
இன்று சந்திரகிரகணம் என்பதால் திங்கள்கிழமை மாலை முதலே தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சாவூரில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ அன்னம், 700 கிலோ காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.கங்கைகொண்ட சோழபுரம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ராமேஸ்வரம் கோயிலிலிலும் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சாவூர் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னம், 700 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்புகழ் பெற்றது. பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும், கட்டட கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது,
சுமார் 1000 கிலோ அன்னம் மற்றும் கேரட், கத்திரிக்காய், வாழைப்பூ, பூசணி, முள்ளங்கி, பீட்ருட், வெண்டைக்காய், புடலங்காய் மற்றும் மாதுளை, வாழைப்பழம் உள்ளிட்ட காய்கறிகள் என 700 கிலோ கொண்டும் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது.
இந்த அன்னாபிஷேகம் மூலம் உலக மக்கள் நலன் பெறவேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் நடத்தப்படுகிறது. அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும். இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.