
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது.
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருவெம்பாவை
திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் “திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து” எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற் படியிலே வைத்தருளினார். இறைவனையே உருக வைத்த திருப்பாடல்களை நமக்குக் கொடுத்த மாணிக்கவாசக நாயனார் அருளிய திருவெம்பாவையை நாமும் பாடி இறையருள் பெறுவோம்.
மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம்.
முதல் பாடல்..
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
பாடலுக்கான உரை :
வாள் போன்ற, அகண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும், முடிவும் இல்லாத ஒளியாகிய சிவனைப் பற்றி, நாங்கள் பாடுவதைக் கேட்ட பின்னாலும், இன்னும் தூங்குகிறாயோ? உன் காது உணர்ச்சி அற்றுப் போய்விட்டதோ? மகாதேவனின் பாதங்களை வாழ்த்தி நாங்கள் எழுப்பிய வாழ்த்தொலி, வழி எங்கும் ஒலிப்பதைக் கேட்ட பின்னும், மலர்கள் தூவப்பட்ட படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நீ, மெய்மறந்து எழுவதும், பின்பு திரும்பப் புரண்டு படுப்பதுமாய் செய்வதறியாது தவிக்கிறாய். என் தோழியே!