
வணிகர் சிறப்பு
நீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!
நெடிதுதூ ரந்தி ரிந்தும்
நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடி
நீள்நிலத் தரசு புரியும்
வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;
வருமிடம் வராத இடமும்
மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிட
வளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்
ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்
அளவில்பற் பலச ரக்கும்
அமைவுறக் கொள்வர்;விற் பார்கணக் கதிலணுவும்
அறவிடார்; செலவு வரிலோ
ஆளியொத் தேமலையின் அளவும் கொடுத்திடுவர்
அருள் வைசியர்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
அருமை தேவனே!, அருளுடைய
மனத்தவரான வணிகர், (வணிகத்திற்கு)ப்
பெருங்கடலையும் கடந்து செல்வர்,
மலைநாடுகளையும் சுற்றுவர், நீண்ட தொலைவு அலைந்தாலும் எண்ணத்திலே கலக்கம் அடையார்,
சோர்வு அடையார், பொருளையீட்டி
வைத்துக்கொண்டு பெரிய நாட்டை ஆளும் வாளேந்திய அரசர்களைத் தம்
கையிற் போட்டுக்கொள்வார்கள், (பொருள்) வரும் இடத்தையும் வராத
இடத்தையும் (பொருள்வாங்குவோர்) உள்ளத்தையும் தெரிந்து (பொருள்)
கொடுத்து, ஒரு பொருள் நூறாக வளரும்படி யீட்டுவர்,
(பொருள்) வரக்கூடிய நீண்ட
தொலைவுக்கும் ஆளைச் செலுத்துவர்,
(பொருள்) மிகுதியையும் குறைவையும் கேட்டறிவர், எல்லை அற்ற பலவகையான
பொருள்களையும் பொருத்தம் அறிந்து வாங்குவர், விற்பார்கள்,
கணக்கினில் இம்மியும் பிசக விட
மாட்டார்கள், (ஒழுங்கான) செலவு வந்தாலோ சிங்கம் போல அஞ்சாமல்
மலையளவாயினும் செலவழிப்பார்கள்.