
பாகிஸ்தானின் நீர் வளத்துறை அமைச்சர் பைசல் வாத்வா நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு செய்வதை வெளிக்காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலானது.
சமூக ஊடகங்களில் 30 வினாடிகளுக்கு குறைவான ஒரு வீடியோ கிளிப்பில், ஒரு பத்திரிகையாளர் தனது சக செய்தியாளர்களுடன் வெளிநடப்பு செய்வதற்கு முன்னர் ஓரிரு வார்த்தைகள் பேசுகிறார்.
அதில், முன்னதாக ஊழல் அதிகரித்து வருவதாகக் கூறி, பாகிஸ்தான் அமைச்சரின் பதிலை எதிர்கொண்டார்.
இது குறித்து வெளியான தகவல்களின்படி, பத்திரிகையாளர் தனது கேள்விகளால் அமைச்சரைத் துளைத்தெடுத்தார். அந்நேரம், ‘பத்திரிகையாளர் தனக்கு வயதில் மூத்தவர் என்பதால் மட்டுமே தாம் இதற்கு பதிலளிப்பதாகக் கூறிய வாத்வா, இது குறித்த மற்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
அவரின் இந்த பதிலால் பெரிதும் காயமடைந்த மற்ற பத்திரிகையாளர்கள், அவர் மீண்டும் வரும் வரை காத்திருந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் ஊடகத்தினர் காத்திருந்தபின், அமைச்சர் திரும்பியபோது, ஒரு பத்திரிகையாளர் அவரை அழைத்தார், “நீங்கள் எங்களின் கேள்விக்கு பதில் கொடுக்கவில்லை, எங்களுக்கு நேரம் கொடுக்கவில்லை, எனவே நாங்கள் உங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை முற்றாகப் புறக்கணிக்கிறோம்”… என்று கூறி, அவர் கண் முன்னே மைக்குகளை ஒவ்வொன்றாக அகற்றி… அமைச்சருக்கு மூக்குடைப்பு நிலையை ஏற்படுத்தினார்.
இந்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலானது. அதில், பலரும், முதுகெலும்புள்ள பத்திரிகையாளர்கள் என்று பாராட்டி வருகின்றனர்.