Home Blog Page 6264

இன்று தொடங்குகிறது 2ஜி, 3ஜி ஏலம்

புது தில்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 ஜி, 3 ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்குகிறது. இந்த ஏலத்தில், 8 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன. இந்த ஏலத்தின் மூலம் ரூ. 1 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி

RBI-reserve-bank-of-india புது தில்லி: வங்கிகளுக்காக ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் ரெப்போ வட்டி விகிதம் 7.75 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் அறிவிப்பால், வீடு மற்றும் வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 15 ஆம் தேதியன்று 8 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம் .25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 7.75 சதவிகிதமாக இருந்தது. 2 மாதத்தில் 2 ஆவது முறையாக வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளதாலும், விலைவாசி குறைந்துள்ளதாலும் வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விகிதக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அருகே கோவிலுக்கு பூட்டு: மக்களின் வழிபாட்டு உரிமையை அரசே சதி செய்து பறிப்பதா என ராமதாஸ் கேள்வி

ramadoss சென்னை: சேலம் அருகே கோவிலுக்கு பூட்டு போட்டது, மக்களின் வழிபாட்டு உரிமையை அரசே சதி செய்து பறிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வேடுகாத்தான்பட்டி கிராமத்தில் உள்ள சைலேஸ்வரர் கோவிலுக்கு அப்பகுதியில் உள்ள 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் உழைப்பையும், பொருளையும் கொட்டி திருப்பணி செய்துள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து இன்று குடமுழுக்கு நடைபெறவிருந்த நிலையில் சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் கோவிலுக்கு பூட்டு போட்டு பூட்டிய மாவட்ட நிர்வாகம், 21 கிராமங்களில் 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது. வேடுகாத்தான்பட்டியிலுள்ள சைலேஸ்வரர் கோவில் தான் அங்குள்ள 21 கிராம மக்களின் பாரம்பரிய கோவிலாக திகழ்ந்து வருகிறது. இக்கோவிலை அவர்கள் தான் பல்லாண்டு காலமாக பராமரித்து வருகின்றனர். இக்கோவிலில் வேறு யாருக்கும் எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. அதனடிப்படையில் தான் அப்பகுதி மக்கள் தங்களது வருவாயில் ஒரு பகுதியை சேமித்து இந்த கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். இதையடுத்து குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த இன்னொரு சமுதாய மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட சிலர், அக்கோவிலில் குடமுழுக்கு செய்வதற்கான உரிமையை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரையும் பெயரளவுக்கு அழைத்துப் பேச ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறி, இன்று நடைபெறவிருந்த சைலேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை தடுத்து நிறுத்தி விட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், அங்குள்ள வேடுகாத்தான்பட்டி, பனங்காடு, கண்டம்பட்டி, தளவாய்ப்பட்டி உள்ளிட்ட 21 கிராமங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி சித்தர் கோவில் மலையில் குடியேறி போராட்டம் நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக உழைத்து புதுப்பிக்கப்பட்ட கோவிலில் குடமுழுக்கு நடைபெறவிருந்த நிலையில், சம்பந்தமே இல்லாத சிலர் விடுத்த வேண்டுகோளை ஏற்று குடமுழுக்கு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட ஊர், குறிப்பிட்ட சமுதாயம் ஆகியவற்றுக்கு சொந்தமான கோவில்கள் ஏராளமாக உள்ளன. இக்கோவில்களை நிர்வகிப்பதற்கான உரிமை அவற்றை உருவாக்கி, பராமரித்து வரும் ஒரு பிரிவினரிடமே இருக்கும். இந்த உரிமையை நீதிமன்றங்களும் அங்கீகரித்திருக்கின்றன. அதன்படி, சைலேஸ்வரர் கோவில் மீது 21 கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை மாவட்ட ஆட்சியர் மதித்திருக்க வேண்டும். இக் கோவிலை நிர்வகிக்கும் உரிமை கோரி சிலர் மனு கொடுத்த போது, அக்கோவிலை நிர்வகிக்க அவர்கள் உரிமை கோர இயலாது என்பதையும், வேண்டுமானால் வழிபடும் உரிமையை கேட்டுப்பெறலாம் என்பதையும் எடுத்துக் கூறியிருக்க வேண்டும். ஆனால், தன்னிச்சையாக செயல்பட்டு கோவிலை மூடவும், கோவிலை உருவாக்கிய மக்கள் வாழும் பகுதிகளில் 144 தடை உத்தரவையும் பிறப்பித்தது ஏற்றுக்கொள்ள முடியாத சர்வாதிகாரம் ஆகும். சேலம் மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சிலர் தான் குடமுழுக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்குடன் இப்படி ஒரு மனுவை ஆட்சியரிடம் கொடுத்தனர். அவர்களின் உண்மை நோக்கத்தைப் புரிந்துகொண்டு, ஆட்சியர் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாவட்ட ஆட்சியரோ நேர்மையின் அடிப்படையில் செயல்படாமல் ச(£)தியின் அடிப்படையில் செயல்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். குடமுழுக்குக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, யாகசாலைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அனைத்துக்கும் தடை விதித்ததையும், கோவிலுக்கு பூட்டு போட்டதையும் மிகப்பெரிய தெய்வக் குற்றமாக மக்கள் கருதுகின்றனர். குறித்த காலத்தில் குடமுழுக்கு செய்யாததால் தங்களுக்கு என்ன துயரம் நேருமோ? என்று அஞ்சுகின்றனர். மக்களின் உணர்வுகளை இந்த அளவுக்கு காயப்படுத்திய மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை நியாயப்படுத்த முடியாததாகும். இதன்மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 26 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்ட வழிபாட்டு உரிமையை பறித்திருக்கிறார். பொதுமக்களில் ஒரு பிரிவினர் ஏற்பாடு செய்யும் அவர்களின் சமய மற்றும் தெய்வீக உணர்வு சம்பந்தப்பட்ட விழாக்களை, அதனுடன் சம்பந்தமே இல்லாத யாரோ சிலர் இதுபோல் தடுத்து நிறுத்த முடியுமானால் அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் சித்தர் கோவில் மலையில் குடியேறியுள்ள மக்களை அரசு அதிகாரிகள் சந்தித்து பேசி, அவர்கள் விரும்பும் நாளில் அவர்களின் விருப்பப்படி குடமுழுக்கு நடத்த அனுமதிப்பதாக வாக்குறுதி தர வேண்டும். மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய மாவட்ட ஆட்சியர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் அருகே கோயில் விழாவில் இரு சமுதாயத்தினரிடம் பிரச்னை: நின்று போன குடமுழுக்கு

