தர்மத்தின் வழியே தெய்வ தரிசனம்!

கட்டுரைகள் தலையங்கம் லைஃப் ஸ்டைல்

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

பாரத தேசத்தில் புகழ்பெற்ற கோயில்களுக்கு வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்துக்கள் கோயில்களுக்குச் செல்லத் தீர்மானித்து இறைவனைத் தரிசிக்கத் திரண்டு வருவது பாராட்டுக்குரியதே. “முன்பை விட இப்போது கூட்டம் மிகவும் அதிகமாகி விட்டது. இவர்களெல்லாம் பயத்தில் வருகிறார்களா? அல்லது உண்மையான பக்தியுடன் வருகிறார்களா?” என்று கேள்வி எழுப்புபவர்கள் தாங்களும் அந்த யாத்ரீகர்களில் ஒருவரே என்பதை மறக்கக் கூடாது.  

ஆனால், இங்கு சில விரும்பத்தகாத போக்குகள் நிலவுவதையும் கவனிக்க வேண்டும். புகழ் பெற்ற பல கோயில்களில் அரசியல் தலையீடு அதிகமாகி, கோயில் வருமானம் திசை திருப்பப்படுவதும், ஊழல் வேரூன்றி இருப்பதும் எப்போதும் உள்ளதே.  

காசி போன்ற முக்கிய புண்ணிய க்ஷேத்திரங்களிலும், புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்ட கோயில்களிலும், இறைவனைத் தொட்டு வணங்கும் ‘ஸ்பரிஸ’ தரிசனம் செய்ய பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அதைப் பயன்படுத்தி இடைத்தரகர்களும், கருவறைக்குள் அனுப்பும் சில குழுக்களும் முறையற்ற வழியில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பாதுகாப்புப் பணியாளர்கள் பக்தர்களைக் கடுமையாகத் தள்ளிவிடுகின்றனர். சில பக்தர்கள் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுக்கத் துணிகின்றனர். அதிகாரிகள் இதைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டுப் பின்னர் இடைத்தரகர்களிடமிருந்து தங்கள் பங்கை பெற்றுக்கொள்கின்றனர். இந்தச் சூழல் மிகுந்த கவலையளிக்கிறது.

இவற்றோடுகூட, அரசியல்வாதிகளின் செல்வாக்கும், விஐபிக்களின் அதிகாரத் தோரணையான நடத்தைகளும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. வரவர இத்தகைய சிக்கல்கள் அதிகரிப்பது வேதனையளிக்கிறது.

அதோடு சில யாத்ரீகர்கள் புண்ணிய தீர்த்தத் தலங்களையும், கோயில் வளாகங்களையும் அசுத்தப்படுத்துகின்றனர். குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அங்கேயே வீசிச் சென்று சூழலை மாசுபடுத்துகின்றனர்.

தர்மத்தின் வடிவமாகத் திகழும் இறைவன், தன் சந்நிதியில் நடக்கும் இத்தகைய முறையற்ற செயல்களை மன்னிப்பாரா? பக்தி என்பது, இறைவனின் மகிமையை உணர்வது மட்டுமின்றி, பாவ, புண்ணியங்களின் விளைவுகளைப் புரிந்துகொள்வதையும் உள்ளடக்கியது.

அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டித் தரும் சுற்றுலாத் துறை, இந்து பக்தர்களின் வருகையால் பயனடைகிறது. அப்படியிருக்கையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதும், கோயில்களையும், புண்ணியத் தீர்த்தங்களையும் தூய்மையாகப் பேணுவதும், அங்கெல்லாம் பாலித்தீன் போன்ற பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் அந்தப் பொறுப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. சில மாநிலங்களில் இந்து மதத்திற்கு எதிரான மனப்பான்மை கொண்ட நிர்வாகங்கள், கோயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் மட்டுமே கவனம் செலுத்தி, கோயில் தொடர்பானத் தம் கடமைகளை முற்றிலும் புறக்கணிக்கின்றன. வடக்கு, தெற்கு என்ற வித்தியாசமின்றி தேசமெங்கும் இதே நிலைமை.  

இதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், சில அர்ச்சகர்கள், உரிய மந்திரங்களோ, ஆகம விதிமுறைகளோ, சடங்குகளைச் செய்வதற்கான முறையான அறிவோ பயிற்சியோ இல்லாமல், பக்தர்களை மிரட்டி, தரக்குறைவாகப் பேசி, வலுக்கட்டாயமாகப் பணத்தைப் பறிக்கின்றனர்.

இத்தகைய சூழலில், அமைதியான முறையில் இறைவனைத் தரிசிக்கவும், ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தைப் பெறவும் விரும்பும் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றனர். யார் தள்ளிவிடுவார்களோ, யார் திருடுவர்களோ, யார் தரக் குறைவாக நடந்து கொள்வர்களோ என்ற அச்சத்தோடுதான் இந்துக்கள் கோயில்களுக்குச் செல்ல நேர்கிறது.  

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற புனிதத் தலத்தைச் சேர்ந்த முக்கிய ஆசிரமத்தினர், ஆன்மீகச் சொற்பொழிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தனர். “தங்கள் சொற்பொழிவுகளால், எங்கள் புனிதத் தலத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் மக்கள் இத்தகைய புனிதத் தலங்களுக்கு வருவதைத் தவிர்க்குமாறு உங்கள் உரைகளில் அறிவுறுத்த முடியுமா?” என்று கேட்டனர்.

