thiruppugazh stories - 2026

திருப்புகழ் கதைகள்: பாண்டவர் தேர்கடவும் நீண்ட பிரான்

ஆன்மிகக் கட்டுரைகள் Featured லைஃப் ஸ்டைல்
thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 340
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கோங்கிள நீரிளக – திருவேங்கடம்
பாண்டவர் தேர்கடவும் நீண்ட பிரான் 2

            பொதுவான கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால், சாரதி என்பவன், வீட்டு வேலைக்காக வாகனங்களைச் செலுத்துபவன் அல்லன். அவன் மதிப்புமிக்கவன். திறமையான தேரோட்டி. போர்க்காலங்களில் அதிதிறமையாக தேரைச் செலுத்தும் ஆற்றல்கொண்டவன் என்பதே பொருளாக இருக்கிறது. பெயர்ச்சொல்லில் இது தொழிற்பெயர் வகை.

            பார்த்தன் எனும் சொல்லை ஆயத்தொடங்கினால், அது ஒரு காரணப்பெயர். குந்திபோஜனின் மகள் என்பதால் அவளுக்கு குந்தி என்று பெயர். பாண்டுவின் மனைவியான குந்திக்கு, இயற்பெயர் பிருதை. பிரீத்தி என்றும் சொல்லலாம். இந்த பிருதாவின் மகனானதால் அவன் பார்த்தன். பாண்டவர்கள் எனும் பெயர் அவர்களுக்கு தந்தையின் வழிப்பெயர். பார்த்தன் என்பது அர்ச்சுனனுக்கு தாய்வழிப்பெயர்.

            பார்த்தசாரதி என்றால், பார்த்தனுக்கு தேரோட்டியவன். பாரதப்பெரும்போரில் பார்த்தனான அர்ச்சுனக்கு தேரோட்டியவன் இறைவனின் அவதாராமாகிய கிருட்டிணன். அவன்தான் பார்த்தசாரதி. பார்த்தசாரதி, தர்மத்தின் தலைவன், பாரதப்போரில் தர்மத்தின் பக்கம் நின்று தேரோட்டியவன். உலகம் புகழும் கீதையை அவன் சொன்னபோது அவன் பார்த்தசாரதியாகத்தான் நின்றிருந்தான். பார்த்தசாரதி என்பதன் பொருள் கண்ணனைக் குறிப்பது அல்ல. கிருட்டிணனுக்கு இருக்கும் பெயர்களில் சிறந்த பெயர் பார்த்தசாரதி. போரில் அவன் தர்மத்தின் பக்கம் தன்னை இணைத்துக்கொண்டு தர்மத்தை வெற்றிபெறச் செய்த வரைக்கு மட்டுமே அவன் பார்த்தசாரதி. பிறகு மீண்டும் அவன் கண்ணன். பதினெட்டு நாள் போர் நடந்த காலத்தில் ஒரு தேரோட்டியாக அவன் கீதை சொன்ன, பெரும்பலம் கொண்ட எதிரியை தர்மம் கொண்டு வென்ற காலம் மட்டுமே அவன் பார்த்தசாரதி.

            பார்த்தன் யார்?. பார்த்தன் என்பது பிருதாவின் மகன் என்பதனால், அர்ச்சுனன் மட்டுமா பார்த்தன்? இல்லையே. பாண்டுவின் புத்திரர்களில் மூவர் குந்திக்கு பிறந்தவர்கள். அவர்கள் பாண்டுவிற்கு பிள்ளைகளா என்பதைவேண்டுமானால் கேள்விக்கு உட்படுத்தலாமே தவிர, குந்தியின் பிள்ளைகள் என்பதில் ஐயமில்லை. தருமன், பீமன், அர்ச்சுனன் மூவருமே பார்த்தர்கள் தானே?. ஏன்?, கர்ணன் கூட பார்த்தன் தான். இவர்கள் நால்வரும் பார்த்தர்கள் என்றால், இவர்களுக்கு தேரோட்டிய அனைவருமே பார்த்தசாரதி தான் இல்லையா?. கிடையாது. வரலாற்றில் பார்த்தன் என்று அர்ச்சுனன் மட்டுமே அறியப்படுகிறான். பார்த்தா பார்த்தா என்று கீதையின் பல இடங்களில் அர்ச்சுனனை விளிக்கிறான் கண்ணன். ஏன் அவனுக்கு மட்டும் பார்த்தன். மற்றவர்கள் அந்தப்பெயரை ஏன் அடையவில்லை?.

