
ராஜபாளையத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் 25 பள்ளிகளில் பயிலும் 190 பேர் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளி உள் விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது.
சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 25 பள்ளிகளை சேர்ந்த 190 மாணவிகள் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.
14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் 11 எடை பிரிவுகளிலும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் 13 எடை பிரிவுகளிலும், 19 வயது உடையவருக்கான போட்டிகள் 11 எடை பிரிவுகளிலும் நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு எடை பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் 37 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வரும் பிப்ரவரி மாதம் கன்னியாகுமரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் விருதுநகர் மாவட்டம் சார்பாக கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள் என மாவட்ட உடற்கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
