திருப்பாவை – பாசுரம் 13 புள்ளின்வாய் கீண்டானை

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

முன்னர் இரு பாசுரங்களில் கண்ணனின் செயலையும் மனத்துக்கினியானான ராமனின் பெருமையையும் பாடி தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் ராமகிருஷ்ணர்களின் புகழ்பாடி உன் இல்லத்தின் முன்னே நிற்கின்றோம்; கபட எண்ணத்தையும் கள்ளத் துயிலையும் கைவிட்டு எழுந்து வா என்கிறார்.
பறவை உருவம் கொண்டு வந்தான் பகாசுரன் எனும் அரக்கன். அவன் வாயைப் பிளந்து கிழித்து எறிந்தான் கண்ணன். கொடியவனான ராவணனை முடித்தான் ராமபிரான். அவன் சார்ந்த அரக்கர் குலத்தையும் வேரோடு களைந்து ஒழித்தான். இப்படி எம்பெருமானின் வீரத்தையும் கீர்த்தியையும் பாடியபடி பெண்பிள்ளைகள் எல்லோரும் பாவை நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்தில் புகுந்துள்ளனர். விடிவெள்ளியாகிய சுக்கிரன் உதய நேரம் என வானில் எழுந்தான். வியாழனாகிய பிரஹஸ்பதி அஸ்தமனம் என உறக்கம் கொண்டான். பறவைகள் தங்களுக்கான இரையைத் தேட வெளிக் கிளம்பின. அவ்வாறு தேடிப்போன இடங்களில் குதூகலித்து ஆரவாரம் செய்தன. மனத்தை ஈர்க்கும் மலர்களின் அழகைக் கொள்ளை கொள்ளும் அழகுடைய கண்களை உடையவளே! என்றும் அழகு குலையாத பதுமையைப் போன்றவளே! கண்ணனும் நாமும் கூடிக் குலவுவதற்கு வாய்த்த காலமாகிய இந்த நன்னாளில், நீ மட்டும் அந்தக் கண்ணனின் சேட்டைகளை மனத்தில் நினைத்தபடி தனியே படுத்துக் கிடக்கிறாயே. அந்தக் கபடத்தைக் கைவிட்டு எழுந்து வா. எங்களுடன் சேர்ந்து உடல் சிலிர்க்கும்படி குளத்தில் படிந்து குளித்து எழாமல், இப்படி படுக்கையில் வீழ்ந்து உறங்கிக் கிடக்கிறாயே! ஆச்சரியம்தான் என்று தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.

விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.