பள்ளிகள் திறப்பது எப்போது? சாத்தியக் கூறுகள் என்ன? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Published:

SENGOTTAIAN
SENGOTTAIAN

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்தும் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார் 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் குறையாத சூழ்நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் தொற்று நோயின் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது பண்டிகைக் காலம் என்பதாலும், அடுத்து மழைக்காலம் என்ற நிலையிலும், கொரோனா இரண்டாவது அலை பெரிதாக இருக்கும் என்று எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. 

 முன்னதாக, கொரொனா பரவலால், கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது மாநில அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இருப்பினும் கல்வி நிறுவனங்கள் திறக்க தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பையும்  வெளியிடவில்லை. 

தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

நாடு முழுவதும் முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளைத் திறந்து கொள்ளலாம் என்று  மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி  சில மாநிலங்களில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவம்பர் 11ஆம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று முற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை. பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னரே முடிவு செய்யப்படும். 

பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி   அறிவிப்பார். மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு 10 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும்.

நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Related articles

Recent articles

spot_img