கேரளாவில் மணமகன், மணமகள் உள்பட திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
girl marriage
girl marriage

கேரள மாநிலம் காசர்கோடு செங்கலா அடுத்த பிலங்கட்டா கிராமத்தில் கடந்த 17-ம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் 125-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி உள்ளது. ஆனால் அரசின் கட்டுப்பாட்டை மீறி அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 128 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மணப்பெண், மணமகன் உள்ளிட்டோரும் கொரோனா தொற்றுக்கு தப்பவில்லை.

இதனையடுத்து, மணப்பெண்ணின் தந்தை மீது கேரள தொற்றுநோய் அவசர சட்டத்தின் கீழ் பதியுடுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காசர்கோடு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விதிகளை மீறியது கண்டறியப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படலாம். மணப்பெண்ணின் தந்தைக்குத்தான் முதன்முதலில் கொரோனா தொற்று உறுதியானது.

பெண்ணின் தந்தையும், மணமகனும் சில மாதங்களுக்கு முன்புதான் துபாயில் இருந்து கேரளா வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் 14 நாட்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி இருப்பவர்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காசர்கோடு, மஞ்சேஸ்வரம், ஹோஸ்டர்க், கும்பாலா, நிலேஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. எந்த பொது போக்குவரத்தும் இங்கு அனுமதிக்கபடவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.