            இதன் விளக்கம் மிக எளிமையானது. ஒரு குடும்பத்தின் பெயரை அக்குடும்ப வழிபிறப்புகளில் வலிமை பொருந்தியவன் மட்டுமே தாங்குகிறான். விற்போர் ஓங்கியிருந்த மாபாரத காலத்தில் யாராலும் வெல்லமுடியாத வில்லாளியாக, அதேசமயம் நேர்மையும் அன்பும் கொண்டவனாக அர்ச்சுனன் இருந்திருக்கிறான். ஐந்துபேரையும் சேர்த்து பாஞ்சாலி மணந்துகொண்ட அதே காலத்தில், அர்ச்சுனன் மீது ஆசைப்பட்டு பல பெண்கள் அவனோடு இணைந்திருக்கிறார்கள். அர்ச்சுனனின் அன்புதான் அதற்குக் காரணம். சதுரங்க சபையில் தோற்றபிறகு வீமன் கோபம்கொண்டு, சூதாடிய தருமனின் கையை எரிக்க தழல் கொண்டுவா என்று சகாதேவனைப் பணித்தபோது அர்ச்சுனன் மறுக்கிறான், அண்ணனின் பெருமைகளைச் சொல்லி வீமனை அன்புவயப்படுத்துகிறான். அதைப்போலவே போர்புரிய வந்த காலத்திலும் தனது ஆசிரியர்களை, சொந்தங்களை எல்லாம் கொல்ல அஞ்சுகிறான். அவனது உயிர்கள் மீதான பாசம் போர்க்களத்தில் கூட தெறிக்கிறது. பெரும் வீரனாக இருந்தாலும் வீமன் ஒரு தடிமாடு. அர்ச்சுனன் கட்டிளங்காளை. பெண்தன்மை பொருந்திய பெருவீரன். போரே அர்ச்சுனனின் கைவசம் தான் இருக்கிறது. அர்ச்சுனனைக் கொன்றால் போர் முடிந்துவிடும் என்பதுதான் துரியனின் இலக்கு. அதனால்தான் கண்ணன் அர்ச்சுனனுக்கு தேரோட்ட வருகிறான். மட்டுமல்லாமல் கண்ணன் அர்ச்சுனனுக்கு மச்சினன். கண்ணனின் சகோதரியும் அர்ச்சுனனின் மனைவி. அவளுக்குப் பிறந்தபிள்ளை தான் அபிமன்யு. பிறகு பரீட்சித்து. பரதவம்சம் தளைத்தது பாஞ்சாலியின் பிள்ளைகளால் அல்ல. மாறாக அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக்கும்  பிறந்த அபிமன்யு வழி பிள்ளைகளாலேயே. ஐவரில் தளைத்தது அர்ச்சுனன் வழி மட்டுமே. பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்த கடோத்கசன் கூட போரில் மரித்துப்போனான்.

            கர்ணனும் பார்த்தன்தானே?. அவனும் அர்ச்சுனனுக்கு இணையான வில்லாளிதானே?. சிறந்த கொடையாளியாக வேறு இருந்திருக்கிறானே?. சூதனால் வளர்க்கப்பட்ட காரணத்தால், தாழ்ந்தகுலத்தில் வளர்ந்த காரணத்தால் அவனுக்கு இப்பட்டம் மறுக்கப்படுகிறதா என்ன? பாரதத்தில் கர்ணனும் குந்திக்கு பிறந்தவனே என்பதை அறிந்தவர்கள் சிலர் மட்டுமே. கர்ணன், குந்தி, கண்ணன், இன்னொருவன் சூரியன். ஆக அவனுக்கு பார்த்தன் என்ற பெயர் இயல்பிலேயே மறுக்கப்படுகிறது. கர்ணனை அரசகுலமாக்க துரியோதனன் விரும்பி அவனை அங்கதேசத்துக்கு (இன்றைய பீகாரின் ஒரு பகுதி) அரசனாக்கும் பொது, அரசவை அதை மகிழ்வோடு ஏற்கவில்லை. ஆனால் அவனது திறமைகளைத் தாண்டி, நட்புக்காக எதையும் ஏற்க தயாரான மனிதனாக இருந்திருக்கிறான். தான் நிற்பது அநீதியின் பக்கம் என்பதை அவன் அறிந்திருக்கிறான். துருபதனின் செல்வி பெரும் சபை முன்னர் துகிலுரியப் பட்டபோது அந்த சபையில் கர்ணனும் இருந்தான். இராமன் சுக்கிரீவனிடம் நல்லவரே ஆனாலும் உனக்கு பகைவர் எனக்கும் பகைவர் என்று ருஷ்யமுகமலை மீது சத்தியம் செய்துகொண்டதைப் போல கர்ணனும் நட்புக்காக நீதியை ஆயாமல் நடந்துகொள்கிறான். அதனால் அந்தப்பட்டம் அவனுக்கு உரியது இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.