protestசேலம் அருகே கோயில் விழாவில் இரு சமுதாயத்தினரிடம் பிரச்னை ஏற்பட்டதால், இன்று நடைபெறவிருந்த கும்பாபிஷேகம் நின்றுபோனது. மேலும், 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு சேலம், மார்ச் 3: சேலம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் மோதல் அபாயத்தைத் தடுக்கும் விதமாக, 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சேலம் வேடுகாத்தாம்பட்டியை அடுத்த திருமலைகிரி தோப்புக்காட்டில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சைலாம்பிகை சமேத சைலகிரீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இதையடுத்து, கோயிலைப் புனரமைத்து, புதன்கிழமை இன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு மற்றொரு சமுதாயத்தினர் வரக்கூடாது எனக் கோயில் நிர்வாகத்தினர் கூறியதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக திங்கள்கிழமை ஒரு சமுதாயத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், இரு தரப்பினரையும் அழைத்து, வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, கோயில் கும்பாபிஷேக விழாவில் மோதல் அபாயத்தைத் தடுக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் பரிந்துரையின்பேரில், வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.எச்.ஷேக் முகைதீன் கோயிலைச் சுற்றியுள்ள 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, கோயிலைச் சுற்றியுள்ள திருமலைகிரி, வேடுகாத்தம்பட்டி, ஆண்டிபட்டி, பனங்காடு, சிவதாபுரம், கந்தம்பட்டி, சேலத்தாம்பட்டி, தளவாய்ப்பட்டி, கொல்லப்பட்டி, சோமன்திட்டு, பெருமாம்பட்டி, கணவாய்க்காடு, கொத்தனூர், கீரப்பாப்பாம்பட்டி, அரியாக்கவுண்டம்பட்டி, சித்தனூர், நாய்க்கன்பட்டி, முருங்கப்பட்டி, சூரமங்கலம், காட்டூர், நல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இந்த உத்தரவையடுத்து மார்ச் 4-ஆம் தேதி நடைபெறவிருந்த கோயில் கும்பாபிஷேகம் நடைபெறாது என கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும், வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கோயிலுக்குப் பூட்டுப் போட்டுத் தடை உத்தரவு நகலை கோயிலின் முன் ஒட்டினர். இதையடுத்து, இந்தக் கிராமங்களில் பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த அனுமதி கோரி, திருமலைகிரி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊரைக் காலி செய்துவிட்டு சித்தர் கோயில் மலையில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியபோது, திருமலைகிரியில் கோயில் கட்டி முடிக்கப்பட்டு புதன்கிழமை கும்பாபிஷேகத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்காக கடந்த ஒரு மாதமாக விரதம் இருந்து வருகிறோம். இந்த நிலையில், மற்றொரு சமுதாயத்தினர் செய்த பிரச்னை காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கோயில் கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டது. கோயில் கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டதால் தெய்வநிந்தனை ஏற்படும் எனக் கருதுகிறோம். எனவே, நிறுத்தப்பட்ட கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் சித்தர் கோயில் மலையில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளோம். கோயில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி அளிக்கும் வரை இங்கேயே தங்கி இருப்போம். இதைத்தொடர்ந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளைக் கிழித்துப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

