ஆசிரியர் தேர்வு வாரிய ஊழலில் சௌதாலாவுக்கான 10 ஆண்டு தண்டனை: தில்லி நீதிமன்றம் உறுதி

Published:

புது தில்லி: அரியானாவில் நடந்த ஆசிரியர் தேர்வு வாரிய ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்திய தேசிய லோக்தளத்தின் தலைவரான ஓம் பிரகாஷ் சௌதாலாவின் பதவிக் காலத்தில் (2000த்தில்) 3,206 இளநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி போலி ஆவணங்களைக் கொடுத்தும், ஆவணங்களைத் திருத்தியும் ஏராளமானோரை பணி நியமனம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. இந்த ஊழல் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் கடந்த 2008-ம் ஆண்டு சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் சௌதாலா உட்பட 53 பேரும் குற்றவாளிகள் என்று தில்லி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், சௌதாலாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தது. இந்நிலையில், ஓம் பிரகாஷ் சௌதாலா, அவரது மகன் அஜய் சௌதாலா உள்ளிட்டோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சிறைத் தண்டனையை எதிர்த்து சௌதாலா உள்ளிட்டோர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், இன்று சௌதாலா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் உறுதி செய்தது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img