
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-20)
– மீ.விசுவநாதன் –
“சங்கரகிருபா”வில்
கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ.வின் தொடர்”
சிருங்கேரி ஜகத்குருவின் ஆசிகளுடன் வெளிவந்து கொண்டிருந்த அருமையான ஆன்மிகப் பத்திரிக்கை “சங்கரகிருபா”. தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகி ஆன்மிக அன்பர்களின் மனத்திற்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. தமிழில் வெளியான “சங்கரகிருபா”வின் ஆசிரியராக ஸ்ரீ. கே.ஆர். வேங்கடராமையர் இருந்தார்கள். அவர் சிறந்த அறிஞர்களிடமும், ஆன்றோர்களிடமும் சிரஞ்ஜீவியான அருமையான பல கட்டுரைகளைப் பெற்று வெளியிட்டு வந்தார்கள்.
அப்படிப் பெற்று வெளிவந்ததுதான் கலைமகள் ஆசிரியர் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்கள் எழுதித் தொடராக வந்த “அபிராமி அந்தாதி விளக்கவுரை” என்ற அற்புதமான கட்டுரை. மயிலாப்பூரில் இருக்கும் “அல்லயன்ஸ்” பதிப்பகத்தார் “அபிராமி அந்தாதி விளக்கவுரை” (எழில் உதயம்) என்ற தலைப்பில் நான்கு பாகங்கள் கொண்ட நூலாக அதை வெளியிட்டிருக்கிறார்கள். முதல் பாகத்தின் முன்னுரையில் கி.வா.ஜ. அவர்கள் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்:
“அபிராமி அந்தாதி விளக்கவுரை” முதல் பாகம்: முன்னுரை
(கி.வா.ஜகந்நாதன்)
பல ஆண்டுகளுக்கு முன் திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் அபிராமி அந்தாதிக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்று பணித்தார்கள். அவர்கள் திருவுளப்படியே முதலில் அப்பதிவு காசிமடத்தின் வெளியீடாக வந்தது. பிறகு இரண்டாம் பதிப்பும் வெளியாயிற்று. மூன்றாம் பதிப்பு அமுத நிலைய வெளியீடாக மலர்ந்தது. அந்த நூலுக்கு உரை எழுதும் போது ஸ்ரீவித்யா சம்பந்தமான நூல்களைப் படித்தும் உபாசகர்களோடு பழகியும் பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன்.

என்னுடைய ஆசிரியப்பிரானாகிய டாக்டர் மகாமகோபாத்திய ஐயரவர்கள் தக்கயாகப் பரணியைப் பதிப்பித்த போது அம்பிகையின் சம்மந்தமான பல நூல்களைப் படிக்கும் செவ்வி கிடைத்தது. அதன் பின்பு அபிராமி அந்தாதிக்கு உரை எழுதும்போது அந்தத் துறையில் பின்னும் ஆராய்ச்சி செய்யும் அவசியம் உண்டாயிற்று.
பிறகு ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஆதரவில் “சங்கரகிருபா” என்ற பத்திரிக்கையை வெளியிடத் தொடங்கினார்கள். அதன் ஆசிரியராகிய ஸ்ரீ. கே.ஆர். வேங்கடராமையரவர்கள் அந்தப் பத்திரிகையில் தொடர்ந்து ஏதாவது எழுதி வரவேண்டுமென்று விரும்பினார்கள். அவர்கள் விருப்பப் படியே அபிராமி அந்தாதிப் பாடல்களின் விளக்கத்தைக் கட்டுரை வடிவில் எழுதத் தொடங்கினேன்.
அவற்றைப் படித்தவர்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டி எழுதினார்கள். பலர் கட்டுரைகள் புத்தக வடிவில் வரவேண்டும் என்று தெரிவித்தார்கள். முழு நூலும் எழுதிய பிறகு வெளியிடலாமெனின் அது மிகவும் பெரிய புத்தகம் ஆகிவிடும் என்று நினைத்து முதல் 25 பாடல்களின் விளக்கக் கட்டுரைகளை மட்டும் தொகுத்து “எழில் உதயம்” என்ற பெயரில் இந்த உருவத்தில் வெளியிடலானேன்.

