
இன்று மார்கழி முதல் புதன் கிழமை குசேலர் தினமாக உலகில் உள்ள ஸ்ரீகிருஷ்ண பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.இன்று குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் குசேலர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
குசேலர் அதிதியாகச் சென்று பகவானை தரிசனம் செய்து பயன்பெற்ற நாள் என்பதால் திதி கணக்கின்றி மார்கழி மாதத்தின் முதல் புதன்கிழமை இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. குசேலரும் கிருஷ்ணனும் ஒரே குருகுலத்தில் பயின்ற தோழர்கள். கிருஷ்ணன் மதுராவின் அரசன். குசேலனோ 27 குழந்தைகளோடு வறுமையில் வாடினார். தங்கள் குடும்பத்தின் வறுமை நீங்க என்ன வழி என்று யோசித்த குசேலரின் மனைவிக்கு, தன் கணவரின் பால்ய சிநேகிதரும், துவாரகை மன்னருமான பகவான் கிருஷ்ணரின் நினைவு வந்தது.
பகவானை நோக்கி நம்மை வழிப்படுத்துவது குருநாதராக இருப்பார். இங்கே குசேலரின் மனைவி அவரை துவாரகை கண்ணனிடம் அவர் கடவுள் என்று அறியாமலே ஆற்றுப்படுத்தினார். மேலும் கண்ணனுக்குக் கொடுக்க சிறிது அவலையும் ஒரு துணியில் முடிந்து கொடுத்தார்.
இன்று துவாதசி திதி. துவாதசி அன்று எளிமையான உணவான நெல்லிக் கனி, அகத்திக்கீரை ஆகியன படைத்து வழிபடுவது வழக்கம். அதோடு இன்று குசேலர் இறைவனுக்குப் படைத்த அவலை நெய்யோடும் வெல்லத்தோடும் படைத்து வழிபட வறுமை நீங்கி செல்வச் செழிப்பு கிட்டும் என கிருஷ்ண புராணம் கூறுகிறது.