kundrathur - 2026

குன்றத்தூரில் வரலாற்று சிறப்புமிக்க சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்..

ஆலயங்கள்

குன்றத்தூரில் உள்ள பழமையான வரலாற்று சிறப்புமிக்க
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. கோவில் கோபுரங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் புதுப்பித்து வர்ணம் பூசும் பணி முழுமை அடைந்தது. தொடர்ந்து கடந்த 20-ந்தேதி கணபதி ஹோமம், கஜ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இன்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சிவஞான பாலையாசுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேக விழா காலை 6 மணி முதல் 7.30 மணிக்கு நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுடன் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கோவில் கோபுரத்தின் அருகே 400 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கும்பாபிஷேகத்தை காண அதிகாலை முதலே சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பினர்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூக்கள் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

kundrathur - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.