தான்ஸானியாவில் வெள்ளத்துக்கு 38 பேர் பலி: சாலைகள் முற்றிலும் சேதம்

உலகம்

தர் எஸ் சலாம்: புதன்கிழமை அன்று ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவின் வடமேற்குப் பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமப் பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் முழுதும் சேதமடைந்துள்ளன என்று அதிபர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சின்யங்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு குறைந்தது 82 பேர் படு காயம் அடைந்தனர். இந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, ஜகாயா கிக்வெட்ஸ் அலுவலகம் அறிக்கை அளித்தது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால், பல கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்ததாக தான்சானியா அதிபர் மாளிகை தெரிவித்தது. இந்த மழை வெள்ளத்தால் பல இடங்களில் பயிர்கள் அதிகம் சேதமடைந்துள்ளன. தான்சானியாவில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மழைக்காலம். அதன் தொடக்கத்திலேயே மழை வெள்ளம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் ஊடகங்களில், வர்த்தகத் தலைநகரான தார் எஸ் சலாமில் இருந்து 1000 கி.மீ. தொலைவு வரை விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர் என்று செய்தி வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.