புது தில்லி ஆம் ஆத்மியின் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது ராஜினாமா கடிதத்தை அவர் செயற்குழுவுக்கு அனுப்பியுள்ளார். அதில், தில்லி முதல்வராக இருப்பதால் தம்மால் கட்சிப் பணியைப் பார்க்க இயலவில்லை என்று அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். மேலும், கட்சிக்கு விரைவில் புதிய ஒருங்கிணைப்பாளர் அமர்த்தப் படுவார் எனவும் அவர் அதில் கூறியுள்ளார் தாம் தில்லி மக்களின் வளர்ச்சிகாகவும் நலனுக்காகவும் பாடுபடப் போவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, கேஜ்ரிவால் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு, கட்சியை ஒருநபர் சார்ந்த கட்சியாக மாற்றி விட்டதாக கட்சியின் முக்கியத் தலைவர்களான பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் இன்று கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் துவங்கி நடைபெறுகிறது.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் ராஜினாமா
நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு முயற்சி
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நஷ்டம் காரணமாக மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையைத் திறக்க தமிழக அரசு முயற்சி எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற சிஐஐ கூட்டத்தில் பேசிய தொழிற்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷங்கர் இதனை தெரிவித்தார். மூடப்பட்ட நோக்கியா ஆலையைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் இந்தக் கூட்டத்தில் கூறினார். முன்னதாக, நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நோக்கியா ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தமிழக அரசின் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஷங்கரும் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலக்கிய நிர்பயா ஆவணப்பட பதிவு: ராஜ்நாத் சிங் விளக்கம்
புது தில்லி: நிர்பயா ஆவணப் படப் பதிவு இன்று காலை நாடாளுமன்றத்தைக் கலக்கியது. நிர்பயா ஆவணப்படம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின. அவை ஒத்திவைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அவை மீண்டும் கூடியபோது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த ஆவணப் படம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது, ‘நிர்பயா வழக்கு குற்றவாளியிடம் பேட்டி எடுத்த விவகாரத்தில் விதிமீறல்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை முடிந்ததும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிறைத் துறை நிர்வாகம், பேட்டி எடுபப்தற்காகக் கொடுத்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தி பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்றும், அதனை திரும்ப ஒப்படைக்குமாறும் தொடர்புடைய ஊடகத்திடம் கோரப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. இந்தப் பேட்டியினை வெளியிட நீதிமன்றம் மூலம் தடையாணை பெறப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஊடகங்கள் வெளியிடத் தடை உள்ளது… என்று விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவையில் இன்று அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால், 15 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் கடற்புலி பாகீரதி இலங்கையில் கைது
தனது தாயைப் பார்ப்பதற்காக இலங்கை சென்ற பாகீரதி என்ற பெண் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி, கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பாகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை சென்று கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒரு மாத விடுமுறையைக் கழித்து விட்டு, பிரான்ஸ் நாட்டுக்குத் திரும்பும் வழியில் திங்கள் கிழமை கொழும்பு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பாகீரதி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பல்வேறு தாக்குதல்களை முன்னின்று நடத்தியுள்ளதாகவும் அவருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை காவல் துறை கூறியுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்களுக்கு காவல் துறையினர் விசாரணையில் வைத்துள்ளனர். தாம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியிருந்த பாகீரதி, அதன் பின்னர் அந்த இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமது தாயையும் தந்தையையும் பார்த்துச் செல்வதற்காக இலங்கை வந்திருந்தபோது, பாகீரதி கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸில் பிறந்த அவரது 8 வயது மகளும் பாகீரதியுடன் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், போர் இல்லாத சூழ்நிலையிலும் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது என்ற நம்பிக்கையிலேயே அவர் இலங்கை வந்திருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி சிறுமிகள் பலாத்கார வழக்கில் 6 போலீஸார் தலைமறைவு குற்றவாளிகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட 6 போலீஸாரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை செவ்வாய்க்கிழமை நேற்று வெளியிட்ட சிபிசிஐடி எஸ்.பி. வெங்கடசாமி, 6 போலீஸாரின் புகைப்படங்களையும் வெளியிட்டார். கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரலில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த கும்பலிடம் இருந்து சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், புதுச்சேரி போலீஸாரும் அவர்களை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. சிறுமிகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்ஷா, தலைமைக் காவலர்கள் குமரவேல், பண்டரிநாதன், காவலர்கள் சங்கர், செல்வகுமார், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் மீது புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில், ஐ.ஜி பிரவீர் ரஞ்சன் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமை தவிர்த்து இதர 8 போலீசாரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி எஸ்பி வெங்கடசாமி தலைமையிலான தனிப்படையினர் பணி நீக்கம் செய்யப்பட்ட 9 போலீஸாரின் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள். இதில் தொடர்புடைய பணி நீக்கம் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகிய இருவரும் சிபிசிஐடி போலீஸாரிடம் கடந்த சனிக்கிழமை சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தேடப்பட்ட மற்ற 6 பேரையும் பிடிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அவர்களை சரணடையச் சொல்லியும் கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், நேற்று திடீரென அவர்களது புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பினை நேற்று எஸ்பி வெங்கடசாமி வெளியிட்டார். அப்போது, “தலைமறைவாகியுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸார் சரணடையவில்லை. அவர்கள் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கிறோம். பொதுமக்கள் பார்த்து தகவல் தெரிவிப்பார்கள். விரைவில் அவர்களைக் கைது செய்ய எடுத்துள்ள நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று: என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.
