அரிசி வாளிக்குள் வைத்திருந்த நகையும் ரொக்கமும்..! அள்ளிச் சென்ற குரங்குகள்!

அடடே... அப்படியா? தமிழகம் லைஃப் ஸ்டைல்
Screenshot_2020_0819_094542

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே குடிசை வீட்டில் மூதாட்டி சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த நகைகள், ரொக்கத்தைக் குரங்குகள் செவ்வாய்க்கிழமை தூக்கிச் சென்றன.

திருவையாறு அருகே வீரமாங்குடி குதிரை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி சாரதாம்பாள் (70). கணவர் இறந்துவிட்ட நிலையில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வரும் இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (நூறு நாள் வேலை) வேலை பார்த்து வருகிறார். இதன் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தலா அரை பவுன் மோதிரம், தோடு, கவரிங் சங்கிலி, ரூ. 25,000 ரொக்கத்தைச் சேர்த்துள்ளார். இவற்றைப் பச்சரிசி நிரப்பப்பட்ட துணிப் பையில் வைத்து வாளிக்குள் மறைத்து வைத்திருந்தார்.

இவர் வீட்டு எதிரே உள்ள குழாயடியில் தன்னுடைய துணிகளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் வந்த 10-க்கும் அதிகமான குரங்குகள் சாரதாம்பாள் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே புகுந்தன. வீட்டுக்குள் வாளியில் நகைகள், ரொக்கம் கொண்ட பச்சரிசி பையையும், வாழைப்பழங்களையும் குரங்குகள் தூக்கிச் சென்றன.

இதையறிந்த சாரதாம்பாள் ஓடிச் சென்று விரட்டினார். வாளியுடன் சென்ற குரங்குகள் அருகிலுள்ள மருத்துவமனை மாடியில் வைத்து அரிசி, வாழைப்பழங்களைத் தின்றன. நகையும், ரொக்கத்தையும் மீட்பதற்காக வந்த மக்களைப் பார்த்த குரங்குகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டன.

அப்பகுதியில் நீண்ட காலமாகவே குரங்குகள் அதிகமாக உள்ள நிலையில், இப்போது வீட்டுக்குள் புகுந்து நகைகள், ரொக்கத்தையும் தூக்கிச் சென்றதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, குரங்குகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட சாரதம்பாளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.