பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஆவணிமாதம் அஷ்டமி திதியில் ஜென்மாஷ்டமி கொண்டாடுவது போல் சூரியனுக்கு தை மாதம் சப்தமி திதியில் ஜென்ம தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.இந்த விழா இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட பல புண்ணிய சேத்திரங்களில் கொண்டாடப்படுகிறது.
நம் நாட்டில் நம்மை வாழவைத்து கொண்டிருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடுவது சிறப்பு. அதேபோன்று சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த நாள்தான் ரதசப்தமி தினமாகும். அதாவது உத்ராயண தை அமாவாசைக்கு பின்வரும் ஏழாவது நாள் சப்தமிதிதி ரதசப்தமி என்று போற்றப்படுகிறது.
ரதசப்தமி நாளில் தான் சூரிய தேவன் பிறந்ததாகக் புராண கதைகள் கூறுகின்றன. இந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், இன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபடுபவர், தங்களுடைய பாவங்களில் இருந்து விடுபடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ஆயுள், ஆரோக்யம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாக சொல்லப்படுவது ரதசப்தமி விரதமே. நம் பாவங்கள் விலகி பகலவனைக் கண்டு பனி மறைவது போல மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம்.
காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் ஒரு அந்தணர் வந்து உணவு கேட்டார். கணவருக்கு பரிமாறியபின்னர் மெதுவாக நடந்து அந்தணருக்கு உணவு எடுத்து வந்தார் அதிதி. இதனால் கோபம் கொண்ட அந்தணர், தர்மத்தை புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தை பாதுகாப்பதற்காக மெதுவாக நடந்து வந்த அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபமிட்டார்.
அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி தன் கணவரிடம் நடந்தவற்றை விளக்கினாள். இதைக்கேட்ட காஷ்யப முனிவர், கவலைப்படாதே! அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் நமக்கு கிடைப்பான் என்று வாக்களித்தார். அதன்படி ஒளி பொருந்திய புத்திரன் ஒருவர் அவர்களுக்கு கிடைத்தார். அவரே உலகைக் காக்கும் சூரியன்.
சூரியன் பிறந்த நாள் திதிகளில் ஏழாவது நாளான சப்தமி திதி ஆகும். அந்த நாளிலேயே சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். புனித நதிகளுக்கு சென்று நீராட முடியாதவர்கள் இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட பிரார்த்தனை செய்து மகிழ்கின்றனர். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு நீராடுவது சுபம் என ஜோதிட ரீதியான தகவலாக உள்ளது..
சிறப்புகள் பல வாய்ந்த ரத சப்தமி நாளான இன்று சூரியனை வணங்குவது சிறப்பு ஆகும்.
பார்வைக்குத் தெரியும் பகவானை, பகலவனை
ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, ‘ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!’ என்று சொல்லி வணங்கலாம் என்கின்றனர் பெரியோர்கள்.