spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஸ்ரீராமானுஜ ஜயந்தி: உலகம் உய்ய ஒரே வழி... உடையவர் திருவடி!

ஸ்ரீராமானுஜ ஜயந்தி: உலகம் உய்ய ஒரே வழி… உடையவர் திருவடி!

- Advertisement -
sriramanujar
sriramanujar

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் * பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ * நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே.

விளக்கவுரை – மலர்மேல் மங்கை என்றும், பத்மே ஸ்திதாம் என்றும் கூறுவதற்கு ஏற்றபடி தாமரைமலரைத் தனது இருப்பிடமாகக் கொண்டவள் பெரியபிராட்டி ஆவாள். அப்படிப்பட்ட அவள் – அகலகில்லேன் இறையும் – என்று நித்யவாசம் செய்யும் திருமார்பை உடையவன் பெரியபெருமாள் ஆவான்.

இந்தப் பெரியபெருமாளின் திருக்கல்யாண குணங்களின் மூலம் ஏற்பட்ட அனுபவத்தினால் திருவாய்மொழியை அருளிச்செய்வதில் மட்டுமே நிலைநின்றவர் நம்மாழ்வார் ஆவார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளை அண்டி நின்று, அவற்றின் மூலம் மட்டுமே வாழ்ந்து வருபவர்; பலவகையான சாஸ்த்ரங்கள் கற்றுச் சிறந்து விளங்கும் கூரத்தாழ்வான், கோவிந்தர், தாசரதி போன்றோரும் சாஸ்த்ரங்களை நன்றாகப் பயின்றும் அவற்றை விரோதித்து நின்ற யாதவப்ரகாசர், யஜ்ஞமூர்த்தி போன்றோரும் தன்னிடம் வந்து நிலையாக இருக்கும்படி உள்ளவர் –

இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருவடிகளை, அவை மட்டுமே நமக்கு உபாயம் என்று அறிந்த நாம், அவற்றை நிலையாகப் பற்றி வாழ வேண்டும். இதற்கு என்ன வழி என்றால் – எனது நெஞ்சமே! அந்த உடையவரின் திருநாமங்களை எப்போதும் இடைவிடாமல் கூறியபடி இருப்பதே ஆகும்.

sriramanujar sriperumbudur
sriramanujar sriperumbudur

2. கள்ளார் பொழில் தென் அரங்கன் * கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் * குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு * ஒன்றறியேன் எனக்கு உற்ற பேரியல்வே.

விளக்கவுரை – தேன் வழியும் சோலைகளால் சூழப்பட்ட அழகான திருவரங்கத்தில், அந்த உயர்ந்த திவ்யதேசம் மூலம் மட்டுமே தனது பெருமைகள் அனைத்தும் வெளிப்படும்படியாக அழகியமணவாளன் சயனித்துள்ளான். தாமரைமலர் போன்ற அழகும் செம்மையும் கொண்ட அவனது திருவடிகளைத் தங்கள் மனதில் நிலை நிறுத்தாமல் உள்ளவர்களும் இந்த உலகில் உண்டு.

கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிட்டியும், அதற்கு ஏற்ற பாக்கியம் பெறாத இந்த மனிதர்களை (பெரியபெருமாளின் திருவடிகளைத் தங்கள் நெஞ்சத்தில் எண்ணாதவர்களை), நான் விலக்க வேண்டும். திருக்குறையலூர் என்னும் திவ்யதேசத்தில் அவதரித்த திருமங்கையாழ்வாரின் திருவடிகளின் கீழே, எப்போதும் அகலாதபடி பக்தியுடன் இருப்பவர் எம்பெருமானார் ஆவார். அவருடைய மிகவும் உயர்ந்த குணங்கள் தவிர வேறு எதனையும் என் மனம் சிந்திப்பதில்லை. மிகவும் தாழ்ந்தவனாகிய என் போன்றவனுக்கு இத்தகைய உயர்ந்த நிலை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று அறியமுடியவில்லை.

srirangam ramanujar
srirangam ramanujar

மனத்தூய்மை மிகவும் அவசியம்

 இறைவனை மகிழ்விப்பதை விட அடியார்களை மகிழ்விப்பது சிறந்தது; இறைவனிடம் செய்யும் குற்றங்களை விட அடியார்களிடம் செய்யும் குற்றம் மிகவும் கொடியதாகும்.  இறை வடிவமாக வழிபடப் பெறும் திருவுருவங்களைக் கல், மரம் என்பதும், ஆசாரியனைச் சாதாரண மனிதன் என்பதும், அடியார்களை பழித்துப் பேசுவதும் , துளசித் தீர்த்தத்தை வெறும் நீர் என்பதும் கூடாதவையாகும்.