“பொய்யும் பயமும்”
ஒரு தப்பு செய்த போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இந்த வார கல்கி. அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே இந்த அழுக்கை யாரும் தெரிந்து கொண்டு விடக்கூடாது என்று அதை மூடி மறைக்க தோன்றுகிறது. நியாயமாக தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினால் அந்த பிரார்த்தனையே சோப்பை போல் அந்த தப்பை அகற்றிவிடும். அப்படி செய்யாமல் தப்பை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் மூட வேண்டும் என்கிறபோது பொய்ய சொல்ல வேண்டியதாகிறது. அழுக்கை தேய்த்து கழுவாமல் மூடி மூடி வைத்தால் சீழ் பிடித்து சிரங்காகிவிடுகிறது. உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய் தான். எதனால் தப்பை மறைக்க பார்க்கிறோம்? ஒன்று நம்மை மற்றவர்கள் நல்லவன் என்றே நினைக்க வேண்டும் என்ற பொய் எண்ணத்தினால் அல்லது இன்னொருத்தரிடம் பயத்தினால் மறைக்கப்பார்க்கிறோம். பொய் என்பது சிரங்கு என்றால் பயம் என்பது சொறி மாதிரி. பெரியவர்களிடமெல்லாம் உங்களுக்கு நிறைந்த மரியாதையும் மதிப்பும் இருக்கத்தான் வேண்டும். ஆனாலும் அர்த்தமில்லாத பயம் கூடாது. பயம் உள்ளத் தூய்மையை கெடுக்கிற அழுக்கு. தப்பு செய்வதால் கூட அதை உணர்ந்து பணிவுடன் உள்ளபடி பெரியவர்களிடம் சொல்ல வேண்டுமே ஒழிய பொய்யால் மூடி மறைக்க கூடாது. தப்பு செய்தது போதாது என்று பொய்யும் சொன்னோம் என்பது வெளிப்பட்டு நமக்கு மேலும் அவமானம், கஷ்டம் தான் ஏற்படும். உள்ளப்படி சொன்னால் பெரியவர்கள் மன்னித்து விடுவார்கள். மன்னிக்காமல் அவர்கள் தண்டித்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. நாம் தப்பு செய்தோம். அதனால் அதற்குரிய தண்டனையை பெறுகிறோம் என்று தைரியத்துடன் தண்டனையை ஏற்க வேண்டும். தைரியம், சத்தியம் இவை எல்லாம் மனஅழுக்கை போக்குகிற சோப், சீயக்காய் மாதிரி. ஜத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகராந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வமிகள்
தில்லி மாணவி பலாத்காரம் குறித்த ஆவணப் படத்தை வெளியிடத் தடை
புது தில்லி: தில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரக் குற்றவாளியிடம் எடுக்கப்பட்ட பேட்டியுடன் கூடிய ஆவணப் படத்தை ஊடகங்களில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியிடம் பிரிட்டன் ஆவணப் பட தயாரிப்பாளர் ஒரு பேட்டி எடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில், அந்த ஆவணப் படத்தில் கருத்துகள் இடம்பெற்றிருப்பதால், இந்த ஆவணப் படத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என டிவி சேனல்களுக்கு மத்திய ஒளிபரப்பு த்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கேஜ்ரிவால் இல்லாமல் இன்று கூடுகிறது ஆம் ஆத்மி தேசிய செயற்குழுக் கூட்டம்
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த உறுப்பினர்களான யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷண் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவி்ந்த் கெஜ்ரிவால் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு உடல் நலக் குறைவு இருப்பதாலும், வேறு அலுவலக ரீதியான பணிகள் இருப்பதாலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டாலும், கட்சியின் மூத்த தலைவர்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதாகத் தெரிகிறது.
பசு வதை; மாட்டிறைச்சி ஏற்றுமதியை அரசுகள் தடை செய்ய வேண்டும்: ராம.கோபாலன்
சென்னை: பசு இன படுகொலை தடுக்கப்பட வேண்டும், மாட்டு இறைச்சி ஏற்றுமதியை முழுமையாக மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: மராட்டிய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சித் தடை சட்டத்தை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது. உண்மையில் இதற்கு முன் உதாரணமாக தமிழகம் தான் இருந்திருக்க வேண்டும், கொல்லாமையும், கள்ளுண்ணாமையும் வலியுறுத்திய திருவள்ளுவருக்குச் சிலை வைத்த தமிழக அரசியல்வாதிகள் தெருவெங்கும் இறைச்சி கடை பரப்புவதைக் கண்டுகொள்ளவில்லை, வீதியெங்கும் மாட்டிறைச்சி பிரியாணி கடைகள் வியாதியை பரப்புவதை கண்டுகொள்ளவில்லை. ஊரெங்கும் அரசே மதுபானக் கடை நடத்தும் அவலம் நீடிக்கிறது. இவர்கள் தமிழையும் நேசிக்கவில்லை, தமிழ் கூறும் அறங்களையும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையான உண்மை. நமது நாட்டு மக்கள் பசுவையும், காளைகளையும் தெய்வமாக வழிபடுபவர்கள். அதன் தெய்வீக ஆற்றலை மக்கள் உணர்ந்து போற்ற முன்னோர்கள் கோவில்களில் பசு மடங்களை அமைத்தார்கள். தானமாக கொடுக்கப்படும் பசுக்களும், காளைகளும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அறநிலையத்துறைக்கு உள்ளது. இந்நிலையில் ஆலயங்களில் பராமரிக்கப்படும் பசுக்கள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் பிராணி நல வாரியம் உட்பட சிலரை குழுவாக அமைத்து, ஆலயங்களுக்குச் சென்று கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்திரவிட்டுள்ளது. இதனை ஏற்று, இந்து சமய அறநிலையத்துறை பிராணி நலன் விரும்பிகள், கால் நடை மருத்துவர்கள் முதலானவர்கள் அடங்கிய ஒரு குழுவை நிரந்தரமாக நியமித்து தகுந்த முறையில் ஆலயங்களில் பசு இனங்களைப் பாதுகாக்க, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது நாடு இன்றும் விவசாய நாடு தான். இது நீடிக்க வேண்டுமானால், உணவு உற்பத்தி தரமானதாகவும், உற்பத்தி பெருகவும் பசு இனப் பாதுகாப்பு மிகமிக முக்கியம். பசுஞ்சாண உரம், பசுஞ்சாண பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தினால் உலக அரங்கில் நமது விவசாய பொருட்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும். நமது நாட்டு மக்களும் நோயில் வீழ்ந்து இறக்கும் விகிதம் குறையும். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய மாம்பழங்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் இறக்குமதி செய்ய ஆதரவு தெரிவித்துள்ளன. இத்தகைய நிலையில் தமிழக விவசாயிகள் தரமான இயற்கை உரத்தைப் பயன்படுத்தி சந்தையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் சார்பாக இந்து முன்னணி நன்றி தெரிவித்துக்கொள்கிறது. வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியை மத்திய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும். தோல் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தியதன் விளைவு வேலூர் மாவட்டம், பல்லாவரம், குரோம்பேட்டை முதலான சென்னை புறநகர் பகுதிகள் முதலானவை பாழாய் போனது. இந்நிலை மாற்ற வேண்டும். எனவே, மத்திய அரசு பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதனை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாட்டிறைச்சி ஏற்றுமதியையும் தடை செய்ய வேண்டும். இது மாண்புமிகு பாரத பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் கொடுத்த வாக்குறுதி என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறோம். மாடு அழிந்தால், விவசாயம் அழியும். விவசாயம் அழிந்தால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும். உணவிற்கு வெளிநாட்டிடம் கையேந்தும் நிலை உருவாகும். இந்த அவலத்தைத் தடுக்கவும், சுற்றுச்சுழலை பாதுகாக்கவும் மத்திய அரசு பசு இனப் படுகொலையை தடை செய்ய முன் வரவேண்டும். இதற்கு முதல் படியாக சட்டவிரோதமாக, லாரிகளில் கால்நடைகள் ஏற்றுச்செல்வதை, மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்வதையும் தடுக்க கடும் நடவடிக்கை மூலம் அமல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
பங்குச் சந்தை சென்செக்ஸ் 30 ஆயிரம் கடந்து புதிய உச்சம்
புது தில்லி : இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து 30,000 புள்ளிகளைக் கடந்தது. முன்னதாக, இன்று காலை மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்திருந்தது. இதன் காரணமாக பங்குச் சந்தையில் இந்த திடீர் உயர்வு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும் சற்று நேரத்தில் சில புள்ளிகள் குறைந்து, 30 ஆயிரத்துக்கும் குறைந்தது சென்செக்ஸ். மேலும், ரிசர்வ் வங்கி அறிவிப்பால் சர்வதேசச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரித்துள்ளது.

