
கார்த்திகை மாதம் வரும் நவ17இல் தொடங்க இருக்கும் நிலையில் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பனை நோக்கி விரதம் இருக்கும் பக்தர்கள் மாலை அணிவது எப்படி? கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
அன்பும் அருளும் வடிவான சாஸ்தா சபரிமலை வாழும் ஐயப்பன் அருள் பெற கார்த்திகை மாதம் உகந்ததாக கருதப்படுகிறது. இந்தியா முழுவதிலும் வெளிநாடுகளில் இருந்தும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதத்திற்கு பிறகு எரிமேலி பேட்டை துள்ளி பம்பையில் புனித நீராடி மலை மீது ஏறி ஐயப்பனை தரிசிக்கும் அந்த நொடியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
சன்னியாசி கோலத்தில் வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பன் பார்வை வாழ வைத்த பக்தர்கள் கோடி கோடி. அவ்வாறு ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் மாலை அணிவது தொடங்கி, இருமுடி இறக்குவது வரை என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம். கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவித்தால் நல்ல நேரம் பார்க்க தேவையில்லை. பிற நாட்களில் மாலை அணிவிக்கும் போது நல்ல நேரம் பார்த்து மாலை அணிவிக்க வேண்டும். இதுபோல பல விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஐயப்பன் விநாயகர் டாலர்களுடன் துளசி மாலை ருத்ராட்ச மாலையை முதல் நாள் இரவே தயார் செய்து அதனை பாலில் ஊற வைக்க வேண்டும். கார்த்திகை முதல் நாள் என்றால் ஏதாவது ஒரு கோவில் குருசாமியின் அருளுடன் மாலை அணிந்து கொள்ளலாம். முதன் முறையாக மாலை அணியும் கன்னி சாமிகள் குருசாமி இன்றி மாலை அணியக்கூடாது. ஏனென்றால் அப்போதுதான் அவர் ஐயப்பனுக்கு என்னென்ன விரத முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்து கூறுவார். பிற நாட்களில் மாலை அணிந்தால் நல்ல நேரம் பார்ப்பது அவசியமாகும்.
மாலை அணிந்ததிலிருந்து மனதில் தீய எண்ணங்களை முற்றாக விலக்கி விட வேண்டும். மாலை அணிந்த பக்தர்கள் மது மாது புகை மாமிசம் உள்ளிட்ட தீய பழக்கங்கள் அனைத்தையும் முற்றாக துறந்து விட வேண்டும். குறிப்பாக வீட்டிலிருந்து தூரமாக இருக்கும் பெண்களிலிருந்து பக்தர்களும் தூரமாக இருக்க வேண்டியது அவசியம். பூப்புனித நீராட்டு விழா துக்க நிகழ்வுகள் போன்ற வீடுகளுக்கு செல்லக்கூடாது.
அதிகாலை மாலை இரு வேளைகளும் குளித்து வீட்டில் இருக்கும் ஐயப்பனின் புகைப்படத்திற்கு பூஜை செய்வது அவசியம். மூன்று நேரங்கள் உணவு எடுத்துக் கொண்டாலும் கட்டுப்பாடுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை இரவு நேரங்களில் பழங்களை மட்டுமே சாப்பிடுவது நல்லது. முதல் முறை மாலை அணியும் பக்தர்கள் கருப்பு ஆடை அணிய வேண்டும் அதன் பிறகு குருசாமி நிலையை அடைந்தால் பச்சை நீல வண்ண ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.
வீட்டில் கட்டில் மெத்தை பாய் போன்றவற்றை பயன்படுத்தாமல் கருப்பு நீல நிற ஆடைகளை தரையில் விரித்து தூங்க வேண்டும். செருப்பு அணியாமல் வெறும் காலில் நடக்க பழகிக் கொள்ளுங்கள். மாலை அணிந்த பக்தர்கள் எதிரே வரும்போது சுவாமி சரணம் ஐயப்பா என சொல்லுங்கள் பெண்களை தேதியாகவும் சிறுவர் சிறுமிகளை மணிகண்ட சுவாமியாகவும் அழைக்க வேண்டும். ஐயப்பனின் அருள் பெற ஒரு மண்டலம் முழுமையாக விரதம் இருப்பது அவசியமாகும்.
நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் சபரிமலையில் இருந்து ஐயப்பன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற அச்சத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் எந்த அளவு உண்மையாக நேர்த்தியாக விரதம் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு ஐயப்பன் உங்களுக்கு அருள் தருவார். ஐயப்பனின் அருளைப் பெற காலையும் மாலையும் சரண கோஷங்களை வீட்டில் ஒலிப்பது மிகவும் அவசியம். கெட்ட எண்ணங்களை ஒழித்து நல்ல எண்ணங்களோடு ஐயப்பனின் அருள் பெற இந்த விரத முறைகளை கடைபிடித்தால் நல்லதே நடக்கும்.