அபிராமிபட்டர் ஸ்ரீ வித்யா உபாசகர். தேவி சம்மந்தமான உண்மைகளை நன்கு உணர்ந்தவர். உண்மையான சாக்தர். ஆதலின் அவருடைய நூலுக்கு வேறு சம்பிரதாயப்படி உரை வகுப்பது பொருத்தம் ஆகாது. எனவே, படித்தும், கேட்டும் அறிந்த தேவி சம்மந்தமான கருத்துக்களைக் கொண்டு இப்பாடல்களுக்கு விளக்கம் எழுதத் தொடங்கினேன். தேவி உபாசனைத் துறையில் பெரும் பயிற்சி பெறாதவன் எளியேன். அந்த உபாசனை விரிவானது. நுட்பமானது. எனினும் ஸ்ரீ ஷண்முக நாதனுடைய திருவருளைத் துணையாகக் கொண்டு விளக்கம் எழுதத் தொடங்கினேன்.
சம்பிரதாய விரோதமும், பிழையும் இந்த விளக்கங்களில் இருத்தல் கூடும். இந்தத் துறையில் புகுந்து நலம் பெற்ற பெரியவர்கள் அவற்றை எடுத்துக் காட்டினால், அவற்றைத் தெரிந்து கொண்டு திருத்தம் செய்து பயன் அடைவேன்.
இந்த விளக்கங்களை “சங்கரகிருபா”வில் வெளியிடுவதற்கு ஆசி கூறியருளிய ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீமத் சங்கராச்சார்ய சுவாமிகள் அவர்களுடைய திருவடிகளைச் சிந்தித்து வந்தித்திருக்கிறேன். அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் ஸ்ரீ. கே.ஆர். வேங்கடராமையரவர்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“அம்மன்தரிசனம்” இதழில்
ஸ்ரீமான் ஏ.என்.சிவராமனின் கட்டுரை”
சிருங்கேரி மடத்தின் சார்பாக தமிழில் ஒரு ஆன்மிகப் பத்திரிகையைக் கொண்டு வரவேண்டும் என்று ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் விரும்பினார்கள். அதுவும், “சங்கரகிருபா”வைப் போல சிறந்த பத்திரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். ஸ்ரீ ஆசார்யாளின் அந்த விருப்பத்தை சிருங்கேரியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த “Call of Shankara” என்ற ஆங்கிலப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த குருபக்தர் ஸ்ரீமான் எம்.எம். சுப்பிரமணியம் அவர்கள், தகுந்த நபர்களின் மூலம் சென்னையில் பத்திரிகைத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு துடிப்பான சிருங்கேரி இளைஞரை 1989ஆம் ஆண்டின் இறுதியில் தொடர்பு கொண்டார்.

அந்த இளைஞருக்கு ஏற்கெனவே சிருங்கேரி குருநாதர்களிடம் பக்தியும், தொண்டுள்ளமும் இருந்ததை ஸ்ரீமான் எம்.எம். எஸ். அவர்கள் அறிந்து கொண்டு ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளைத் தரிசிக்க சிருங்கேரிக்கு வரும்படி அழைத்தார். அந்த இளைஞரும் சென்றார். ஸ்ரீ ஆசார்யாளை தரிசனம் செய்து நமஸ்கரித்தார். குருநாதர் அந்த இளைஞரின் துடிப்பையும், பக்தியையும் அறிந்து கொண்டார்.
பத்திரிக்கைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஸ்ரீ ஆசார்யாள் கேட்டதும்,” ஆசார்யாள்..முன்பே நான் ஒரு பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் “அம்மன் தரிசனம்” என்ற பெயரைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் அதையே ஸ்ரீமடத்திற்குக் கொடுத்து விடுகிறேன்” என்றாராம் அந்த இளைஞர்.
குருநாதரும் மிக்க மகிழ்ச்சியுடன் “நல்ல பெயராக இருக்கிறது…”அம்மன் தரிசனம்” என்ற பெயரிலேயே பத்திரிக்கையைத் தொடங்குங்கள். நீங்கள்தான் அதன் ஆசிரியர். உங்களுக்கு ஆசார்யாளோட பரிபூர்ண ஆசீர்வாதம் எப்போதும் உண்டு” என்று சொல்லி வெள்ளியில் ஸ்ரீ சாரதாம்பாள் டாலரும், தேங்காயும், மந்திராக்ஷதையும், கொடுத்து ஆசீர்வதித்தாராம்.
“ஸ்ரீ ஆசார்யாளின் அந்தப் பிரசாதம் தான் அம்மன் தரிசனம் ஆசிரியருக்கான “Appointment letter” என்று அந்த இளைஞர் பெருமைப் படுவார். “ஆசார்யாள் இந்தப் பத்திரிக்கைக்கு யார் பதிப்பாளர்?” என்று கேட்க” சென்னைக்குப் போனவுடன் நீங்கள் Enfield எஸ். விஸ்வநாதன் அவர்களைப் போய்ப் பாருங்கள். அவர் உங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வார் என்று அந்த இளைஞரை வாழ்த்தி அனுப்பி இருக்கிறார். அந்த இளைஞர்தான் ஸ்ரீ கே.எஸ்.சங்கர சுப்ரமணியன் என்ற “கீழாம்பூர்” சங்கர சுப்பிரமணியன் அவர்கள்.

