ஐ.பி.எல்.: டெல்லி அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிப்பு

புது தில்லி,

ஐபிஎல்., கிரிக்கெட் அணிகளில், டெல்லி அணி யுவராஜ் சிங், ஸ்டெய்ன், மேத்யூஸ் ஆகியோரை விடுவித்துவிட்டது.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங்கை, கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது ரூ.16 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் இவர் தான்.

ஆனால் 8–வது ஐ.பி.எல். தொடரில் யுவராஜ்சிங் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. 14 ஆட்டங்களில் வெறும் 248 ரன்கள் மட்டுமே (சராசரி 19.07) எடுத்தார்.

இந்நிலையில் 9–வது ஐ.பி.எல். சீஸனில், பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் முதற்கட்ட வீரர்கள் பரிமாற்றம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதன் அடிப்படையில் யுவராஜ்சிங்கை தங்கள் அணியில் இருந்து டெல்லி டேர்டெவில்ஸ் நிர்வாகம் விடுவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி அணியின் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் துவா கூறும்போது, ‘யுவராஜ்சிங் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் எங்களது பட்ஜெட்டை கருத்தில் கொண்டே அவரை விடுவித்துள்ளோம். தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசினேன். அவர் அதற்காக பெரிதும் வேதனைப்படவில்லை. இலங்கை வீரர் மேத்யூசையும் (ரூ.7½ கோடி) விடுவித்து இருக்கிறோம். இதனால் ரூ.23 கோடியை சிக்கனப் படுத்தியுள்ளோம்.’ என்றார்.