ஆஸ்திரேலியாவில்… தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு பொய்த்தது!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

australia scott morrison - 2026

கட்டாயமாக வாக்களிக்க வேண்டிய ஆஸ்திரேலியாவில்; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை தவறாகி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி!

ஆஸ்திரேலியாவில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிற்கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 76 இடங்களில் வென்றாக வேண்டும். இந்த தேர்தலில் பருவ நிலை மாற்றம், வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி ஆகியவை முக்கிய பிரச்சினையாக எதிரொலித்தது. அதன் அடிப்படையில் பிரசாரம் செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் ஓட்டு போடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 1 கோடியே 64 லட்சம் பேர் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். 18 வயது நிறைவு அடைந்தவர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

ஓட்டு போடாவிட்டால் அவர்களுக்கு 20 ஆஸ்திரேலிய டாலர் (சுமார் ரூ.1,000) அபராதம் விதிக்கப்படும் நடைமுறை உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 95 சதவீத வாக்குகள் பதிவானது நினைவுகூரத்தக்கது.

தலைநகர் கான்பெர்ரா நேரப்படி காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இங்கு முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையைப் பயன்படுத்தி 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டுபோட்டு விட்டனர்.

நேற்றும் ஓட்டுப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடந்தது. பிரதமர் ஸ்காட் மோரிசன், மனைவி ஜென்னியுடன் வந்து சிட்னி நகரில் லில்லி பில்லி பப்ளிக் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுபோட்டார். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. நாடு முழுவதும் ஓட்டுப்பதிவு முடிந்த உடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

நாட்டின் கிழக்கு பகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 52 சதவீதத்தினரின் ஆதரவும், ஆளும் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கு 48 சதவீதத்தினரின் ஆதரவும் உள்ளது என தகவல் வெளியானது.

இந்நிலையில் கருத்துகணிப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கி பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

தேர்தல் முடிவை தொடர்ந்து தொழிற்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சார்ட்டன் அதிரடியாக விலகினார்.

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன். (திமுக., செய்தி தொடர்பாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.