
உலகக் கோப்பை டி20 போட்டிகள் – 21ம் நாள் – 5.11.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன..
இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் இலங்கை அணி (141/8, நிசாங்கா 67, ராஜபக்ஷா 22, குசால் மெண்டிஸ் 18, மார்க் வுட் 3/26), இங்கிலாந்து அணியிடம் (19.4 ஓவரில் 144/6, ஹேல்ஸ் 47, பென் ஸ்டோக்ஸ் 42, பட்லர் 28, லஹிரு, வனிந்து, தனஞ்சய தலா 2 விக்கட்) 4 விக்கட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இலங்கை அணியில் நிசாங்கா (45 பந்துகளில் 67 ரன்), மெண்டிஸ் (14 பந்துகளில் 18 ரன்), ராஜபக்ஷா (22 பந்துகளில் 22 ரன்) ஆகியோரைத் தவிர பிறர் நிலைத்து நிற்கவும் இல்லை; அடித்து ஆடவும் இல்லை. இங்கிலாந்தின் அதில் ரஷீத் 4 ஓவர்கள் வீசி 16 ரன் கொடுத்து இ விக்கட் எடுத்தார். பிற வீரர்கள் மிகச் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 141 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
எளிய இலக்கு; எளிதில் இங்கிலாந்து அணி எட்டிவிடும் என அனைவரும் எண்ணிய நேரத்தில் 7.2 ஓவரில் 75/1 என்ற நிலையில் இருந்து, அடுத்த ஏழு ஓவருக்குள் மளமளவென ஐந்து விக்கட்டுகள் விழுந்து 14.3 ஓவரில் 111/5 என்ற நிலைக்கு இங்கிலாந்து அணி வந்துவிட்டது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் பதற்றப்படாமல் ஆடி இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி 7 புள்ளிகள், 2.113 நெட் ரன்ரேட்டுடன் முதலிடத்தையும் இங்கிலாந்து அணி 7 புள்ளிகள் 0.473 என்ற ரன் ரேட்டுடன் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.
ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகள் பெற்றிருந்தபோதும் மைனஸ் 0.173 என்ற ரன்ரேட்டுடன் இருப்பதால் அரையிறுதிக்குத் தகுதிபெறவில்லை. நாளை குரூப் 2 பிரிவின் மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அடிலெய்ட் மைதானத்தில் நெதர்லாந்து தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் அதே மைதானத்தில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
மூன்றாவது ஆட்டத்தில் மெல்பர்ன் மைதானத்தில் இந்தியா ஜிம்பாபே அணிகள் மோதுகின்றன. நாளை மெல்பர்ன் மைதானத்திம் மழைக்கு வாய்ப்பு இல்லை.