சென்னைக்கு வந்ததும் ஸ்ரீ ஆசார்யாள் வழிகாட்டியபடி Enfield எஸ். விஸ்வநாதன் அவர்களை திருவான்மியூரில் சிவசுந்தர் அவின்யூவில் உள்ள அவரது இல்லத்தில், தனக்கு நண்பர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு சந்தித்து விபரங்கள் அனைத்தையும் கூறினார். பத்திரிக்கை வேலைகள் முழுவீச்சில் நடைபெற்றது.
பத்திரிக்கைக்கு ஒரு சிறந்த அறிஞரின் கட்டுரைத் தொடர் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற விருப்பத்தை ஸ்ரீமான் எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் கூற, அவரும் யாரை எழுதச் சொல்லலாம் என்று நினைக்கிறீர்கள்? என்று கேட்க, ” வேத மந்திரங்கள்” என்ற தலைப்பில் ஸ்ரீமான் ஏ. என். சிவராமன் அவர்களை எழுதச் சொல்லிக் கேட்கலாம் என்று சொன்னவுடன், ரொம்பவும் சந்தோஷத்தோடு,”சரியான தேர்வுதான்…அவருடன் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள். என்னையும் ஒருநாள் அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். நானும் அவரை சந்திக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தாராம்.
அந்த நல்ல நாளும் வந்தது. “அம்மன் தரிசனம்” ஆன்மிக மாத இதழ் 1990 ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் ஸ்ரீ ஆசார்யாளின் ஆசியுரையுடனும், ஸ்ரீமான் ஏ.என்.எஸ். அவர்களின் “வேத மந்திரங்கள்” என்ற அற்புதமான தொடருடனும் பல சிறந்த ஆன்மிகச் செய்திகளுடனும், எழுத்தாளர் ஸ்ரீ பாலகுமாரன் அவர்களது பெரியபுராணச் சிறுகதைகள் தொடருடனும் வெளியானது.
ஸ்ரீமான் ஏ.என்.எஸ். அவர்களின் “வேத மந்திரங்கள்” என்ற தொடரைத் தொகுத்து ஒரு நூலாக்கும் முயற்சியில் திரு. கீழாம்பூர் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். வேத மந்திரங்களைப் பற்றிய ஒரு ஆவணமாகவே அந்த நூல் இருக்கும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ஜெ.சு.பத்மநாபன் அவர்கள் அம்மன் தரிசனத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அந்த நேரத்தில் ஒரு சிறந்த தொடர் வேண்டும் என்று விரும்பி, சிருங்கேரி ஸ்ரீ ஆசார்யர்களுக்குத் தொண்டு செய்வதே தன் கடன் என்று வாழ்ந்த பணிவும், பக்தியும் மிக்க ஸ்ரீமான் வித்யாரண்யபுரம் கே. நாராயணஸ்வாமி அவர்களைக் கேட்ட பொழுது, அவரும் அந்தப் பணியை ஏற்றார்.

இரவும் பகலும் அந்தக் கட்டுரைக்கான உண்மைத்தன்மைகளை பல புத்தகங்களைக் கொண்டும், அன்மீகப் பெரியோர்களின் கருத்துகளைக் கேட்டும், ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் பரிபூர்ண கிருபையோடும் “சிருங்கேரியில் சங்கரர்” என்ற அற்புதமான தொடரை எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன. சிறந்த ஆவணமான அந்த நூல்கள் ஒவ்வொரு ஆன்மிக அன்பர்களிடமும் இருக்க வேண்டியது அவசியம்.
“அம்மன் தரிசனம்” ஆன்மிக மாத இதழ் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிருங்கேரி ஜகத்குரு நாதர்களின் நல்லாசிகளோடு இன்றும் ஆன்மிகச் செய்தி மலரின் மணத்தை உலகெங்கும் பரப்பி பக்தர்களின் மனத்தை உயர்த்திப் பெருமை பெற்று வருகிறது.
(வித்யையும் விநயமும் தொடரும்)