இளையராஜா பாடல்களை பயன்படுத்த 5 நிறுவனங்களுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ilayarajaசென்னை: இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பவும், கேசட்டில் விற்பனை செய்யவும் 5 நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், தென்னிந்திய திரைப்படங்களில் கடந்த 1970–ம் ஆண்டு முதல் இசையமைத்து வருகின்றேன். இந்தியாவில் தலை சிறந்த இசைப்பாளர்களில் நானும் ஒருவனாக திகழ்ந்து வருகின்றேன். 1993–ம் ஆண்டு லண்டனில் சிம்பொனி இசையமைத்தேன். முழுமையான சிம்பொனி இசையமைத்த முதல் இந்தியன் நான்தான். இசைக்காக 4 தேசிய விருதுகள் பெற்றுள்ளேன். நான் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன். திரைப்பாடல், பக்தி பாடல் என்று 4,500–க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு ‘மெட்டு’ போட்டுள்ளேன். இந்த பாடல்களை எல்லாம் ஒலிபரப்ப யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை. ஆனால், என்னுடைய அறியாமையை பயன்படுத்தி, அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையைச் சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் என்னுடைய பாடல்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர், 3–வது நபருக்கு என்னுடைய பாடல்கள் மீதான காப்புரிமையை சட்ட விரோதமாக வழங்கியுள்ளனர். இது தொடர்பாக கடந்த ஆண்டு என்னுடைய ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் போலீசில் புகாரும் செய்துள்ளனர். எனவே, எந்த ஒரு அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக இந்த நிறுவனங்கள் என் பாடல்களை கேசட்டில் விற்பனை செய்து, ஒலிப்பரப்புகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்ப, கேசட்டில் விற்பனை செய்ய அகி உட்பட 5 நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பவும், விற்பனை செய்யவும் அகி உட்பட 5 நிறுவனங்களுக்கு நிரந்தர தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சேலம் அருகே பஸ்-ஷேர் ஆட்டோ மோதல்: 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, ஷேர் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில், ஷேர் ஆட்டோவில் சென்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சேலத்தில் இருந்து திருவண்ணாமலை – பேளூர் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, சந்திரப்பிள்ளைவலசு என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பேளூரில் இந்து நீர்முள்ளிக்குட்டைக்கு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பஸ் அந்தப் பகுதியில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்துதான் காரணம் என்று கருதப் படும் நிலையில், இதனால் ஆத்திரமடைந்த நீர்முள்ளிக்குட்டை மக்கள் தனியார் பஸ்ஸை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் 339 ரன்கள் குவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேப்பியர் நகரில் நடைபெறும் பி பிரிவு ஆட்டத்தில் இன்று நடைபெற்ற 25 வது லீக் சுற்றுப் போட்டியில், பாகிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாகத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, துவக்கம் முதல் நிதானமாக விளையாடியது. துவக்க வீரர் நஸிர் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த அஹ்மத் செஷாத், ஹரிஸ் சொஹெல் இருவரும் நிலைத்து நின்று ஆடினர். செஷாத் 93 ரன் எடுத்தார். சொஹெல் 70 ரன் எடுத்தார். ஷொஹெப் மசூத் 455, மிஸ்பா ஆட்டம் இழக்காமல் 65, உமர் அக்மல் 19, அப்ரிதி 21 என ரன் குவித்தனர். இந்த இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் வீரர்கள் மொத்தமாக 10 சிக்ஸர் அடித்தனர். இதனால் 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. இதை அடுத்து 340 ரன் என்ற இமாலய இலக்குடன் யுஏஇ அணி களம் இறங்கியது.

