புது தில்லி: அரியானாவில் நடந்த ஆசிரியர் தேர்வு வாரிய ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்திய தேசிய லோக்தளத்தின் தலைவரான ஓம் பிரகாஷ் சௌதாலாவின் பதவிக் காலத்தில் (2000த்தில்) 3,206 இளநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி போலி ஆவணங்களைக் கொடுத்தும், ஆவணங்களைத் திருத்தியும் ஏராளமானோரை பணி நியமனம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. இந்த ஊழல் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் கடந்த 2008-ம் ஆண்டு சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் சௌதாலா உட்பட 53 பேரும் குற்றவாளிகள் என்று தில்லி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சௌதாலாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தது. இந்நிலையில், ஓம் பிரகாஷ் சௌதாலா, அவரது மகன் அஜய் சௌதாலா உள்ளிட்டோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சிறைத் தண்டனையை எதிர்த்து சௌதாலா உள்ளிட்டோர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், இன்று சௌதாலா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் உறுதி செய்தது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்: ஈ.வி.கே.எஸ். வரவேற்பு
சென்னை: அதிமுக., மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வரவேற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற் பொறியாளர் கடந்த பிப்.22ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதற்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டுமென அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென்றும் அமைச்சரின் உதவியாளர்களும் விசாரிக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கட்சிப் பதவியில் இருந்து நீக்கம்
சென்னை; அ.தி.மு.க.வின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி தற்போது தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்துவருகிறார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை, கூடுதல் பொறுப்பாக முக்கூர் என். சுப்பிரமணியம் கவனிப்பார் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
குருக்ஷேத்ரம் அருகே விமானப் படை விமானம் விபத்து
சண்டிகார்: ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரம் அருகே – ஷாக்பாத் டவுனில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பைலட் கீழே குதித்து உயிர் தப்பினார். இது குறித்து போலீசார் கூறுகையில் “விமானப்படை விமானம் வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. முதல் கட்டத் தகவல்படி, விமானம் வயல்வெளியில் விழுவதற்கு முன்பாக பைலட் கவசத்துடன் குதித்து உயிர் தப்பினார். இருப்பினும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விமானி மதியம் அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டார். விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்று விமானியை காப்பாற்றி விமானப்படைத் தளத்திற்கு கொண்டு வந்தனர்.
வயலுக்குள் வழுக்கிச் சென்ற விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
நேபாளத்தில் துருக்கி விமானம் ஒன்று வழுக்கிச் சென்றபடி வயலுக்குள் பாய்ந்தது. இதில் பயணம் செய்த 238 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இன்று காலை 7:40 மணியளவில் துருக்கியில் இருந்து நேபாளம் வந்த துருக்கி ஏர்லைன்சுக்குச் சொந்தமான ஏ330 ரக பயணிகள் விமானம் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, கடும் பனிப்பொழிவு இருந்ததால், விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியது. அப்போது விமானத்தில் 227 பயணிகள், 11 விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் வயல் வெளிக்குள் வழுக்கிச் சென்றதை அடுத்து விமானத்தின் அவசரக் கதவு திறக்கப்பட்டது. அதன் வழியாக உடனடியாக அனைத்து பயணிகளும் காயமின்றி மீட்கப்பட்டனர். இஸ்தான்புல் நகரில் இருந்து காத்மண்டு வந்த இந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் என்றும், விமானம் பனி மூட்டம் காரணமாக விமான ஓடுதளத்திற்கும், டாக்சி பாதைக்கும் இடையில் இறக்கப்பட்டதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானத்தில் முன் பக்க சக்கரங்கள் மற்றும் முன் பகுதி பெரிதும் சேதமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=kG7czm9EjK8″]
ஆப்கனுக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன் குவிப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறும் லீக் சுற்றின் 26வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று, பந்து வீசத் தீர்மானித்தது. இதன் படி களத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, துவக்கம் முதலே ஆப்கன் பந்து வீச்சை சிதறடித்தது. வார்னர் அதிரடி காட்டி, 133 பந்துகளில் 5 சிக்சர், 19 பவுண்டரிகளுடன் 178 ரன் குவித்தார். ஸ்மித் 95 ரன்னும், மேக்ஸ்வெல் 39 பந்துகளில் 7 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 88 ரன்னும் எடுத்தனர். இதனால் அணியின் ரன் குவிப்பு அதிகரித்தது. 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன் குவித்தது.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி அன்பழகன் மனு
பெங்களூர்: கர்நாடக உயர் நீதிமன்றத்தில், திமுக பொதுச் செயலர் அன்பழகன் தரப்பில் இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கக் கோரப்பட்டிருந்தது. பெங்களூர் தனி நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. தனி நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங்கே மேல்முறையீட்டு விசாரணையிலும் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளக் கோரியும் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் கர்நாடக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராகி வாதாட அனுமதிக்கக் கூடாது என்றும், மேல் முறையீட்டு மனு விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணையை வருகிற 9–ந் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்நிலையில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் கர்நாடக நீதிமன்றத்தில் இன்று புதிதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில்… ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு வரும் வரை ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்க 1 வார கால அவகாசம் தேவை என்று பவானி சிங் கூறியதையடுத்து இதன் மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்தார் நீதிபதி.
பாகிஸ்தான் 129 ரன் வித்தியாசத்தில் வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேப்பியர் நகரில் நடைபெற்ற பி பிரிவு ஆட்டத்தில் இன்று 25 வது லீக் சுற்றுப் போட்டியில், பாகிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாகத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, துவக்கம் முதல் நிதானமாக விளையாடியது. துவக்க வீரர் நஸிர் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த அஹ்மத் செஷாத், ஹரிஸ் சொஹெல் இருவரும் நிலைத்து நின்று ஆடினர். செஷாத் 93 ரன் எடுத்தார். சொஹெல் 70 ரன் எடுத்தார். ஷொஹெப் மசூத் 455, மிஸ்பா ஆட்டம் இழக்காமல் 65, உமர் அக்மல் 19, அப்ரிதி 21 என ரன் குவித்தனர். இந்த இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் வீரர்கள் மொத்தமாக 10 சிக்ஸர் அடித்தனர். இதனால் 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. இதை அடுத்து 340 ரன் என்ற இமாலய இலக்குடன் யுஏஇ அணி களம் இறங்கியது. பின்னர் ஆடத் தொடங்கிய யுஏஇ அணி, சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. நடு வரிசையில் ஷைமன் அன்வர் 62 ரன்னும், குர்ரம் கான் 43 ரன்னும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். அம்ஜத் ஜாவத் 40 ரன் எடுத்தார். இருப்பினும் அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 210 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 129 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பட்ஜெட் குறித்த ஜெயலலிதா கருத்து ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ எனக் காட்டுகிறது: கருணாநிதி
சென்னை: மத்திய ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் குறித்து எல்லோரையும் முந்திக் கொண்டு வரவேற்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல் எதையோ சூசகமாகத் தெரிவிக்கிறது என்று கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை: பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி சில சந்தேகங்களைக் கேட்டபோது, அரசு வழக்கறிஞர் பவானி சிங் அதற்குப் பதில் சொல்லாமல் மழுப்பிய நிலையில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரி அரசு வழக்கறிஞரிடம் சென்று கோபித்துக் கொண்டதாகச் செய்தி வந்திருக்கிறதே, இது எதைக் காட்டுகிறது? அவர்கள் நடந்து கொண்டது, “நான் அடிப்பதைப் போல அடிக்கிறேன், நீ அழுவதைப் போல அழு” என்பதைப் போலத் தான் இருக்கிறது. குற்றவாளிகள் தரப்பினருக்காக வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கும்போது, அவ்வப்போது அதற்கு ஆதாரத்துடன் பதில் அளிக்க வேண்டிய அரசு வழக்கறிஞர், எதுவும் தெரியாததைப் போல அமர்ந்திருக்கிறார். நீதிபதியே அதைப் பலமுறை நேரடியாகச் சுட்டிக் காட்டியும், அரசு விசாரணை அதிகாரியும், அரசு வழக்கறிஞரும் அதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. நடப்பது, அ.தி.மு.க. அரசு, அந்த அரசின் கீழ் பணி யாற்றுபவர் விசாரணை அதிகாரி. அ.தி.மு.க. அரசுக்காக வாதாட அ.தி.மு.க. அரசினால், வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர்தான் பவானி சிங். அதுவும் பவானி சிங் கோரிக்கை எதையும் வைக்காத நிலையில், அவசர அவசரமாக அரசு வழக்கறிஞராக நியமிக்க ஒப்புதல் தந்ததுதான் அ.தி.மு.க. அரசு. அந்த பவானி சிங்தான் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கில் வாதம் செய்யப் போகிறார்! ஜெயலலிதா ஏற்கனவே கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவதற்காக மனு தாக்கல் செய்தபோது, இந்தப் பவானி சிங்தான் முதலில் அவரை ஜாமீனில்விடக் கூடாது என்றும், பிறகு ஜாமீனில் விடலாம் என்றும் இரண்டு வெவ்வேறான கருத்துகளை நீதிமன்றத்தில் தெரிவித்தவர். தற்போது அவர் எவ்வாறு வாதாடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சுரேஷ் பிரபுவின் மத்திய ரயில்வே பட்ஜெட்டையும், அருண் ஜெட்லியின் பொது பட்ஜெட்டையும், எல்லோரையும் முந்திக் கொண்டு ஜெயலலிதா வரவேற்று அறிக்கை கொடுத்தது எதைக் காட்டுகிறது? தமிழக அரசின் சார்பில் முதலமைச்சராகவும், நிதியமைச்சராகவும் இருக்கும் பன்னீர்செல்வம், மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் பற்றியோ, பொது பட்ஜெட் பற்றியோ கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், ஏன் வாயையே திறக்காத நிலையில், வீட்டிலிருந்து வெளியேயே வராத, முன்னாள் முதலமைச்சர், நீதிமன்றத்தால் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், எல்லோரையும் முந்திக் கொண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகளை வரவேற்று அறிக்கை கொடுத்திருப்பதும், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு எல்லோரையும் முந்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருப்பதும், மத்திய அரசின் மதவாத ஆதரவு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத மயமாக்கல் போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் அ.தி.மு.க. தெரிவிக்காமல் இருப்பதும், ஏன், ஜெயலலிதாவின் வீட்டிற்கே வந்து மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பார்த்துப் பேசுவதும், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பதைப்போல எதையோ “சூசகமாக” தெரிவிக்கின்றது. இது பற்றி ஒரு நாளேடு 1-3-2015 அன்று “பா.ஜ.க.வுடன் நெருங்கும் அ.தி.மு.க.” என்ற தலைப்பில் செய்தியே வெளியிட்டுள்ளது. காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறைக் குழுவை உடனடியாக அமைக்க நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தியதாகப் பெருமைப்பட்டுக் கொண் டிருக்கிறார்களே? நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் பற்றி நான் கூறுவதைவிட ஏடுகளில் வெளிவந்த செய்தியையே கூறுகிறேன். நீங்களும் படித்து மகிழ்ச்சியடையுங்கள். “சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா” என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், “தனக்கு அளிக்கப்பட்ட, 3 நிமிடத்தில், 2 நிமிடத்திற்கு ராகம் போட்டு பாட்டுப் பாடி, மீதமுள்ள ஒரு நிமிடத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்திய அ.தி.மு.க. எம்.பி.யைப் பார்த்து, ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் உட்பட ஒட்டுமொத்த சபையும், விலா நோகச் சிரித்துத் தீர்த்தது. ராஜ்ய சபாவில் தமிழக எம்.பி.யான விஜிலா சத்யானந்திற்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர், சில வார்த்தைகளைப் பேசி விட்டு, திடீரென “சிந்து நதியின் மிசை நிலவினிலே…” என ராகம் போட்டுப் பாட ஆரம்பித்தார். மூன்று நிமிட ஒதுக்கீட்டில் பாடுவதற்கு 2 நிமிடம் எடுத்துக் கொண்டவர், மீதமுள்ள ஒரு நிமிடத்தில் 3 முறை “அம்மா நாமம்” உச்சரித்தார். ஒட்டு மொத்த சபையும் “அம்மா, அம்மா” என எடுத்துக் கொடுத்து சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்த வேளையில், தி.மு.க. எம்.பி., சிவா எழுந்து, மிக சீரியசாக, “மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா கட்ட திட்டமிட்டுள்ள அணையால், தஞ்சை டெல்டா பகுதி, பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான நல்லுறவைக் கட்டிக் காக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இது மாத்திரமல்ல; கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த ஒரு செய்தியில், “போதுமான எம்.பி.க்கள் பலம் இருந்தும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பங்கெடுத்துப் பேச முன்வராமல், பின் வாங்கியதன் மூலம், தனக்குரிய முக்கியத்துவத்தை அ.தி.மு.க. தாரை வார்த்துள்ளது. பேச வரும்படி திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்தும் கூட, வாய்தா கேட்டது தெரிய வந்துள்ளது. 6வது இடத்தில் பேசியிருக்க வேண்டிய அ.தி.மு.க. 20வது நபராக பங்கேற்க நேர்ந்தது. இதன்மூலம், தன் முக்கியத்துவத்தை அந்தக் கட்சி தாரை வார்த்துள்ளது என்றே கூற வேண்டும்” என்று எழுதியிருந்தது. இதுதான் அ.தி.மு.க.வின் நாடாளுமன்றச் செயல்பாடு. தமிழகக் காவல் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதாகவும், அதனால் கூடுதல் பணியால் மற்ற அதிகாரிகள் திணறுவதாகவும் செய்தி வந்திருக்கிறதே? காவல் துறையிலே மாத்திரமல்ல; அரசுத் துறைகள் அனைத்திலும் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதாகவும், அந்த இடங்கள் எல்லாம் எதையோ “எதிர்பார்த்து” நிரப்பப்படாமல் உள்ளதாகவும் பேசப்படுகிறது. காவல் துறையைப் பொறுத்து 1-1-2015 அன்று 21 ஆயிரத்து 100 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. வேலைக்காக இத்தனை இலட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார்களோ இல்லையோ, அ.தி.மு.க. ஆட்சியினர் வந்ததும் வராததுமாக பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பி, அவர்களில் பலரின் சாவுக்கும் காரணமாக இருந்து, தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்திலே உள்ளது. மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டண உயர்வு செய்திருப்பதால் தமிழக மின் வாரியத்திற்கு கூடுதல் நஷ்டம் ஏற்படும் என்று செய்தி வந்திருக்கிறதே? இந்த ஆண்டு 26 ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணத்தை 0.9 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள். இதில் சிமெண்டுக்கு 2.3 சதவிகிதம், நிலக்கரிக்கு 6.3 சதவிகிதம், மண்ணெண்ணெய், எல்.பி.ஜி., மற்றும் இரும்பு உருக்கு ஆகியவற்றுக்கு 0.9 சதவிகிதம், உரம், பருப்பு மற்றும் தானிய வகைகளுக்கு 10 சதவிகிதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியை ரயிலில் கொண்டு வருவதற்காக தமிழக மின் வாரியம் ஆண்டுதோறும், மத்திய ரயில்வே துறைக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் செலுத்துகிறது. தற்போது, நிலக்கரியை சரக்கு ரயிலில் கொண்டு வருவதற்கான கட்டணம் 6.3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பொது பட்ஜெட்டில் சேவை வரி 12 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக மின் வாரியத்திற்கு நடப்பாண்டில், சரக்கு ரயில் கட்டணத்தில் 125 கோடி ரூபாயும், “கிளீன் எனர்ஜி” வரி 275 கோடி ரூபாயும் என கூடுதலாக 400 கோடி ரூபாய் செலவு ஏற்படும். “கழுத்துக்கு மேல் போய்விட்டது, சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன” என்று தான் நமது ஆட்சியினர் நினைப்பார்கள்.
எப்படியும் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்; என்னை விட்டு விடுங்கள்: போலீஸில் சிக்கிய பெண் தொழிலதிபர் நர்மதா
சென்னை: எப்படியும் முதலீட்டாளருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.. என்னை விட்டு விடுங்கள் என்று போலீஸாரிடம் பெண் தொழிலதிபர் நர்மதா கூறியுள்ளார். அவர் போலீஸாரிடம் கூறியபோது, வங்கியில் தான் வாங்கிய கடனுக்கு ஏராளமான கார்களை பறிமுதல் செய்து விட்டனர் என்றும், தொழிலை விரிவுபடுத்த வேறு வழியின்றி அகலக்கால் வைத்தால் முதலீட்டு திட்டத்தை முன்வைத்ததும் இந்தப் பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். கடந்த காலங்களில் தனது நிறுவனத்தில் முதலீடு செய்த பலருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு 3 மாதத்தில் எப்படியும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்றும் கூறிய நர்மதா, போலீஸாரிடம் என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். ஆனால், நர்மதா மீது மோசடி புகார்களை ஏமாந்தவர்கள் பெருமளவில் அளித்து வருகின்றனர். எனவே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், மோசடிகள் தொடர்பாக நர்மதாவிடம் மேலும் விசாரணை நடத்தவுள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று அல்லது நாளை மத்திய குற்றப் பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். [su_divider] சென்னை கோயம்பேடு, பிருந்தாவன் நகர், முல்லைத் தெருவில் கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் தொழில் அதிபர் நர்மதா (34). இந்த நிறுவனத்தில் 170 கார்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிறுவனம் மீது, சூளைமேடு வீரபாண்டியன்நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அவர் அளித்த புகார் மனுவில், சில மாதங்களுக்கு முன்பு “இந்தியா டிராக் கால் டாக்ஸி’ நிறுவனத்தில் இருந்து எனது செல்லிடப்பேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 36 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை படித்துப் பார்த்த எனக்கு, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கிடைக்கும் என நினைத்தேன். இதையடுத்து நான், எனது மனைவி அமுதா, உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 34 பேர் ரூ.34 லட்சம் முதலீடு செய்தோம். சில மாதங்களுக்கு மட்டும் எங்களுக்கு சரியாக பணம் வந்ததும். ஆனால் அதன் பின்னர் பணம் வரவில்லை. எங்களது பணத்தை கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை, பணத்தையும் தரவில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம். எனவே, எங்களது பணத்தை மீட்டுத்தர போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று – குறிப்பிடப்பட்டிருந்தது. அவருடன் மேலும் 5 பேரும் புகார் மனுக்களைக் கொடுத்தனர். அந்த மனுக்களில்… தொழில் அதிபர் நர்மதா கடந்த 2010–ம் ஆண்டு முதல், குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் கார்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களில் நாங்களும் இருந்தோம். எங்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் நர்மதா ஒரு தகவலை அனுப்பினார். வாடிக்கையாளர்களுக்கு இனிய நற்செய்தி என்று அறிவிப்பு வெளியிட்டார். வாடிக்கையாளர் முதலீட்டுத் திட்டம் என்று அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ.1.80 லட்சமாக திருப்பித் தரப்படும் என்றும், அத்துடன் தங்கக் காசு பரிசாகக் கிடைக்கும் என்றும், ஓர் ஆண்டு காரில் இலவச பயணமும் செல்லலாம் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். செல்போன் எஸ்.எம்.எஸ். அறிவிப்புகளைத் தொடர்ந்து நாங்கள் நர்மதாவை நேரில் சென்று பார்த்துப் பேசினோம். அவரது அறிவிப்பு மட்டும் கவர்ச்சியாக இல்லை. அவரது கவர்ச்சியான பேச்சும் எங்களை அவரது மோசடி வலையில் சிக்க வைத்து விட்டது. லட்சம், லட்சமாக அவரிடம் பணத்தைக் கொண்டு கொட்டினோம். நாங்கள் ரூ.64 லட்சம் வரை முதலீடு செய்தோம். அவர் சொன்னபடி சிலருக்கு தங்கக் காசு பரிசாகக் கொடுத்தார். இதனால் மேலும் நூற்றுக்கணக்கான பேர், நர்மதாவிடம் முதலீட்டுப் பணத்தை கோடி, கோடியாகக் கொட்டினார்கள். ஒரு சிலருக்கு முதலீட்டுப் பணத்துடன் கவர்ச்சி அறிவிப்பில் சொன்னபடி பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். பலருக்கு வங்கி காசோலை கொடுத்தார். பணம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வங்கி காசோலை பெற்றவர்களுக்கு ஒன்றுமில்லை. காசோலைகளுக்கு நர்மதாவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. அவை திரும்பி வந்தன. எங்களது வயிற்றில் அடித்து கொள்ளை அடித்த முதலீட்டுப் பணத்தில், நர்மதா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது மோசடிகளில் சிக்கி வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ.46 கோடி வரை இருக்கும். நர்மதா மீதும், அவரிடம் மேலாளராக வேலை செய்யும் பரத்குமார் (வயது 24) மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து, தொழிலதிபர் நர்மதா மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் நர்மதா மீதும், அவரது நிறுவன மேலாளர் பரத்குமார் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து, நர்மதாவும், பரத்குமாரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் நர்மதாவின் அலுவலகம் கோயம்பேட்டிலும், வீடு சென்னை முகலிவாக்கத்திலும் உள்ளது. அவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம், முக்கூர் கிராமம். அவரது தந்தை இந்து அறநிலையத் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். பி.எஸ்சி. பட்டதாரியான நர்மதா திருமணம் ஆனவர். தனது கணவரைப் பிரிந்து வாழ்கிறார். அவருக்கு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நர்மதாவுடன் கைதான அவரது மேலாளர் பரத்குமார் பி.எஸ்சி. பட்டதாரி. திருமணமாகாதவர். சென்னை பிராட்வேயில் வசிக்கிறார். இவர் ஒரு நடன நடிகரும்கூட! தனியார் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர்–1 நடன நிகழ்ச்சியில் முதல் பரிசைப் பெற்றவர். நர்மதா இவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுத்துள்ளார். நர்மதாவின் வலதுகரமாகச் செயல்பட்ட பரத்குமார், அவரது மோசடிகளுக்கும் துணை போயுள்ளார். சென்னையில் இந்த மோசடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

