உங்களை உயர்த்தும் மேலாண்மை-3: இது நெப்போலியன் ஸ்டைல்!

உரத்த சிந்தனை சுய முன்னேற்றம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

nepolean - 2026

பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து சமத்துவம் சகோதரத்துவம் போன்ற சொற்றொடர்கள் எங்கும் எதிரொலித்தன. அது மேலாண்மைக் கல்வியிலும் சேர்ந்துகொண்டது.

பணிநிலைகளில்தான் வரிசைத்தன்மை (ஹையரார்க்கி) இருக்கவேண்டுமே ஒழிய, பணியாளரிடையே பாரபட்சம் கூடாது என்ற புதிய தியரி அப்போது உருவானது. இது நெப்போலியன் போனபர்ட் காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

நாட்டு மக்கள் அனைவரும் சமத்துவம் பேணவேண்டும் என்று நெப்போலியன் கட்டளையிட்டிருந்தான்.

அந்த நேரம்… நெப்போலியன் தனக்காக ஒரு அரண்மனை கட்டிக்கொண்டிருந்தான். தொழிலாளர்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

சக்ரவர்த்தியாக முடிசூடியிருந்த நெப்போலியனின் புகழையும் அவனது தகுதியையும் கேலி செய்ய நினைத்தான் ஒருவன். அவன் சக பணியாளர்களிடம் ஒரு பந்தயத்தை வைத்தான்.

தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ‘‘சக்ரவர்த்தி, ‘எல்லோரும் சமமே’ என்று சொல்லியிருக்கிறார். எனவே நாம் ஒரு பந்தயம் வைப்போம். நம்மில் யாரேனும் ஒருவர் சக்ரவர்த்தி சுருட்டு பிடித்துக் கொண்டிருக்கும்போது, அந்த சுருட்டிலிருந்து நெருப்பை தன் சுருட்டுக்குப் பற்றவைத்துவிட்டு வந்தால், அவருக்கு ஒரு தங்கக் காசு பணம். பந்தயத்துக்கு யார் தயார்?’’ என்றான் அவன். எல்லோரும் தயங்க, ஒருவன் மட்டும் ‘‘அதற்கு நான் தயார்’’ என்றான்.

நெப்போலியன் சுருட்டு பிடித்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தான். இவன் நேரே அவனிடம் ஓடிச் சென்று, ‘‘மகாபிரபு, மகாபிரபு. நான் ஒரு பந்தயத்தை வைத்துவிட்டு ஓடிவந்திருக்கிறேன். நீங்கள் எப்போதும் தொழிலாளருக்கு சலுகை காட்டுபவர்தானே! உங்கள் சுருட்டிலிருந்து என் சுருட்டுக்கு நெருப்பு பற்ற வைக்க வேண்டும். நீங்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும். நான் பந்தயத்தில் வென்றால், ஒரு தங்கம் பணம் கிடைக்கும்.’’ என்றான்.

சலனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்த நெப்போலியன், ‘‘நல்லது சகோதரனே. நீ பந்தயத்தில் தோற்றுவிட்டாய். ஆனால், இந்தா இரண்டு தங்கம் பணம். ஒன்றை பந்தயப் பணமாகக் கொடுத்துவிடு. மற்றதை வைத்து, நீங்கள் ஏதேனும் வாங்கிச் சாப்பிடுங்கள்.’’ என்று சொல்லி, இரண்டு நாணயங்களைக் கொடுத்தான். வாங்கிக் கொண்டவனின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்திருந்தது.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதற்கு உதாரணமாக அமைந்திருந்தது நெப்போலியனின் செயல். அவன் தன் பதவியின் கௌரவத்தையும் குலைத்துக்கொள்ளவில்லை. அதே சமயம், தொழிலாளர்க்கு இணக்கமானவன் என்ற பெயரையும் தக்கவைத்துக் கொண்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.