர்களில் பெரும்பான்மையாக இருந்த வெளிநாட்டவர்கள் பத்திரமாக கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர். தாய்லாந்தின் புகழ்பெற்ற இரண்டு கடற்கரை சுற்றுலா தலங்களான கிராபியில் இருந்து புக்கெட் சென்று கொண்டிருந்தது ஓ நாங் பிரின்ஸஸ் 5 ஃபெரி கப்பல். அப்போது இது தீ விபத்தில் சிக்கியது. உடனே மாற்றுக் கப்பல் மூலம், 110 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, க்ராபிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தை செல்போன்கள், கேமராக்களில் படம் பிடித்துக் கொண்டுள்ளனர். இதனை காவல் துறை கலோனியல் சொம்பொங் திப்-அபகுல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர், எனினும் விபத்துக்கான முழு விவரமும் தெரியவராது, காரணம் அந்தக் கப்பல் நீரில் மூழ்கிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறைபிடித்த 200 பேரை விடுவித்தனர் ஐ.எஸ். பயங்கரவாதிகள்

பாக்தாத்: தாங்கள் சிறைப்பிடித்த 200க்கும் அதிகமானவர்களை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் புதன்கிழமை இன்று விடுதலை செய்தனர். வடக்கு இராக்கில் பிடிபட்ட யாஸிதிக்களை இன்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் விடுவித்தனர். அவர்கள் வயதான காரணத்தாலோ, இயலாமையினாலோ விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் கிறிஸ்துவர்கள். இதனை இராக்கிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏமனில் இருந்து 11 இந்தியர்கள் பாகிஸ்தானால் மீட்பு

போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டில் இருந்து 11 இந்தியர்களை பாகிஸ்தான் மீட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் கூறுகையில், பாகிஸ்தான் கப்பல் மூலம் 11 இந்தியர்கள் மீட்கப் பட்டு ஏமனில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று கராச்சி வந்தடைந்தனர் என்றார். இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நம் நாட்டின் சிறப்பு விருந்தாளிகளாக வந்துள்ள அவர்கள் 11 பேரும் தனி விமானம் மூலம் தில்லிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதாக அப்துல் பாசித் தெரிவித்தார்.

மேகதாது அணை முயற்சி: கண்டித்து ஏப்.9-ல் ரயில் மறியல் போராட்டம்

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு புதிய அணைகள் கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்து 7 மாவட்டங்களில் நாளை ஏப். 9-ல் ரயில் மறியல் போராட் டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னணியிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநிலப் பொதுச் செய லாளர்கள் பெ.சண்முகம், வே.துரைமாணிக்கம் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகள் கட்ட கர்நாடகம் முயற்சிக்கிறது. இதனைத் தடுக்க முற்படாமல், மத்திய அரசு வேடிக்கை பார்க்கி றது. எனவே, கர்நாடகம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும், புதிய அணைகள் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை உடனே அமைக்க வலியுறுத்தியும் நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங் களில் ரயில் மறியல் போராட்டங்களும், மத்திய அரசு அலுவலகங்களின் முன் மறியல் போராட்டங்களும் நடைபெறவுள்ளன.

வடிவமைத்த என்னிடம் துடைப்ப சின்னத்தை ஒப்படையுங்கள்: ஆம் ஆத்மி அதிருப்தியாளர்

aap புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் மோதல் பல்வேறு நிலைகளில் வெடித்து வருகிறது,. ஒருவர் தான் பரிசாக வழங்கிய கார், பைக், நன்கொடையைத் திரும்பத் தாருங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார். இன்னொருவர், நான் தான் கட்சிச் சின்னத்தை வடிவமைத்தேன், அதை என்னிடம் திரும்ப ஒப்படையுங்கள் என்கிறார் இன்னொருவர். பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நி்லையில், ஆம் ஆத்மி கட்சி சின்னத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப் பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி துவக்கப்பட்டபோது, அக்கட்சிக்காக துடைப்பம் சின்னத்தை வடிவமைத்த சுனில் லால், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆம் ஆத்மியின் கட்சி சின்னம் என்னால் வடிவமைக்கப்பட்டது, எனக்குச் சொந்தமானது. எனவே அதை மீண்டும் என்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2015-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இணையதள விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை இணைக்க வேண்டும். இதற்கு தத்தகல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம்: மோடி அறிவிப்பு

