கொழும்பு: கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு ‘சீன நிறுவனம் முறையாக அனுமதி பெற்றிருக்கவில்லை’ என்ற காரணம் கூறி, இலங்கை இதனை திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் கொழும்பு துறைமுக நகர செயல் திட்டத்தை தாற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கைப்படி, துறைமுக நகர வளர்ச்சிப் பணிகளை மறு அறிவிப்பு வரும் வரை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்தது. இதனை வெளியுறவு அமைச்சர் அஜித். பீ. பெரேரா கூறியுள்ளார். கொழும்பு துறைமுக நகர செயல் திட்டம் துவங்குவதற்கு முன், தொடர்புடைய சீன நிறுவனம் முறையாக அனுமதியைப் பெற்றிருக்கவில்லை. இதனை இந்த செயல்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு அறிக்கை அளித்ததாக அமைச்சர் அஜித் .பீ. பெரேரா தெரிவித்தார். அதன்படியே இதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்நிலையில், துறைமுக நகர செயல் திட்டத்தைத் துவங்குவதற்கு முன்னர் பெறப்பட்ட அனுமதி தொடர்பான ஆவணங்களை இரண்டு வார காலத்துக்குள் அரசிடம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்திடம் அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தெரிவித்த அஜித் பெரேரா, இவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்ட பிறகே, கொழும்பு துறைமுக நகர செயல்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றார். இந்நிலையில், கொழும்பு துறைமுக செயல் திட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் பாதுகாப்பு மைய செயல்பாட்டாளர் ரவீந்திர காரியவசம் வலியுறுத்தியுள்ளார். அரசின் நடவடிக்கையில் தனக்கு திருப்தி இல்லை என்று கூறிய அவர், இந்தத் திட்டத்தை நிறுத்தக் கோரி தமது அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர் திட்டம்: சீனாவுக்கு திடீர் தடை!
Published:

