petrol bomb condemn - 2026

பெட்ரோல் குண்டுவீச்சு குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து தண்டனை வழங்க கோரிக்கை!

சற்றுமுன் Featured கிரைம் நியூஸ் கோவை தமிழகம்
petrol bomb condemn - 2026

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பில் குற்றவாளிகளை கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ஜான்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

கோவை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் வாகனங்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்து உள்ளன. இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கோவையில் பல இடங்களில் சோதனை சாவடி மற்றும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகின்றன உயர் போலீஸ் அதிகாரிகள் பொது மக்களின் நலன் கருதி உடனடியாக பதற்றம் நிலவிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட வேண்டும்.

இதனை தமிழக அரசு சிறப்பு கவனம் கொண்டு, கோவை மாநகர பொதுமக்களின் பதற்றத்தை தணிக்கவும், பொதுமக்களிடம் அச்சத்தை போக்கவும், கோவை மட்டுமல்லாது தமிழகம் அமைதி பூங்காவாக நிலவிடவும், இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்.

இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டறிந்து தமிழக காவல்துறை இரும்புக் கரம்கொண்டு தடுத்திட வேண்டும்…. என்று அவர் கூறி உள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் வெளியிட்ட அறிக்கையில்…

தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலிபார் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதுபோன்ற வன்முறையைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். இத்தகு சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் கலவரங்களைத் தூண்டிவிடக்கூடிய அபாயம் மிக்கவை.

மக்கள் நீதி மய்யம் பாஜக ரசிகர்கள் அல்லர். ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள். அரசியல் மக்களுக்கானது. வன்முறையால் அதை வெல்ல முற்படுவது மிருக குணம், மிருக குணம் கொண்டோர் எவராயினும் அவர்கள் நாட்டில் திரியவேண்டியவர்கள் அல்ல.

நாங்கள் வன்முறையை கைக்கொள்ளும் எத்தரப்பிற்கும் எதிரானவர்கள். எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாடலாம் என நினைப்பவர்களை மக்கள் நீதி மய்யமும், நானும் வன்மையாக எதிர்க்கிறோம்.

எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறைக் கலாச்சாரத்தை அனுபதிக்க மாட்டோம். அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யும் தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறது. – என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.