புது தில்லி: விவசாயிகளுக்கு கூடுதல் சலுகையாக, கூடுதல் நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மீட்கும் விதமாக இந்த உதவியை மோடி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் நாட்டில் பரவலாக கனமழை பெய்தது. பருவம் தவறிப் பெய்த இந்த கனமழை காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர்களில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர்கள், பழ வகைகள் ஆகியவை நாசம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மீட்கும் விதமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை சீரமைக்க வங்கிகளையும், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, சாதகமான முறையில் செயல்படுமாறு காப்பீட்டு நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தில்லியில் முத்ரா வங்கியைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியபோது, மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும். இதுவரை பயிர்ச் சேதம் 50 சதவீதம் என்று இருந்தால் மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என்பது மாற்றப்பட்டு, 33 சதவீதம் ஆகியிருந்தாலேயே நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்கும். விவசாயிகளுக்கு உதவுவதற்கான இரண்டாவது முக்கியமான முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். பயிர்ச் சேத நிவாரணம் முன்பு இருந்ததை விட 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது முன்னதாக ஒருவர் பயிர்சேதத்துக்காக ரூ. 1 லட்சம் பெற்று இருந்தால், இப்போது ரூ. 1.5 லட்சம் பெற முடியும் என்றார் பிரதமர் மோடி. கடந்த வருடம் விவசாயிகள் குறைந்த மழையினால் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் பருவம் தவறிப் பெய்த மழை மற்றும் பனிமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சேத விவரங்களை மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அனுப்பட்ட அமைச்சர்களிடம் கேட்டு அவர்களுடன் ஆலோசித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.  

கேரளாவில் பொது வேலைநிறுத்தம் : தமிழக எல்லையில் லாரி–பஸ்கள் நிறுத்தம்

கேரளாவில் பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக தமிழக எல்லையில் லாரி, பஸ்கள் நிறுத்தப்பட்டன. கேரள மாநிலத்தில் வாகனங்களுக்கான பிரீமியம் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் இன்று பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. ரப்பர் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொது வேலை நிறுத்தத்திற்கு விவசாயிகள் சங்கமும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக கேரள மாநிலத்தில் இன்று பஸ், கார், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கேரளாவில் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பஸ்கள் இன்று நிறுத்தப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு செல்லும் லாரி, கார் மற்றும் வாகனங்கள் தமிழக–கேரள எல்லையான புளியறை சோதனை சாவடி அருகே நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. இதைப்போல செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு ரப்பர், தோட்ட வேலைகளுக்கு செல்லும் ஏராளமான தொழிலாளர்களும் இன்று வேலைக்கு செல்லவில்லை. புளியறை சோதனைசாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறை தீர்வு முகாம்

ஏப்ரல் மாதம் 11ம்தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்  நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டாவது சனிக்கிழமையன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, 11ம்தேதி திருநெல்வேலி வட்டத்தில் அணைத்தலையூர் கிராமத்திலும், பாளையங்கோட்டை வட்டத்தில் முத்தூர் கிராமத்திலும், சங்கரன்கோவில் வட்டத்தில் சிதம்பராபுரம் கிராமத்திலும், தென்காசி வட்டத்தில் மத்தளம்பாறை கிராமத்திலும், செங்கோட்டை வட்டத்தில் சீவநல்லூர் கிராமத்திலும், சிவகிரி வட்டத்தில் மேட்டுப்பட்டி கிராமத்திலும், வீ.கே.புதூர் வட்டத்தில் கண்ணாடிகுளம் கிராமத்திலும், ஆலங்குளம் வட்டத்தில் காவலாக்குறிச்சி கிராமத்திலும், அம்பாசமுத்திரம் வட்டத்தில் கீழ்ஏர்மாள்புரம் கிராமத்திலும், நாங்குனேரி வட்டத்தில் கள்ளிகுளம் கிராமத்திலும், இராதாபுரம் வட்டத்தில் பரமேஸ்வரபுரம் கிராமத்திலும் பொது  விநியோகத் திட்டம் குறித்த குறை தீர்வு முகாம் நடைபெறவுள்ளது. வட்ட அளவிலான கிராமங்களில் நடைபெறும் இக்குறைதீர் முகாமில், அந்தந்த வட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு  தெரிவித்துள்ளார்.

10 ஆண்டு பழைமையான டீசல் வாகனங்களுக்கு தில்லியில் தடை

delhi-Traffic தலைநகர் தில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெட்ரோல் வாகனங்களுக்கும் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. பெருகி வரும் வாகனங்களால் காற்று மாசடைந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தில்லி போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபட முக்கியக் காரணியாக இருப்பவை வாகனங்கள். காற்று மாசு படுவதைத் தடுக்க வெளிநாடுகள் சிலவற்றில் கடுமையான சட்டங்கள் உள்ளன. அதுபோல், தில்லியிலும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தில்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிக் கொண்டிருக்கும் டீசல் வாகனங்களின் போக்குவரத்திற்கும்,15 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் பெட்ரோல் வாகனங்கள் இயங்கவும் தடை விதித்துள்ளது. மேலும், அதுபோன்ற வாகனங்களின் பதிவுத் தகவல்களை போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது,