பெங்களூர்:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயல்லலிதாவின் பையனூர், சிறுதாவூர், கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தனி அமர்வு நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனி பெஞ்ச் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதாவிடம் இருந்து மற்றவர்களுக்கு பணம் சென்றதற்கு நேரடி ஆதாரம் இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைமுகமான ஆதாரங்களையும், ஆவணங்களையும் கொண்டு ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடுத்தனர். அவர்கள் எனக்குக் கொடுக்கும் ஆவணங்களைக் கொண்டே என்னால் வாதிட முடியும் என்றார். இதையடுத்து பவானி சிங், சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவை மதிப்பீடு செய்த பொறியாளர் கோவிந்தன் அளித்த அரசுத் தரப்பு சாட்சியத்தை வாசித்தார். அதில், 1993-ல் பையனூரில் சசிகலா இரண்டடுக்கு பங்களா கட்டினார். பிறகு அந்தக் கட்டடம் பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு புதிய சலவைக் கற்கள் பதிக்கப்பட்டன. இதற்காக மும்பையில் இருந்து இத்தாலி சலவைக் கல், வெள்ளை சலவைக் கல் என பல வகை விலை உயர்ந்த சலவைக் கற்கள் வாங்கப்பட்டன. பையனூர் பங்களாவின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என்றார் அவர். அப்போது குறுக்கிட்ட சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர், பையனூர் பங்களா, போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உள்ள கட்டடங்களின் மொத்த மதிப்பு ரூ.29 கோடி என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளனர். அங்கு சுமார் ரூ.100, 150 விலையுள்ள சலவை கற்களை எல்லாம் ரூ.5,919 என மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளனர் என்றார். அதற்கு பவானி சிங், இவ்வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அதிகாரிகள் சரியாக விசாரிக்கவில்லை. கட்டடம், நிலத்தை மிகைப்படுத்தி மதிப்பீடு செய்தனர். இதனால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவர்களது மதிப்பீட்டை ஏற்காமல் 20 சதவீதம் சலுகை கொடுத்தது. வழக்கைப் பதிவு செய்துவிட்டு குற்றச்சாட்டை தேடியுள்ளனர் என்றார். உடனே நீதிபதி குமாரசாமி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தத்தை அழைத்து, எதன் அடிப்படையில் சொத்துகளை மதிப்பீடு செய்தீர்கள். கட்டடங்களை மதிப்பிட்ட பொறியாளர்களில் 2 பேரை வருகிற 9-ம் தேதி நீதிமன்றத்துக்கு வரச் சொல்லுங்கள். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் எதற்காக ஜெயலலிதா தரப்புக்கு மதிப்பீட்டில் 20% சலுகை அளித்தது? 50% முதல் 60% வரை தந்திருக்கலாமே? என்றார். இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங், இவ்வழக்கில் சாட்சியம் அளித்துள்ள பொறியாளர்களின் வாக்குமூலம் எல்லாமே ஒரே மாதிரியாக உள்ளது. அவற்றை எல்லாம் படித்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” எனக் கூறி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சம்பந்தத்தை படிக்க வைத்தார். இதன் பின்னர், ஜெயலலிதாவின் பையனூர், சிறுதாவூர், கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்யும் படி, நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.