பிரபத்தி நெறியில் எம்பெருமானைச் சரணாகதி அடைந்து கடவுள் பக்தியில் ஆழ்ந்திருக்கும் அடியவர்களோடு இடையறாது பேசியும் பழகியும் வர வேண்டும். நீங்கள் எந்த கடமையைச் செய்வதாக இருந்தாலும் உங்கள் நன்மையை மட்டுமே கருதாமல் இறைவனின் திருவுள்ளம் உவப்பதற்காகவே செய்யுங்கள். 

நாள்தோறும் சிறிது நேரமாவது மனத்தூய்மையுடனும், நம்பிக்கையுடனும் திருவாய்மொழி முதலான நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி மகிழுங்கள்.  எப்போதும் பிறர் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பவர்களோடு பேசுதல் கூடாது. பக்தியின்றி பொறி புலன்கள் வழிச் செல்லும் வஞ்சகர்களோடு பழகுதல் கூடாது.
எம்பெருமானுக்கு உங்களால் முடிந்த கைங்கர்யங்களைச் செய்யுங்கள். குறைந்தபட்சம் இடையறாது அவன் திருநாமங்களை பொருள் உணர்ந்து ஜபம் செய்து கொண்டு இருங்கள்.  

sriramanujar sign
sriramanujar sign

அழியா இன்பத்தின் வாசல்

 • இறைவன் தொண்டினையும், அடியவர்களின் தொண்டினையும், ஆசிரியரின் தொண்டினையும் சமநிலையில் கருதிச் செய்யவேண்டும். முன்னோர்கள் கூறியிருக்கும் தெய்வீகமான நூல்களில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
 • ஒருவன் எவ்வளவு அறிவுடையவனாக இருந்தாலும், இறைவன்,ஆசிரியர் ஆகியோருக்கு தொண்டு செய்யாமல் அவர்களை இகழ்ந்து மதிக்காமல் திரிந்தால் அவன் அழிந்து போவது நிச்சயம்.
 • சிறந்த அடியார்களாகிய நல்லோரிடம் சேருவதே அழியாத இன்பத்திற்கு வாசல் ஆகும். அதனால் அடியார்களின் உள்ளம் மகிழும் படி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
 • வெறும் புற ஒழுக்கங்களும், ஆச்சாரங்களும் மட்டுமே ஆண்டவனை அடைய போதுமானதில்லை. உண்மையான அடியார்களை ஒருபோதும் ஒருமையில் அழைப்பது கூடாது.
 • எப்போதும் பிறர் மீது குற்றம் குறை கண்டுபிடிக்கும் குணமுடையவர்களிடம் பேசக்கூடாது. வயிறு வளர்ப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் கீழ்மக்களிடம் பழகுதல் கூடாது.
 • இறைவனை மகிழ்விப்பதை விட, அவன் அடியார்களை மகிழ்விப்பது சிறந்தது. இறைவனிடம் செய்யும் குற்றங்களை காட்டிலும் அடியார்களிடம் செய்யும் குற்றங்கள் மிகவும் கொடியதாகும்.
ramanujar
ramanujar

எல்லாம் அவன் கையில்!

 • பழமையான பெரிய ஆசாரியர்களின் உபதேசங்களில் நம்பிக்கை கொள்ளுங்கள். உலக இன்பங்களில் ஒரு பொழுதும் அடிமையாகாதீர்கள். உலக ஞானத்தைக் கொண்டு களிப்படையாதீர்கள்.
 • இறைவனுடைய மகிமை பற்றியும் அவனுடைய படைப்பின் அதிசயங்கள் பற்றியும் கூறும் நூல்களையே அடிக்கடி பயிலுங்கள்.
 • பரமனுடைய திருநாமங்களையும் மகிமைகளையும் கேட்டு மகிழ்வது போலவே, பரமனுடைய அடியார்களின் திருநாமங்களையும் மணிமொழி களையும் செவியுற்று மகிழுங்கள்.
 • நீங்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், பரமனுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் தொண்டு செய்தால் தான் வாழ்க்கையில் உய்வு பெற முடியும்.
 • பரமனின் திருவடிகளில் தன்னை உண்மையாகச் சமர்ப்பித்த ஒருவன், தன் வருங்கால வாழ்வுபற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. காரணம் பரமனின் கையில் தான் எல்லாமே உள்ளது. இதுபற்றித் துளியளவு கவலை கொண்டாலும், அவனது சரணாகதி பொருளற்றதாகும்.
 • இந்த உலகில் வாழும் காலத்தில், உங்கள் நண்பர் யார், பகைவர் யார் என்பதை விவேகத்துடன் அறிந்து
  கொள்ளுங்கள்.
  – ஸ்ரீ ராமானுஜர்
 • ஸ்ரீ கிருஷ்ண அனுபவ பிரசார சபா (SKAPS)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe