ராகுலை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

இந்தியா

rahul_gandhiபுது தில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை உளவு பார்ப்பதாகவும் விளக்கம் தரக் கோரியும் காங்கிரஸார் இன்று நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பினர். பின்னர் வெளிநடப்பில் ஈடுபட்டனர். அண்மையில், ராகுல் காந்தியின் தில்லி துக்ளக் சாலையில் உள்ள அலுவலகத்தில் போலீசார் சென்று ராகுல் இருப்பிடம், நிலை குறித்து விசாரித்துள்ளனர். இது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ராகுலை உளவு பார்ப்பதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், மத்திய அரசைக் கண்டித்து நாடெங்கும் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ராகுல் காந்தி குறித்த விசாரணை சர்ச்சை இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எழுப்பப் பட்டது. முன்னதாக மாநிலங்களவையில் இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. பகல் 11 மணிக்கு அவை கூடியதும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், இந்த விவகாரத்தை எழுப்பி, இது, ஜனநாயகத்துக்கு எதிரானது. ஒருபோதும் ஏற்க இயலாது. இதுபற்றி இந்த அவையில் விவாதிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி முக்கிய தலைவர்கள் குறித்து போலீசார் தகவல்கள் சேகரிப்பது புதிய நடைமுறை அல்ல. 1957-ல் இருந்தே இத்தகைய விசாரணை நடைமுறையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே இந்த விஷயத்தை பெரிதாக்கி ஆதாயம் தேட முயல்கிறது. தேவை இல்லாமல் வதந்தியை கிளப்பி விடாதீர்கள் என்றார். மேலும் இதுகுறித்து தொடர்ந்து பேச அவைத்தலைவர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசைக் குறை கூறி கோஷமிட்டு, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதே போல் மக்களவையிலும் இந்தப் பிரச்னையை காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பினர். ராகுல் குறித்து விசாரித்தது ஏன் என்பதற்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். அதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு, ’தில்லி போலீசார் நடத்திய விசாரணை வழக்கமான ஒன்றுதான். மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை. இந்த விவகாரத்தில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை’ என்று கூறினார். ஏற்கெனவே இது குறித்த விவகாரம் எழுந்தபோது, இதே பதிலைத்தான் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.