500x300 1833376 erodebyelection 1 - 2026

ஈரோடு  இடைத்தேர்தல் தடை கோரிய மனு தள்ளுபடி-உயர் நீதிமன்றம்..

சற்றுமுன்
500x300 1833376 erodebyelection 1 - 2026

 

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன.

ஆனாலும் வாக்களர்களுக்கு பணம் விநியோகிப்பது தொடர்கிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதுமான நடவடிக்கைகளை எடுப்பது இல்லை.ஒவ்வொரு தேர்தலின் போதும், பணம் கொடுத்து வாக்கு வாங்கப்படுகிறது. இதுபோன்ற தவறிழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

எனவே, தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

எனவே தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று  விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.