இந்தோனேசியா: மரண தண்டனை நிறைவேற்றும் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள்

indonesia-australia-bali-nine சிலாகேப் (இந்தோனேசியா) இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலி நைன் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஆண்ட்ரூ சான், ஈழத் தமிழரான மயூரன் சுகுமாரன் இருவரும் பாலியின் கேரோபோகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று அதிகாலை எழுப்பப் பட்டு, சில நிமிடங்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து அந்தத் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை உள்ளூர் நீதி அமைச்சக அதிகாரி நியோமன் புத்ரா சூர்யா கூறியுள்ளார். அவர்கள் இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது. அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட இந்த மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இருப்பினும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்த போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் இரண்டு விமானங்களில் கொண்டு செல்லவுள்ளனர். போராட்டங்கள், அசம்பாவிதங்களைத் தவிர்க்க, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார், தண்ணீர் பாச்சும் வாகனங்கள், கவச வாகன ராணுவப் படைப் பிரிவினர் ஆகியோர், பாலியின் கெரோபொகான் சிறைச் சாலைக்கு வெளியில் பாதுகாப்புக்குக் குவிந்திருந்தனர். பாலி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் இருவரும் விமானம் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இந்தோனேசியாவின் மத்திய யாவா நுஸகம்பகன் தீவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். கடந்த 2005-ல் இந்தோனேசியாவிலிருந்து ஹெரோயின் போதைப் பொருள் கடந்த முயன்றதாக ஆண்ட்ரூ சான் மற்றும் சுகுமாரன் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. 2006ம் ஆண்டில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர்கள் திருந்திவிட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்து, இருவருக்கும் கருணை காட்டுமாறு அரசிடம் கோரினர். அவர்களின் கருணை மனுக்களை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ நிராகரித்தார். இந்நிலையில், அவர்களுக்கு அதற்கு மேல் வேறு சட்ட ரீதியான வாய்ப்புகள் எதுவும் இல்லையென தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள், ஆண்ட்ரூ சானையும் சுகுமாரனையும் விடுவிக்கும்படி இந்தோனேசியாவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்தக் கோரிக்கையை இந்தோனேசியா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்களின் மரண தண்டனை இன்று நிறைவேற்றப்படவுள்ளது. (AFP செய்தியின் அடிப்படையில்)

“யார் ஸித்தர்?”

“யா10482143_599228513527816_46027082804070919_nர் ஸித்தர்?” தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
பிற்பகல் இரண்டு மணி,கடுமையான வெய்யில் நேரம்.
வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்தார்.
 
விழுப்புரம் அருகில் வெங்கடாத்ரி அகரம் என்ற
கிராமத்தில்,1948 சாதுர்மாஸ்யம். பாஷ்ய பாடம்
நடந்ததால்,பெரியவாளை உடனே தரிசிக்க 
முடியவில்லை.
 
(ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஐம்பத்தெட்டாவது
பீடாதிபதியான ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி 
ஸ்வாமிகளின் அதிஷ்டானம் வெங்கடாத்ரி அகரம்
அருகில் வடவம்பலத்தில் இருப்பதாக, ஸ்ரீமடத்தின்
ஆவணங்களிலிருந்து தெரியவந்தது. ஆனால்,சரியான
இடம் தெரியவில்லை. மகாப்பெரியவாளின் முயற்சியால்
அந்த அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்டது. 17-01-1927ல்
அந்த இடம், முறையான வழிபாட்டுக்கு உரியதாக
மந்திரச் சடங்குகள் மூலம் துவக்கி வைக்கப்பட்டது.)
 
“பெரியவா எங்கே?” என்று ஹிந்தியில், கொதிக்கும்
குரலில் கேட்டார், வங்கத்துச் சிங்கம்.
 
“சாயங்காலம் தரிசனம் பண்ணலாம்” என்றார்,
மடத்துச் சிப்பந்தி.வந்தவர், துர்வாசரின் அவதாரம்!
 
