புராண வரலாற்று சிறப்பு மிக்க காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா இன்று ஆனி பௌர்ணமி யில் வெகு விமர்சியாக நடந்து வருகிறது.
63 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் என்ற சிறப்புக் கொண்டவர் இந்த காரைக்கால் அம்மையார்.
சிவபெருமானின் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் இந்த மாங்கனித் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுகிறது.
மாங்கனித் திருவிழா என்பது அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் ஒரு மாங்கனி தொடர்பாக நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வினை இன்றளவும் நினைவு கூருமுகமாக, காரைக்காலிலுள்ள சுந்தரம்பாள் உடனாய ஸ்ரீகயிலாசநாத சுவாமி கோயில் சார்பில் நடத்தப்படும் திருவிழா ஆகும். காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மாங்கனித் திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
காரைக்காலில் உள்ள சிறந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் புனிதவதி. இவர் சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். இவருக்கும் நாகப்பட்டினத்தில் உள்ள வணிகரின் மகன் பரமதத்தனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு அன்னம், பொன், பொருள்களைக் கொடுத்து சிவ தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் பரமதத்தன் தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டுக்கு கொடுத்து அனுப்பினார். அதைப் பெற்றுக்கொண்ட புனிதவதி தனது கணவனின் வரவுக்காக காத்திருந்தார். அப்போது பசியுடன் ஒரு சிவனடியார் வந்தார். வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்த புனிதவதியோ, சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள் என்று கூறினார். அதற்கு சிவனடியார் “அம்மா! தாயே! பசியில் உயிர் போகிறது, ஏதேனும் இருப்பதைக் கொடும்மா!” என்றார். அப்போது புனிதவதி தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார்.
மதிய உணவு உண்பதற்காக வீட்டுக்கு வந்த பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்குக் கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார். இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதைப் பெற்றுக்கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு உண்ட மாங்கனியைவிட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டார். கணவனின் கேள்விக்குப் பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள்.
இதைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெருமானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினார். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளின் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் அவரை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தார். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்ணுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தார். இந்தத் தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்துகொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது 2-வது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தார்.
கயிலாயம் சென்ற அம்மையார் கணவனே தன்னை தெய்வம் என்று கூறி வணங்கியதால் இறைவனை வேண்டி பேய் உருவமாக மாறி காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்துக்கு நடந்து சென்றார். அம்மையே என்றழைத்த இறைவன் அப்போது `அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?” என்று புனிதவதியை நோக்கி கேட்டார். அதற்கு அம்மையார், இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக்கொண்டிருக்கும் வரம் வேண்டும்'' என்று கேட்டார்.
அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்” என்று அருளினார்.
அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தைக் கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த காரைக்கால் அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனி படைத்தது, சிவபெருமானிடம் அம்மையார் மாங்கனி பெற்றது போன்ற நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பவுர்ணமி அன்று காரைக்காலில் உள்ள ‘காரைக்கால் அம்மையார்’ திருக்கோயிலில் மாங்கனித் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாவின்போது பக்தர்கள் தம் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளும்பொருட்டு மாங்கனிகளை வீசும்போது விழாவிற்கு வந்திருந்தோர் அவற்றைப் பிடிக்கிறார்கள். பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் தம் கையில் மாம்பழத்துடன் உலா வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தந்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொள்வதாக பக்தர்களால் கருதப்படுகிறது.