புது தில்லி: விவசாயிகளுக்கு கூடுதல் சலுகையாக, கூடுதல் நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மீட்கும் விதமாக இந்த உதவியை மோடி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் நாட்டில் பரவலாக கனமழை பெய்தது. பருவம் தவறிப் பெய்த இந்த கனமழை காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர்களில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர்கள், பழ வகைகள் ஆகியவை நாசம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மீட்கும் விதமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை சீரமைக்க வங்கிகளையும், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, சாதகமான முறையில் செயல்படுமாறு காப்பீட்டு நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தில்லியில் முத்ரா வங்கியைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியபோது, மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும். இதுவரை பயிர்ச் சேதம் 50 சதவீதம் என்று இருந்தால் மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என்பது மாற்றப்பட்டு, 33 சதவீதம் ஆகியிருந்தாலேயே நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்கும். விவசாயிகளுக்கு உதவுவதற்கான இரண்டாவது முக்கியமான முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். பயிர்ச் சேத நிவாரணம் முன்பு இருந்ததை விட 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது முன்னதாக ஒருவர் பயிர்சேதத்துக்காக ரூ. 1 லட்சம் பெற்று இருந்தால், இப்போது ரூ. 1.5 லட்சம் பெற முடியும் என்றார் பிரதமர் மோடி. கடந்த வருடம் விவசாயிகள் குறைந்த மழையினால் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் பருவம் தவறிப் பெய்த மழை மற்றும் பனிமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சேத விவரங்களை மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அனுப்பட்ட அமைச்சர்களிடம் கேட்டு அவர்களுடன் ஆலோசித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
We are leaving no stone unturned to provide relief to farmers facing problems due to unseasonal rain. https://t.co/8QDIyUelDh
— Narendra Modi (@narendramodi) April 8, 2015