திருமலையில் வார இறுதி நாட்களில் தொடரும் பக்தர்கள் கூட்டம்..

Published:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று ஒருநாளில் திருமலையில் ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். திருமலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயலும்போது பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறி வருகின்றனர்.

இலவச தரிசன வரிசையில் சுமார் 3 கிலோமீட்டர் வரை தரிசனத்துக்காக இரவு பகல் பாராமல் வரிசையில் பக்தர்கள் காத்து நிற்கின்றனர். சாமானிய பக்தர்களும் தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காப்பி உள்ளிட்டவைகளை இலவசமாக அதிகாரிகள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கி வருகின்றனர். மேலும் லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பக்தர் ஒருவருக்கு இலவச லட்டு ஒன்று ரூ.50 விலையில் 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களும் சுமார் 8 மணி நேரம் வரை தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. திருப்பதியில் நேற்று 94,411 பேர் தரிசனம் செய்தனர். 46,283 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

images 28 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img