“என்னது? சாயங்காலமா?… என்னை வரச்சொல்லிவிட்டு,
அவர் வெளியே போய்விட்டால் என்ன அர்த்தம்?..
அவர் வருகிறபோது வரட்டும்,நான் ஊருக்குப் போகிறேன்”
என்று பயங்கரமாக உறுமிவிட்டு, அருகிலிருந்த
சேர்ந்தனூர் என்னும் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி
நடக்கத் தொடங்கினார்.மடத்துப் பணியாளருக்குக் கோபம் வந்தது.
 
“என்ன மிரட்டுகிறீரா?..உம்மை யார் வரச்சொன்னது”
சாமியார் வேஷம், வேறே! தாடி,ஜடாமுடி…! இத்தனை கோபம் கூடாது….”
 
அவர் சொல்லிக்கொண்டிரூக்கும் போதே, பாராக்காரன்
ஓடி வந்தான். 
 
“சாமி,அங்கே பாருங்க, கரும்புத் தோட்டத்திலே நம்ம எசமான் ஓடிப் போறாங்க”
 
சிஷ்யர் பெரியவாளை நோக்கி ஓடினார்.
 
பெரியவாளும் வங்காளச் சாமியாரும், தனியாக
சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
 
பின்னர், பெரியவாள் சிஷ்யரை அருகில் அழைத்து,
வங்காளப் பரதேசிக்கு, சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து
ரயிலேற்றி விடச்சொன்னார்கள்.
 
சீடர் அவ்வாறே செய்துவிட்டுத் திரும்பினார்.
 
அவரைப் பார்த்ததும் பெரியவா சொன்னார்கள்.
 
“நான் காசியாத்திரை செய்துவிட்டு, வங்காளம்
மிதுனாப்பூர் வழியாக வந்தேன். அப்போது,இந்த ஸாது
சில தினங்கள் முகாமில் தங்கியிருந்தார். யோக புருஷர்;
ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.
 
முகாமிலிருந்து விடை பெற்றுச் செல்லும்போது,
‘மறுபடி தரிசனம் எப்போது கிடைக்கும்?’ என்று கேட்டார்.
பதினைந்து வருஷம் கழித்துத் தென்னிந்தியாவில்
கிடைக்கும்- என்றேன்.ராமபிரான் வருகையை
எதிர்பார்த்து பரதன் நாள்களை எண்ணிக்கொண்டிருந்த
மாதிரி, இவரும் நாள்களை எண்ணிக்கொண்டு,
இன்றைக்கு இங்கே இத்தனை மணிக்கு வந்திருக்கிறார்.இவர்களில் யார் ஸித்தர்? ஸித்தர்களில் பெரியவர்-சிறியவர் என்ற பாகுபாடு உண்டோ? பித்தர்கள், நாம்! என்ன தீர்மானிக்க?

பொது விநியோகக் கொள்கை: மத்திய அரசை எதிர்த்து மோடியின் சகோதரர் ஆர்ப்பாட்டம்

மும்பை: பொது விநியோகக் கொள்கையில், மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி தலைமையில் மும்பையில் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் உணவு தானியம் மற்றும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படுவதைக் கண்டித்து நியாய விலைக்கடை வியாபாரிகள் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் மோடியின் இளைய சகோதரரும், நியாய விலைக்கடை வியாபாரிகள் மற்றும் டீலர்கள் சங்கத்தின் துணை தலைவருமான பிரகலாத் மோடி என்பதுதான் ஆச்சரியம். ஆனால், இந்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரகலாத் மோடி, “இது எனது சகோதரர் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டம் அல்ல. மாறாக மத்திய அரசின் பொது வினியோக திட்ட கொள்கைக்கு எதிரானது. மத்திய அரசின் முடிவு ஏழைகளுக்கு எதிராக அமைந்துவிட்டது. நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இன்றைக்கும் மண்ணெண்ணெய் மற்றும் அத்தியாவசிய தானியங்கள் வழங்கப் படுவது அத்தியாவசியத் தேவையாக இருக்கும் நிலையில், இதற்கான மானியங்களை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது தவறானது. இது ஏழைகளுக்கு எதிரானதாகும். எனவே அரசின் இந்தக் கொள்கையை எதிர்த்தே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்” என்றார்.