nanthi
nanthi

மோகனூர் அருகே ஆரியூரில் கோயில் திருப்பணிக்காக மண் தோண்டிய போது, உள்ளே இருந்து பழங்கால நந்தி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாண்டீஸ்வரர் கோயில், பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த போது கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தக் கோயிலில் பாண்டீஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆறு முகங்களை கொண்ட முருக கடவுள் சிலைகள் இருந்ததாகவும், அதை பக்தர்கள் வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கால மாற்றம் மற்றும் வேற்று மதத்தை சேர்ந்த ஆட்சியாளர்கள் இந்தப் பகுதியை ஆண்ட போது, கோயிலில் உள்ள வேதநாயகி மற்றும் முருக கடவுள் சிலைகள் அகற்றப்பட்டு இருக்கலாம் என்றும் பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அதன்பிறகு, இந்தச் சிலைகள் நிறுவப்படவில்லை. அதற்கான திருப்பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில்தான் கோயில் இன்றளவும் காட்சி அளிக்கிறது.

அதேநேரம், இந்தக் கோயிலுக்கு அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோயிலை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கோயிலைச் சுற்றி, சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பணியாளர்கள் பாண்டீஸ்வரர் கோயில் முன்பு மண் தோண்டினார்கள்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

அப்போது, மண்ணில் புதைந்த நிலையில் பழைமையான நந்தி சிலை ஒன்று சேதமடைந்த நிலையில் இருந்ததை பார்த்த அவர்கள், இதுகுறித்து கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தினர் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பிறகு, அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த பழங்கால நந்தி சிலையை எடுத்து, பாதுகாத்து வைத்துள்ளனர். அதோடு, இந்த நந்தி சிலை குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர்கள், “மன்னராட்சி காலத்தில் நமது நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் என்பதால், இதற்கு பாண்டீஸ்வரர் என பெயர் வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

பாண்டிய மன்னர்களுக்கு பின்னர் ஆட்சி செய்த முகலாய மன்னர்கள் காலத்தில் இந்து கோயில்களையும், அதில் உள்ள சிலைகளையும் சேதப்படுத்தியும், அழித்தும் அப்புறப்படுத்தி இருக்கலாம்.

மேலும், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் வளாகத்தில் வெள்ளை கற்களால் ஆன விநாயகர் சிலையும், பெரிய நந்தி சிலையும் சேதம் அடைந்த நிலையில் இருந்தன. அதை சேலம் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சிக்காக எடுத்து சென்று, சேலம் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

தற்போது கிடைத்த இந்தச் சிலையும், சேதமடைந்து இருப்பதால், இதுவும் பாண்டீஸ்வரர் கோயில் சம்பந்தப்பட்ட சிலையாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. செல்லாண்டியம்மன் கோயில் திருப்பணி நடைபெறும் நிலையில், கோயில் வளாகத்தில் நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டது பக்தர்கள் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

தற்போதைய நிலையில், பாண்டீஸ்வரர் கோயில் திருப்பணியையும் சேர்த்து முடிக்க வேண்டும் என்பதே பக்தர்களாகிய எங்களது கோரிக்கை.

மேலும், இந்தப் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்வதன் மூலம், கோயிலின் வரலாறு, மற்றும் எத்தனை ஆண்டுகள் பழைமையான கோயில் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending