
இந்தியா ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி – மொஹாலி, 20.09.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணியை (20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 208 ரன், ஹார்திக் பாண்ட்யா 71, கே.எல், ராகுல் 55, சூரியகுமார் யாதவ் 46, நாதன் எல்லிஸ் 3/30) ஆஸ்திரேலியா அணி (19.2 ஓவரில் 211 ரன், க்ரீன் 61, ஸ்மித் 35, வேட் ஆட்டமிழக்காமல் 45, அக்சர் படேல் 3/17, உமேஷ் யாதவ் 2/27) 4 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணியில் இன்று ரிஷப் பந்த், பும்ரா விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் ஆகியோர் ஆடினர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை மட்டையாடச் சொன்னது.
இந்திய அணியின் தொடக்க வீரரும் அணித்தலைவருமான ரோஹித் ஷர்மா மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். விராட் கோலி ஐந்தாவது ஓவரில் அவுட்டானார். பவர் ப்ளே ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 46 ரன் எடுக்கப்பட்டது. ராகுல், சூர்யகுமார் யாதவ், பாண்ட்யா மூவரும் சிறப்பாக ஆடினர். நாலு ஓவர் ஆட வாய்ப்பிருந்தும் தினேஷ் கார்த்திக் துரதிர்ஷ்டவசமாக எல்பிடபில்யு முறையில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 208 ரன் எடுத்திருந்தது. இது ஒரு நல்ல ஸ்கோர்தான்.
ஆனால் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக தனது ஆட்டத்தைத் தொடங்கியது. பவர்ப்ளே ஓவர்களில் அந்த அணி 61 ரன்களை எடுத்தது. ஆரோன் ஃபின்ச் (22 ரன்), கிரீன் (61 ரன்), ஸ்மித் (35), வேட் (45*) இங்க்லிஸ் (17), என அவர்களது ஆட்டக்காரர்கள் நன்றாகவே விளையாடினார்கள். புவனேஷ்குமார் நாலு ஓவரில் 52 ரன் கொடுத்தார். அக்சர்படேல் மட்டும் ஓவருக்கு 4.25 ரன் கொடுத்திருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனவரும் ஓவருக்கு 11 ரன்னுக்கு அதிகமாக ரன் கொடுத்திருந்தனர். எனவே ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 211 ரன் எடுத்து வெற்றி பெற்றது.