
தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப். 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியை பொறுத்தவரையில் 15 ஆயிரத்து 566 பேரும், தனித் தேர்வர்களாக 37 ஆயிரத்து 798 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் தேர்வை ஆர்வமுடன் எழுதினார்கள். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.17 முதல் ஏப்.21ம் தேதிக்குள் ஆண்டு இறுதித்தேர்வை முடிக்க வேண்டும். 4 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 முதல் ஏப். 28ம் தேதிக்குள் இறுதித்தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.