இந்த வேண்டுகோளுக்கான காரணம் என்னவென்றால், புனிதத் தலங்களுக்கு வரும் யாத்த்ரீகர்கள் பலரிடம் உண்மையான பக்தியோ, சிரத்தையோ இல்லை. மாறாக, அவர்கள் முறையற்ற, இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ள புனிதத் தலங்களின் பெருமைகளைப் பற்றிப் பேசும்போது ​​அங்கு வருபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கநெறிகள் பற்றியும், பக்தர்களின் பொறுப்புகள் குறித்தும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் கேட்போர், மகிமைகளை மட்டுமே கருத்தில் கொண்டு, பின்பற்ற வேண்டிய அடிப்படை ஒழுக்கநெறிகளைப் புறக்கணிப்பது விவேகமற்ற செயல்.

நமது புனிதத் தலங்களும் புண்ணிய தீர்த்தங்களும் பல லட்சம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் உன்னதமான வரலாறு கொண்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த பாரம்பர்யம்தான் எண்ணற்ற யோகிகளையும், பக்தர்களையும், முனிவர்களையும் உருவாக்கியுள்ளது.

ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் அரசு நிர்வாகிகள், அர்ச்சகர்கள்,  ஊழியர்கள் அனைவரும் இந்தப் புனிதமான பாரம்பரியத்தைப் புரிந்து கொண்டு அவற்றைக் காக்க வேண்டும். ஊழலைக் கட்டுப்படுத்தவும், இடைத்தரகர்களின் தொல்லையை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாத்ரீகர்கள் அதிகம் வரும் புனிதத் தலங்கள் அமைந்துள்ள ஊர்களில் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் மிகுந்த ஒழுக்கத்துடனும், அதிகப்படி பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.

ஆலயங்களும் புனிதத் தலங்களும் நமது கலாச்சாரத்தின் பெருமைக்குரிய அடையாளங்கள். இத்தகைய புனிதத் தலங்கள் பல தாக்குதல்களை எதிர்கொண்டாலும், தன்னலமற்ற பக்தர்களின் அர்ப்பணிப்பால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. தற்போதைய தலைமுறையினர் இந்த வரலாற்றை அறிய வேண்டும்.

யாத்ரீகர்கள் இடைத்தரகர்களுக்குத் தவறான முறையில் பணம் கொடுத்து ஊழலுக்குத் துணைபோகக் கூடாது. இவ்விதம் அக்கிரமமான வழியில் செய்யும் தரிசனம் இறைவனின் அருளைப் பெற்றுத் தராது. தர்மத்தின் சொரூபமான பரம்பொருள்  அவரவர் கர்மாவிற்கு ஏற்ற பலனை வழங்கத் தயங்குவதில்லை. இறைவனின் ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை. ஊழலற்றவர்களுக்கு மட்டுமே அவர் அருள் புரிகிறார். யாத்ரீக பக்தர்களுக்கு இந்த அடிப்படை புரிதல் இருக்க வேண்டும். இத்தகைய முறையற்ற வழிகளில் ஆலயத்தின் புனிதத்தைக் குலைப்பதற்குப் பதிலாக, அவரவர் வீட்டில்    இருந்தபடியே தெய்வத்தை நினைத்து தியானம் செய்வது சிறந்தது.

கோயில்களை வெறும் மக்கள் ஈர்ப்பு மையங்களாக மாற்றுவதற்கு பதிலாக,  தர்மத்தின் கட்டமைப்பாகப் பேணி, தூய்மையான, புனிதமான, அமைதியான சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கங்களும் அதிகாரிகளும் உள்ளத் தூய்மையுடன்  செயல்பட வேண்டும். அதே நேரம், கோயில்களைத் தீய நோக்கங்களுடனும், திட்டமிட்ட தாக்குதல்களுடனும் அணுகும் எதிரிகளிடமிருந்துப் பாதுகாக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொள்ளும் ஹிந்து பக்தர்கள் அனைவரும், தம் மத நம்பிக்கையையும், கோயில்களையும், தெய்வங்களையும் காக்கும் வீரர்களாக மாற வேண்டும். அவற்றைத் தாக்க வரும் ஆக்கிரமிப்பாளர்களை  அதே அளவு வலிமையோடும் எண்ணிக்கையோடும் அல்லது அதைவிட அதிகமாகவும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இறைவனை வணங்கக் கூப்பிய அதே கைகளால் இந்து மதத்தின் எதிரிகளைத் தடுக்கும் தர்மவீரர்களாக நிற்கவும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

பக்தர்கள் தர்மத்தையும், சாத்வீக குணத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அற்புதங்களைத் தேடுவதில் ஆர்வம் காட்டுவதை விடுத்து, தூய உள்ளத்துடனும் உண்மையான பக்தியுடனும் இறைவனை தரிசிப்பது சுருக்கமான தரிசனமாக இருந்தாலும் மிகப்பெரிய ஆன்மீகப் பலனைத் தரும் என்பதை உணர வேண்டும்.

(Source: தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ், நவம்பர், 2026)

ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.